சைக்கிள் பேசினால் - குவிகம் கவியரங்கக் கவிதை
------------
பாராட்டி
மகிழ்வதற்குப்
பரிசொன்று
உண்டென்றால் - அதை
வாங்குகின்ற
தகுதி என்றும்
வவேசு
ஆசானுக்கே
நாங்கள் பேசியதும் எழுதியதும்
பிரம்மாண்டம்
ஆக்கி விட்டு
நாங்களா
பேசினோம் என்று
பிரமிக்க
வைத்துவிட்டு
பாராட்டில்
மூழ்க வைக்கும்
பண்புக்குத்
தலைவர் அவர்.
இந்தக்
கவியரங்கின் தலைவர்
அவர்
அந்த
ஆசானை வணங்கி விட்டு ,
அனைவரையும்
வாழ்த்தி விட்டு
என் சைக்கிளின்
ஆதங்கம்
தொடங்குகிறேன்.
----
இப்போது
என் சைக்கிள் பேசுகிறது , என்னைப் பார்த்து
----------------
அடேய்
பையா
அரை
ட்ரவுசர் பையா
என்னடா
முறைக்கிறாய்
சூட்டும்
கோட்டும் போட்டு
காரும்
பிளைட்டுமாக
உன்
காலம் மாறினாலும்
எனக்கு
என்றும் நீ
அரை
ட்ரவுசர் பையன்தான்
உனக்கு
என்றும் நான்
ஓட்டை
சைக்கிள் தான்
பத்து
பைசா வாடகைக்கு
ஒரு
மணி நேரம் எடுத்து
இந்த
ஓட்டை சைக்கிளேறி
ஓடின
ஓட்டமெல்லாம்
உள்ளே
இருக்குதாடா
செயின்
கழன்றதுவும்
விழுந்து
எழுந்ததுவும்
மாட்டும்
முயற்சியிலே
கையெல்லாம்
கருப்பாகி
கண்ராவி
ஆனதுவும்
வீட்டில்
திட்டு வாங்கி
விளையாட்டு
நின்றதுவும்
திரும்ப
ஆரம்பிக்கக்
காசு
திருடியதும்
உள்ளத்தின்
உள்ளே பார்
குற்றப்
பக்கங்களில்
கொஞ்சம்
அதுவும்தான்
ஏற்றிவிட்டு
தள்ளி விட்டு
பிடித்தபடி ஓடிவந்து
தெரியாமல்
கையை விட்டு
நீ தெளிவாக ஓட்டுவதை
பார்த்து
ரசித்தானே
பழைய
நண்பன் அவன்
பின்னாளில்
ஒருநாளில்
கிராமம் திரும்பிவந்து
அவனைத்
தேடிப் போய்
அவலச்
செய்தி கேட்டு
அழுது
புலம்பினாயே
மறந்தா
போயிருப்பாய்
என்னை
மறந்தாலும்
அவனை
மறக்க மாட்டாய்
உன்
அன்பு உள்ளத்தை
அறிந்ததால்
சொல்லுகிறேன்
ஓட்டை
சைக்கிள் போய்
ஒழுங்கான
சைக்கிளாய்
என்னையும்
வாங்கினாய்
வேலைக்குப்
போவதற்கு
வெண்ணாற்றுப்
பாலம் மேல்
நீ
விரைந்த வேகத்திற்கு
துணையாய்
இருந்தவன் நான்
துள்ளி
உருண்டவன் நான்.
துண்டால்
துடைத்து விட்டும்
தூய்மை
ஆயில் போட்டும்
பார்த்துப்
பார்த்து என்னைப்
பராமரித்த
காலம் அது
உன்னை
மறப்பேனா
உன்
பாசம் மறப்பேனா
அத்தோடு
நின்றதுவா
உன்
அன்பின் ஆழம்
ஊற்று
நீராகப்
பொங்கியதே
பின்னாலே
உந்தன் மகளுக்கும்
பின்னாளில் பள்ளி
செல்ல
எந்தன்
மகளொருத்தியை
ஏந்திச்
சென்றாயே
இருவருக்கும்
நோகாமல்
சைக்கிள்
பழக்கி விட்டு
பள்ளி
செல்லும் அழகை
பார்த்து
ரசித்திருந்தாய்
அன்பின்
வரலாறு
அத்தோடு
முடிந்ததென்று
அழுது
காத்திருந்தேன்
காத்திருப்பு
வீணில்லை
கனவு
பலித்தது
குறிஞ்சி
பூத்தது
குளிர்ந்தது
உள்ளம்
உனக்கும்
பேத்தி பிறந்தாள்
எனக்கும் பேத்தி
வந்தாள்
பிறகென்ன
இருவரின்
விளையாட்டு
உன்
வீட்டு மொட்டை மாடியில்
உன்
துணையோடுதான்
சக்கரங்கள்
இருப்பதால்
ஓடுவதை
உணர்ந்தவன் நான்
ஆம்,
காலம் ஓடியது
ஒவ்வொரு
காலத்திலும் வீட்டின்
ஓரத்தில்
ஒதுங்கிய நாங்கள்
ஒருநாள்
காணாமலும் போனோம்
.
ஸ்கூட்டர்,
கார் என்று உன்
வாகனங்கள் மாறின
.
வாழ்க்கை மாறியது
வசதியும்
மாறியது
வேக
வாழ்க்கையில் இருந்து
ஒருநாள்
உனக்கு
விடுதலையும்
வந்தது
இப்போது
நீயும்
கனவு உலகத்தில்
நானும்
கனவு உலகத்தில்
எனக்கு
என்றும் நீ
அரை
ட்ரவுசர் பையன் தான்
உனக்கு
என்றும் நான்
ஓட்டை
சைக்கிள் தான்
நாம்
மட்டுமா அங்கே
அதோ
உன்னை
ஏற்றி விட்டு
என்னைத்
தள்ளி விட்ட
அவனும்தான்
வா வா
குவிகம்
வாய்ப்பளித்த
இந்தக்
கவியரங்கக் கனவுலகில்
கண்மாய்க்
கரையோரம்
பழைய
மண் ரோட்டில்
பழகிப்
பார்த்திடுவோம்
அந்தப்
பழைய வாழ்க்கையை
------
நன்றி
வணக்கம் நாகேந்திர பாரதி
---------------
My Poems/Stories/Articles in Tamil and English