வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

அவளா இவள் - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் )

 அவளா இவள்  - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் )

---------------------------------


அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் . அதில் இருப்பது போல் தான் இருந்தாள் அவள் அப்போது . அப்போது இருவரும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்கள். அவன் வரைந்த முதல் ஓவியம் அதுதான். ' நான் இப்படியா இருக்கேன் ' என்று அவள் அடம் பிடித்து அழுத ஞாபகம் வருகிறது. அப்போது மறைத்து வைத்த அந்த ஓவியம், பின்னால் அவளோடு சேர்ந்து இருந்த காலத்திலும் அவளுக்குக் காண்பிக்க வில்லை அவன். இப்போது அவள் பிரிந்த பின் தான் எடுத்துப் பார்க்கிறான் இப்போது . அவளா இவள்.


ஆரம்பப் பள்ளிப் பருவத்தோடு, அவள் அப்பாவின் வேலை மாறுதலோடு, அவர்கள் நட்பு அப்போதைக்கு முடிந்தது. ஆனால் அதன் நினைவுகள் பசுமையாக எப்போதும் . இப்போதும் தான். மோசமான நினைவுகளை அவள் விட்டுச் சென்று விட்ட இப்போதும் தான். அந்த ஆரம்பப் பள்ளிப் பருவத்திலே அவர்கள் சேர்ந்து சென்ற ஊருணிப் பூந்தோட்டம். கோயில் பிரகாரப் பேச்சு. மறக்க முடியாது.


மறக்க முடியாததால் தான், அவளை , இளமை பொங்கும் மங்கையாக , ஆரம்பப் பள்ளிப்பருவ நினைவுகளின் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, ஐந்து வருடங்களுக்கு முன்பு , ஒரு ஆங்கில இலக்கிய நிகழ்வில் சந்தித்தபோது , அவளது அறிமுகத்தை , அமைப்பாளர் சொன்னவுடன் புரிந்து கொண்டு, அவளின் ஆங்கிலப் பேச்சைக் கேட்டு அசந்து போய் நின்ற தருணம். சாக்ரடீஸ் முதல் பீத்தோவன் வரை அவள் எடுத்துக் காட்டிய, அலசிய தத்துவ , இசை விளக்கங்கள் அவனை அவளிடம் ஈர்த்தன. அதன் பின் அவளிடம் அறிமுகம் செய்து கொண்ட போது அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சி. அதில் ஏமாந்து போன தருணம் அது.


பிறகு அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். இருவரின் பெற்றோர்களும் மறைந்து விட்ட காரணத்தால், அவர்கள் தனித்தனித் துறைகளில் , பிரபலமாக ஆகிக் கொண்டு இருந்த காரணத்தால், அவர்களைத் தடுப்பதற்கு யாருமில்லை. ஆனால், பின்புறம் பேசுபவர்கள் பலர். அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை ,


அவன் ஓவியத் திறமை பற்றி அவளுக்கு இன்னும் சந்தேகம் தான். அவன் அவளை வரைந்த அந்த முதல் ஓவியத்தால் ஏற்பட்ட சந்தேகம். இன்னும் மாறவில்லை .


ஒரு படத்தைப் பார்த்துக் கேட்டாள்

'இதனால் என்ன சொல்ல வருகிறாய் '

. 'ஏதாவது சொல்லணுமா' என்றான்

' எனக்குப் புரியலையே'

'உனக்குப் புரியணுமோ'


'அப்புறம் எதுக்குப் படம் வரையிறே '

'எனக்குப் புரியுது , வரையிறேன் '.

' யாரும் வாங்க வேண்டாமா'

' பலர் வாங்குகிறார்கள். பாராட்டுகிறார்கள் . உன்னை வாங்கச் சொல்லலையே '


அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை

ஆனால் அவளுக்கு அவனிடம் பிடித்தது இந்தத் திமிர் .


அவனுக்கும் அவளைப் பிடிக்கும்.

அவளது திமிர் வேறு மாதிரி.


'நமது தமிழ்ப் படைப்புகளை படித்ததில்லை' என்று சொல்லிக் கொள்வாள் .

'இசை என்றால் பீத்தோவன்

தத்துவம் என்றால் சாக்ரடீஸ்

ஓவியம் என்றால் பிக்காஸோ

கதை என்றால் ஓட் ஹவுஸ் ' .

என்று அவர்களைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பாள். அவன் கேட்டுக் கொண்டு இருப்பான். அது அவளுக்குப் பிடித்து இருந்தது


ஒரு நாள் அவளிடம் கேட்டான்.

'திருக்குறள் பிடிக்காதா, பி சுசிலா பிடிக்காதா, சித்தன்ன வாசல் பிடிக்காதா, சுஜாதா பிடிக்காதா 'என்று

'பிடிக்காது என்று சொல்லவில்லையே'

'பின் ஏன் அவர்களைப் பற்றிச் சொல்லாமல் அந்த அயல்நாட்டுப் படைப்பாளிகளை மட்டுமே சொல்கிறாய் .அதிகம் படித்திருக்கிறாய் என்று காட்டிக் கொள்ளும் ஆசையா. '

'அப்படி ஒன்றும் இல்லையே'

அந்தத் திமிர் அவனுக்குப் பிடித்திருந்தது.

அவனுக்கு அது பிடிக்கிறது என்பதால் அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது .


அன்று ஒரு நாள் அவர்கள் இணைந்த நேரம். அதில் அவளுக்கு பிக்காஸோவின் புதுமை இருந்தது , பீத்தோவனின் உருக்கம் இருந்தது. சாக்ரடீஸி ன் உணர்வு இருந்தது . ஓட் ஹவுஸின் சிரிப்பு இருந்தது . அவளுக்குப் பிடித்து இருந்தது .


'இவ்வளவு இருக்கிறதா இதில்' என்றாள்

'இன்னும் இருக்கிறது ' என்றான்.

அன்று முதல் அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கினர்.


கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் . அவன் ஓவியத்தின் திறமையால் உலகப் புகழ் பெற்று அவன் ஓவியங்களை வைத்து 'மிலானில் 'நடந்த ஓவியக் கண்காட்சிக்கு அவனுடன் சென்றிருந்தாள்.

அங்கே அவனுடன் நெருங்கிப் பழகுவதில் ஆர்வம் காட்டிய அந்த வெள்ளைக்காரப் பெண்களை அவளுக்குப் பிடிக்கவில்லை.


அவளின் ஆங்கிலப் பேச்சுகளுக்கு கூடிய கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருந்த நேரம். அவளின் உருவத்திலும் , முகத்திலும் கூடுகின்ற வயதின் தளர்ச்சி தெரிய ஆரம்பித்த நேரம். தன் பேச்சை விட, தன்னைப் பார்க்க வந்த கூட்டமே அதிகம் முன்பு என்று அவளுக்குப் புரிய வந்த நேரம். அடிக்கடி அவனுடன் தகராறு .


ஒருமுறை அவன் மேல் அவள் வீசி எறிந்த சில்வர் பிளேட்டின் குறி தப்பியதால் அவன் கண் தப்பித்தது. ஓவியனான அவன் கண்ணை நோக்கி வைத்த குறி தவறி விட்டதே என்று அவள் அலறியபோது தான், அவளின் மனநோயின் தீவிரம் அவனுக்குப் புரிந்தது. இருந்தும் அவளைப் பிரிய அவனுக்கு விருப்பம் இல்லை.


அந்தக் கிராமத்துக் கோயில் பிரகாரத்தில் அவன் கையைப் பிடித்து நடந்து வந்த அந்தப் பெண்ணின் உருவம். விரித்த முடியோடு, விழித்த கண்ணோடு , முழங்கால் வரை மறைத்த ஸ்கர்டோடு அவன் கையைப் பிடித்து நடந்து வந்த அவள் . அவன் ஓவியத் திறமையை, அந்த வயதிலேயே அவனுக்கு உணர வைத்த அந்தப் பெண் அல்லவா அவள் .


நெருங்கிய நண்பர் , நரம்பியல் நிபுணர், டாக்டர் பாஸ்கரனிடம் அழைத்துச் சென்று காண்பித்தும் பயனில்லை. 'சிறிது நாட்கள் பிரிந்து இருக்க முயற்சி செய்யலாம் ' என்றார். மருந்துகளின் மயக்க நிலையில் அவளே ஒரு முறை சொன்னாள் . 'என்னால் உனக்கு எப்போதும் ஆபத்துதான். நாம் பிரிவதே ஒரே வழி' . பிரிந்தார்கள்.


குற்றாலத்தில் அவளின் நெருங்கிய தோழியின் வீட்டில் அடைக்கலம். மறுபடி பேச்சுப் பயிற்சி. இப்போது தமிழில். தேவாரம், திருவாசகம். என்று தமிழ்ப் பக்தி இலக்கியத்தில் பயிற்சி. ஆன்மீகக் கூட்டங்களில் அவளுக்கென்று ஒரு தனி அங்கீகாரம் . தனிக் கூட்டம். தமிழ் நாட்டின் பல கோயில் விழாக்களில் அழைப்பு. பக்தி மயமான வாழ்வில், திருநீற்று நெற்றியோடு அவள் தோற்றத்தைப் பார்ப்பவர்கள் அவள் வரும்போது, எழுந்து நின்று வணங்கினார்கள். அவள் அவனிடம் பேசுவதில்லை. அவர்கள் சந்திக்கவில்லை .


ஒரு நாள் அவளிடம் இருந்து போன் வந்தது

'நான் இப்போது சென்னை வந்திருக்கிறேன் ' .

' ஏதோ பார்க்க வேண்டும் என்று தோன்றியது. முடிந்தால் சந்திக்க வா , முகவரி இது '

'வரமாட்டேன் 'என்று பதில் அளித்தான் .


மற்றும் ஒரு முறை வாட்சப் செய்தி ' நியூ யார்க்கில் , புதிதாகக் கட்டியுள்ள சிவன் கோயிலில் ' திருவாசகம் ' பற்றிய சொற்பொழிவு . தொடர்ந்து ஒரு மாதம் அங்கே தான். பாஸ்டன், சிகாகோ , சான் பிரான்சிஸ்கோ என்று பல இடங்களின் கோயில்கள் . நாளை அமெரிக்கா செல்கிறேன் இன்று பார்க்கலாமா ' . முகவரியுடன் ஒரு புகைப்படம் அனுப்பி இருந்தாள். திருநீற்று நெற்றியோடு அவள் தோற்றம், வாட்சப் செய்தி .


அவன் வரைந்த அவளின் இளம் வயது ஓவியத்தைத்தான் இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறான். அவளா இவள் . ' இது போதும் பெண்ணே எனக்கு . என் திறமையை நீ வெளிக்கொணர்ந்த தருணத்தை எனக்கு நினைவு படுத்தும் இந்த எனது முதல் ஓவியம் ,இது போதும் எனக்கு . '


அவளைப் பார்க்க அவன் போகவில்லை.அன்று இரவு நைட் டின்னருக்கு அழைத்திருந்தாள் அவனது இன்னொரு தோழி .இவளுக்கு இவன் ஓவியம் பிடிக்கும். .


---------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


காத்திருப்பவள் - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் )

 காத்திருப்பவள் - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் ) 

-------------------------------------


வழக்கம் போல் பரபரப்பான காலை நேரம் தான் அவளுக்கு. வீட்டில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கும் பெற்றோருக்கு வேண்டியன செய்து விட்டு , கையில் ஒலி எழுப்பும் செல்லில் அழைக்கும் அலுவலக அதிகாரியின் அவசரத் தொனிக்கு ஏற்றபடி பதில் அளித்து விட்டு, அந்த அவசரத்திற்குத் தான் செய்ய வேண்டிய வேலைகளை மனதில் அசை போட்டபடி கிளம்பிய அவள் தோளில் தொங்கும் லெதர் பேக்கின் சுமை கொஞ்சம் தான். ஒரு சிறிய கண்ணாடி, சின்ன செண்டு பாட்டில், ஸ்டிக்கர் பொட்டு அட்டை , ஒரு சிறிய பர்சில், கொஞ்சம் ரூபாயும், சில நாணயங்களும் இரண்டு வட்ட டிபன் பாக்ஸ் டப்பாக்கள். ஒன்றில் தயிர் சாதம், ஊறுகாய் , மற்றொன்றில் இரண்டு இட்லிகள், மிளகாய்ப் பொடியோடு, ஒரு சிறிய வாட்டர் பாட்டில் .


வாசலில் பூத்துக் குலுங்கித் தொங்கும் கொன்றைப்பூக்களின் மஞ்சள் நிறத்தில் கொஞ்சம் மயங்கி விட்டு தூரத்தில் இருந்து வரும் கோயில் மணி ஓசையின் இசையிலும் கொஞ்சம் தயங்கி விட்டு நடக்க ஆரம்பித்தாள் அவள். அந்தச் செயல்களுக்கு அவளின் மனச் சுமையைக் கொஞ்சம் இறக்கி விடும் சக்தி உண்டு என்பது அவள் உணர்ந்தது .


அவளுக்கு வாழ்த்துக் கூறி வழி அனுப்புவது போல் தன் பூக்களை ஆட்டும் கொன்றை மரம் அவள் கூடவே வளர்ந்த மரம். எதையும் எதிர்பாராமல் அவளுக்குத் துணையாக நிற்கின்ற மரம். அவள் சாதியில் சொந்தங்களுக்கு கிடைக்காத , அவளுக்கு மட்டும் கிடைத்த அந்த மஞ்சள் நிறம் கூட அவை கொடுத்தது தானோ என்ற பிரமை கூட அவளுக்கு சில சமயம் தோன்றுவது உண்டு.


அந்த நிறமும் அவளின் செழிப்பான உடலும் அவளுக்கு ஒரு சுமையோ என்று கூட சில சமயம் தோன்றியது உண்டு. ஏறிச் செல்லும் பேருந்து களிலும், இறங்கி நுழையும் அலுவலகத்திலும், தன் அறிவை விட இந்த அழகுக்குத் தான் அதிக மதிப்போ என்றும் அவள் எண்ணியது உண்டு. அப்போதெல்லாம், அழகில்லாத தன் சொந்தக்காரப் பெண்கள் மேல் அவளுக்கு ஒரு பொறாமை கூட ஏற்படுவது உண்டு .


எவ்வளவு சுதந்திரமாக நினைப்பதைப் பேசிக்கொண்டு, நினைப்பதைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். தான் செல்லும் இடங்களிலும் , பேசும் வார்த்தைகளிலும் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அதில் தெரிகின்ற குறிப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு பழகத் துடிக்கின்ற எத்தனை ஆண்கள். அதைப் பார்த்து பொறாமையில் தெறிக்கும் சில பெண்களின் கண்கள். அதில் தெறிக்கும் நெருப்பு இவளைச் சுடும் உணர்வு . அத்துடன் அவளின் நடுத்தர ஏழ்மையையும் நோயுற்ற பெற்றோரையும் பற்றியும் அறிந்த அலுவலக நண்பர்களின் இரட்டைப் பேச்சுக்களை ஒதுக்கும் நிர்ப்பந்தம்.


இத்தனைக்கும் நடுவில் அவள் மனதில் ஒரு ராஜகுமாரன் இருந்தான். அவன் அந்தக் கொன்றை மரத்தடியில் இரவு நேரத்தில் அவளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பான். அவளைத் தீர்க்கமாகப் பார்த்து , அவளிடம் மென்மையாகப் பேசி அவளைக் கிறங்கடிப்பான். அவள் கையை இறுக்கப் பிடித்து இருப்பான்.


உள்ளிருந்து வரும் அம்மாவின் ' எங்கேடி போய்த் தொலைஞ்சே ' என்ற அம்மாவின் குரலுக்குப் பயந்து அவள் ஓட முயலும்போது, ' மெதுவாகப் போ, தரையில் கிடக்கும் கொன்றைப்பூ காலைக் குத்தி விடாமல் நடந்து போ ' என்று அவளை மெதுவாக அணைத்து விடுவித்து அனுப்பி வைப்பான். அவள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டிருக்கும் அவனாலேதான் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.


ஒவ்வொரு மாலையும் அவள் வேலை முடிந்து வேர்வையின் போர்வையில் விரைந்து வீடு திரும்பும் வேகத்திற்கு காரணமும் அவன்தான். அன்று மாலையும் அப்படித்தான். உள்ளே நுழைந்தவள் என்றும் இல்லாத அதிசயமாய் அவளது அம்மா, அடுப்படியில் தட்டுத் தடுமாறி காபி போட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு விரைந்தவள், ' விடும்மா , நான் பார்க்கிறேன் ' என்று விரைந்தாள் .


' யார் வந்திருக்காங்க தெரியுமா , நம்ம கிராமத்தில் இருந்து . இருபது வருஷமா விட்டுப் போன தொடர்பு திரும்ப வந்திருக்குடி , ஞாபகம் இருக்கா, உனக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகுது . அப்ப உனக்கு அஞ்சு வயசுதான் . அவன்தான் உன்னை முதன்முதலா எலிமெண்டரி ஸ்கூல் கூட்டிப் போனான். . அவன் நாலாவது . நீ ஒண்ணாவது . பக்கத்து வீட்டுப் பரிமளம் , உசந்த சாதியா இருந்தாலும் , நம்ம கிட்ட நெருக்கமா பழகினவ . அவ மகன் . '


ஊரிலே நடந்த சாதிப் பிரச்சினையில் மனம் வெறுத்துப் போயி, டீச்சர் வேலையில் இங்கே ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு உன் அப்பா இங்கே சென்னைக்கு வந்த பிறகும் பரிமளம் புருஷன் மாணிக்கத்தோட மட்டும் அப்பா தொடர்பு வச்சிருந்தார். ஏதோ விஷயமா அவங்க பையன் இப்ப வந்திருக்கான். 'வந்து சொல்லுறேன்னு' சொல்லிட்டு இப்பதான் வெளியே போனான்.


அவன் முகம் மெதுவாக மனதில் மலர ஆரம்பித்தது. ஆம் , பிடித்த கையை விடாமல் பள்ளிக்கு கூட்டிச் செல்வான். ' டேய் வலிக்குதுடா, கையை விடு ' என்றாலும் விட மாட்டான். ' நீ பாட்டுக்கு ஓடுவே, அங்கெ பாரு எத்தனை மாடு திரியுது . முட்டிடும். அது தான் கொஞ்சம் அழுத்திப் பிடுச்சுட்டேன் வலிக்குதா, ' என்றபடி லேசாக கையைத் தடவி விட்டு , மறுபடி அதே போல் பிடித்துக் கூட்டிச் சென்று , அவள் வகுப்பில் சென்று பெஞ்சில் அமரும் வரை விட மாட்டான். இண்டெர்வெல்லில் பள்ளி வாசலுக்கு வரும் சவ்வு மிட்டாய் வாங்கி அவளுக்குப் பாதி கடித்துக் கொடுப்பான். திரும்பும் போதும், அதே விடாத கைப்பிடி.


வாசலுக்குப் போனாள் கோதை. மாதவன் சிரித்த முகத்தோடு , அப்போது கொன்றை மரத்தருகே வந்து கொண்டிருந்தான். கொன்றைப் பூக்கள் சில அவன் மேல் சரிந்து விழுந்தன. அவள் உடம்பு சிலிர்த்தது. அவன் கையில் மல்லிகைப் பூ சரம் உருண்டு தெரிகின்ற பையோடு . அந்தப் பைக்குள் அவனது திருமணப் பத்திரிகை .


-----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பருவ மாற்றம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் )

 பருவ மாற்றம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் ) 

————

எல்லாமே பக்கத்தில்

இருந்ததாய் ஞாபகம்


நிலமும் நீரும்

நெருப்பும் காற்றும்


வண்ணமும் வாசமும்

எண்ணமும் செயலும்


எல்லாம் புதிதாய்

எல்லாம் இன்பமாய்


மண்ணை விட்டு

விண்ணை நோக்கி


கழுத்தும் நீண்டது

காலமும் மாறியது


—— நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English   


கால மாற்றம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் )

 கால மாற்றம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் ) 

----------------------

நேற்றுதான் எல் கே ஜி க்ளாசில்

விட்டு விட்டுத் திரும்பினோம்


இன்று பத்தாவது வகுப்பு

ஆரம்பிக்கும் தினமாம்


அன்று அழுதுகொண்டு

பள்ளி வாசலில் காத்திருந்தவள்


இன்று சிரித்துக்கொண்டு

பள்ளி உள்ளே ஓடுகின்றவள்


அதே குழந்தைகள் தான்

ஆனால் பேச்சுகள் பார்வைகள்


காலத்தின் ஓட்டத்தில்

மாறிப் போனவை


பாதைகள் மாறாதிருந்தால்

பயணங்கள் சுகமே


வளமும் நலமுமாய்

வாய்க்கட்டும் எதிர்காலம்


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English   


பயம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் )

 பயம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் ) 

-----------

அன்பாக இருக்கிறாய்

பயமாக இருக்கிறது


அறிவாக இருக்கிறாய்

பயமாக இருக்கிறது


அடக்கமாய் இருக்கிறாய்

பயமாக இருக்கிறது


அருளாக இருக்கிறாய்

பயமாக இருக்கிறது


அழகாகவும் இருக்கிறாய்

அதிகம் பயமாக இருக்கிறது


-------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


சுவர்களின் கதை - கவிதை ( நன்றி : குவிகம்)

 சுவர்களின் கதை - கவிதை ( நன்றி : குவிகம்) 

-----------------


வரைந்துள்ள படங்களின்

நிறங்கள் அழிந்து போய்

கோடுகள் மட்டும்

சிதறிய நிலையில்


கோட்டின் பின்னிருக்கும்

வாழ்க்கை ஓவியம்

சுமந்து கொண்டிருக்கும்

சுவருக்குத் தெரியும்


 நண்டுகள் பொந்துக்குள்

ஒளியாத காலம்

நாய்களும் வீதியில்

நடமாடிய காலம்


 இதோ துணையாய் நிற்கும் 

இந்தக் குட்டிச் சுவருக்கு

பள்ளிக் கூடம் என்ற

பெயர் இருந்த காலம்


வீதிகள் இருந்தன

விளையாட்டு இருந்தது

வீடுகள் இருந்தன

மனிதர்கள் இருந்தார்கள்


அவர்கள் இருந்ததால்

வாழ்க்கை இருந்தது

பகலும் இருந்தது

இரவும் இருந்தது


 இரைச்சல் இருந்தது

அமைதி இருந்தது

இன்பம் இருந்தது

துன்பமும் இருந்தது


 துடைத்தால் போகும்

துன்பம் அது

அணைத்தால் போகும்

கண்ணீர் அது


 அப்போது தான்

அந்தச் சுவரும்

வீடாக இருந்தது

அவளும் இருந்தாள்


 அவளின் பயிற்சிக்கு

கிடைத்த சுவரும்

அப்போது இருந்தது

வீட்டுக்கு உள்ளே


இயற்கைப் படங்களும்

வாழ்க்கைப் படங்களும்

அவளின் கையால்

உயிரோடு அங்கே


 குலைந்த படத்திலும்

கோடுகள் இங்கே

வரைந்தவள் மூச்சு

போனது எங்கே


 அவளும் போனாள்

அவர்களும் போனார்கள்

போனது போனது தான்

திரும்பாது காலம்


 


பொசுங்கிய இயற்கை  

புதிய ஜென்மமாக

நசுங்கிய உயிர் எல்லாம்

பழைய நினைவாக 


 குட்டிச் சுவர்களில்

ஒளிந்து கொண்டு

கொஞ்சம் கொஞ்சமாய்

உதிர்ந்து கொண்டு


 இந்தச்  சுவர்களின்

கதைக்குப் பின்னாலே

கொடூரம் உண்டு

குண்டும் உண்டு

 

-------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


திங்கள், 10 பிப்ரவரி, 2025

நீ வந்த போது - கவிதை

 நீ வந்த போது - கவிதை 

------------------------

மேகப் பொதியில் ஒன்று

மெத்தென மோதியது போல்


தூறல் மழைச் சாரல்

தொட்டுத் தடவியது போல்


தெக்குத் தென்றல் என்னைத்

தேடி வந்தது போல்


முல்லைப் பூவின் வாசம்

மூச்சில் நிறைந்தது போல்


பக்கம் நீ வந்து மெல்ல

பட்டு அமர்ந்த போது


-----------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English   


கோலம் - கவிதை

 கோலம் - கவிதை 

———

அவள் போட்ட

கோலத்தின் நடுவே

பூசணிப்பூ வைக்கும்

பொறுப்பு அவனது


அந்த ஊருணித் தோட்டத்தில்

பூத்த பூவெல்லாம்

காயாகிப் பழுத்த

காலமும் ஆனது


அவன் கனவுத் தோட்டத்தில்

பூத்த பூவெல்லாம்

சருகாய் ஆனது

கோலமும் போனது


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


ஏதோ - கவிதை

 ஏதோ - கவிதை 

——

ஏதோ ஒரு வித்து

விழுந்தது எழுந்தது


ஏதோ சில பேர்

வளர்த்தது வாழ்ந்தது


ஏதோ ஒரு சம்பவம்

மாற்றியது ஏற்றியது


ஏதோ ஒரு திருப்பம்

சறுக்கியது இறக்கியது


ஏதோ ஒரு வாழ்க்கை

நடந்தது முடிந்தது


ஏதோ ஒரு இடத்தில்

எரித்ததோ புதைத்ததோ


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


ஒரே கேள்வி - கவிதை

ஒரே கேள்வி - கவிதை 

——

‘நா யாரு ’

கேட்டவள் அம்மா


நினைவை இழுக்கும்

முயற்சியில் குழந்தை


வளர்ந்தது குழந்தை

தேய்ந்தது தாய்மை


‘ நா யாரு ’

கேட்பவள் குழந்தை


நினைவை இழந்த

தளர்ச்சியில் அம்மா


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


ஒரு கப் காப்பி - சிறுகதை

 ஒரு கப் காப்பி - சிறுகதை  --------------------------- ' கோமளம் , ஒரு கப் காப்பி கிடைக்குமா .'' கேட்டு அரை மணி நேரம் ஆச்சும்மா ...