திங்கள், 28 செப்டம்பர், 2009

காலக் கோலங்கள்

காலக் கோலங்கள்
----------------------------
மாறி வரும் காலங்கள்
போடுகின்ற கோலங்கள்
நூலாக இறங்கிப் பின்
பந்தாகத் தாக்கும் மழை
காலையிலும் வேர்க்க வைத்து
மாலை வரை சுடும் சூரியன்
தூக்கத்தை நீட்டி விட்டு
போர்வைக்குள் இறங்கும் குளிர்
கோடை, மழை, குளிர் என்று
கூட்டி விடும் வயதொன்று
-----------------------------------நாகேந்திர பாரதி
---------------------------------------------------------

சனி, 19 செப்டம்பர், 2009

நெருப்பு

நெருப்பு

--------------

காட்டை எரிக்கும்போது கங்கு

மனத்தை அரிக்கும்போது காதல்

வயிற்றை வாட்டும்போது பசி

நெஞ்சில் மூட்டம் போட்டால் வஞ்சம்

வார்த்தை சுடும்போது கோபம்

பயத்தை ஊதி விட்டால் கவலை

நெருப்பில் நீரை விட்டால் போதும்

நினைப்பை அடங்கவிட்டால் ஆகும்

-----------------------------------------------நாகேந்திர பாரதி

-------------------------------------------------------------------

ஒத்தையடிப் பாதை

ஒத்தையடிப் பாதை

----------------------

அந்த இடத்தில் அதே

ஒத்தையடிப் பாதை

ஆனால் உருவாக்கிய

கால்களும் தடங்களும் வேறு

கோணல் மாணல்கள்

சற்று வித்தியாசமாய்

சுற்றுச் செடி கொடிகளும்

வேறு விதமாய்

சுமைகளும் வண்டித் தடங்களும்

அதே சோக அழுத்தத்தோடு

------------------------------------------நாகேந்திர பாரதி

------------------------------------------------------------------

புதன், 2 செப்டம்பர், 2009

கர்ப்பக் கிரகம்

கர்ப்பக் கிரகம்

----------------

கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள்

மறுபடி கருவறை வாசம்

நெய் மணத்தோடு

தீப ஒளியோடு

மணி ஓசையோடு

பக்திப் பரவசத்தோடு

இறை தரிசனத்தோடு

மோனத் தவமிருந்து

திரும்பி வரும்போது

மறுபடியும் பிறப்பு

----------------------------நாகேந்திர பாரதி