வண்ணமே வாழ்க்கை -நன்றி தீபாவளி மலர் 2025 (விருட்சம், குவிகம்,பூபாளம் )
--------------------------------
வாழ்க்கையின் ஆரம்பம்
வண்ணத்தில் தானே
குடித்த பாலின்
வெண்மை நிறத்தோடும்
குப்புறக் கிடந்த
மண்ணின் நிறத்தோடும்
மல்லாக்கப் பார்த்த
ஆகாய நீலத்தோடும்
பச்சையாய்ப் பார்த்த
செடியோடும் கொடியோடும்
சிவப்பாய் மஞ்சளாய்ச்
சிரித்த பூக்களோடும்
எத்தனை வண்ணங்கள்
இயற்கையால் அறிமுகம்
காலத்தின் வேகத்தில்
செயற்கையில் சிக்கி
செய்கையில் முங்கி
மறந்த வண்ணங்கள்
இன்னும் அங்கேதான்
மண்ணிலும் விண்ணிலும்
பார்க்கத் தொடங்கினால்
பிறக்கலாம் மீண்டும்
இளமையாய் , இனிமையாய்
இன்பமாய் எல்லாமாய்
-------------------------நாகேந்திர பாரதி