திங்கள், 31 ஆகஸ்ட், 2026

திறந்த கதவுகள் -குறுங்கதை

 திறந்த கதவுகள் -குறுங்கதை 

----------

பாழடைந்த அந்தக் கோயிலின் மரக்கதவுகள் கிரீச் சப்தத்துடன் திறக்கப் படுவதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல் தனது தீர்க்கமான கண்களால் உற்றுப் பார்த்தார் விநாயகர். வருவது அவன்தான். நடுங்கும் உடலோடு உள்ளே நுழைந்த அவனால் அவரின் பார்வையைத் தாங்க முடியவில்லை. அவர் நெற்றியில் காய்ந்து கிடந்த அந்த குங்குமக் கோலங்கள் அவன் நினைவைப் பின்னோக்கித் தள்ளின.


'இந்த விநாயகர் சாட்சி. நான் வருவேன் திரும்பி . இதோ இவர் நெற்றிமேல் நான் அப்பும் இந்தக் குங்குமக் குழம்பை குழைத்து எடுத்து உன் நெற்றியில் பூசும் இந்த நிமிடத்தின் மேல் சத்தியம் . ' என்று சொன்ன வார்த்தைகள் அந்த விநாயகர் சிலையின் பின்புறம் சிதைந்த சிவப்புச் சுவற்றில் இருந்து எழும்பி வந்து அவன் மேல் தாக்கின.


இவனுக்காவே காத்திருந்த அந்த இருபது வருடச் சுவற்றின் எதிரொலி. அது காற்றில் எழும்பிப் பறந்து கோயில் வாசல் தாண்டி விரைந்து சென்று, அந்தக் கிராமத்தின் குடிசைக் கதவு ஒன்றைத் திறந்து, பாயில் படுத்திருக்கும் அவள் மேல் பட்டது . அவளுக்குக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் கரைந்து உறைந்திருந்த குரல் அல்லவா. அது அவளை உசுப்பி விட ஓடி வரும் அவள் திறந்திருந்த கோயில் கதவருகே வந்து நிற்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்கிறான் அவன்.


அவர்கள் பேசவில்லை. அவன் அழுதான். அது போதும் . காரணங்கள் அவளுக்குத் தேவை இல்லை. காதலுக்குக் காத்திருக்கத் தெரியும். அது காலத்திற்கும் தெரியும் . விநாயகர் , அவர்களைச் சேர்த்து வைத்த திருப்தியில் மெலிதாகப் புன்னகைத்தார். இனி கதவுகள் திறந்தே இருக்கும்.


--------------நாகேந்திர பாரதி ‎


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திறந்த கதவுகள் -குறுங்கதை

 திறந்த கதவுகள் -குறுங்கதை  ---------- பாழடைந்த அந்தக் கோயிலின் மரக்கதவுகள் கிரீச் சப்தத்துடன் திறக்கப் படுவதை எதிர்பார்த்துக் காத்திருந்தது...