புதன், 18 டிசம்பர், 2024

சிறுகதை மதிப்புரை - கட்டுரை

 

சிறுகதை மதிப்புரை - கட்டுரை 

-------------

அழகியசிங்கரின்  கதை புதிது நிகழ்வில் நண்பர் கவிஞர் தங்கேஸ் அவர்களின் ' மரகதப் புறா'  சிறுகதை பற்றி நான் பேசிய மதிப்புரை 

--------------------------


நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே. நண்பர் கவிஞர் தங்கேஸ் அவர்களின் ' மரகதப் புறா'  சிறுகதை . தங்கேஸ் அவர்கள் கவிஞர், ஆசிரியர் என்பது கதையைப் படித்தவுடன் அவரைத் தெரியாதவர்களுக்கும் படித்தவுடன் புரிந்து விடும். அவ்வளவு மென்மையான கவிநயமும். மாணவர்களின்  மனநயமும் வெளிப்படும் கதை. 


தலைமை ஆசிரியர் ஒரு மரகதப் புறாவை ரசிக்கும் வர்ணனைகளோடு கதை ஆரம்பிக்கிறது . இப்படி .

தோடுடைய செவியன்கள் போல காலையிலேயே பள்ளிச்சுற்றுச் சுவரின் மீது கூட்டமாக வந்து அமர்ந்திருந்தன கொண்டை வளர்த்தான் குருவிகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது தயிர்ப் பானையின் உள் பக்கத்தை வெளியே இழுத்து கவிழ்த்தி வைத்தது போல வெள்ளை வெளேர் என்று தொப்பையும் தொந்தியுமாக அமர்ந்திருந்தன. தலையுச்சியில் முளைத்திருந்த அழகு கருங்கொண்டையை அவைகள் இடமும் வலமும் ஆட்டியபடியே அபிநயிக்கும் போது கண்களுக்கு மிகச் செல்லங்களாக மாறி காட்சி தந்தன. உச்சிக் கருங் கொண்டையைப் பார்த்தால் பிளவுபட்ட அலகு போல் விரிந்திருக்கும்..

சாதாரணமாகப் பார்த்தால் குருவி வாயைத் திறந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத்தான் தெரியும். சற்று கூர்ந்து கவனித்தால் தான் அது அலகு அல்ல அதன் ஸ்பெசல் கொண்டை என்று கண்டுபிடிக்க முடியும். கழுத்துக்கும் கீழே பக்கவாட்டில் புசுபுசுவென்று வளர்ந்திருக்கும் தாடைமுடிகளுக்கருகில் காதோரம் ஒரு முழு ரூபாய் நாணயத்தை மதுரை மீனாட்சி குங்குமத்தில் குழைத்து பொட்டிட்டது போல அப்பியிருக்கும் அடர் குங்குமச் சிவப்பு. அதற்கு பவளத் தோடு மாட்டி விட்டது போல அப்படி பாந்தமாக பொருந்திப்போனது. நாளெல்லாம் குழந்தையை வேடிக்கை பார்ப்பதைப்போல இந்தக் குருவிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாமே என்று தோன்றிய போது பள்ளியின் முதல் மணி ஒலித்தது.'


ஒரு பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரின் பார்வையில் கவி நயத்தோடு ஆரம்பிக்கிறது  கதை. தொடரும் கதையில் ஒரு சிறுவனின் சேட்டைகள் பற்றிய விபரங்கள். பீடி, சிகரெட்டு, மது பாட்டில், குடும்பக் கட்டுப்பாடு சாதனம், சிறுமிகளிடம் சில்மிஷம், ரவுடி உறவினர்களின் மிரட்டல் என்று பல்வேறு ஆசிரியர்கள் அந்தத் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்யும் விபரங்கள், இவரே பார்க்கும் விஷயங்கள் என்று தொடரும் போது இந்தக் காலத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் எப்படி எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்ற நினைப்பு நம் மனத்தைக் கலவரப்படுத்துகிறது . அந்தச் சேட்டைப் பையன் ' சசி ' எல்லாவற்றிற்கும் சமாதானமாகச் சொல்லும் காரணங்கள்  ஒரு பக்கம் சிரிப்பை வரவழைத்தாலும் மற்றொரு புறம் அது போன்ற பசங்களின் சீரழிவை நினைத்து வருத்தத்தையும் வரவழைக்கிறது . 


இடை இடையே வரும் இயற்கை வருணனைகள் நம்மைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகின்றன. அவற்றில் சில. அந்தப் பள்ளிக்கூடத்தின் பக்கத்தில் கிடைக்கும் காட்சிகள் . 


காலை வெய்யில் தூவானம் ஏரியில் பச்சைப் பட்டுத்துகிலை உதறி விரித்தது போல படர்ந்து பரந்து கொண்டிருந்தது. தூரத்தில் காலை சூரிய வெளிச்சத்தில் இரைச்சல் பாறைக்கருகில் வெள்ளி அலைகள் கெண்டை மீன்களைப் போலத் துள்ளி விளையாடி கொண்டிருந்தன. கம்பன் சொன்ன “அலகிலா விளையாட்டு ”இது தான் போலும்.

தூவானம் போகிற புதர் மேட்டில் ஓரு யானை குடும்பம், தம்பதி சம்மேதரராய் இரண்டு குட்டிகளுடன் ஈத்தை குருத்தை ஒடித்து ஒடித்து தின்று கொண்டிருப்பதை இங்கிருந்தே மாணவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை விரட்டுகிற பாவனையில் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அவர்களின் அருகில் சென்று தாங்களும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.


இப்போது ஒரு பையன் வந்து அந்தச் சேட்டைப் பையன் 'சசி' யின் பையில் இருக்கும் 'மரகதப் புறா' குஞ்சு ஒன்றைக்  கொண்டுவந்து இந்த தலைமை ஆசிரியரிடமும். ஆசிரியர்களிடம்  காண்பிக்கிறான்.


மருது பைக்குள் கையை விட்டு இழுக்க அந்த பச்சை உயிரி அவன் கையோடு வந்தது.

மரகத வண்ணச் சிறகுகள். செஞ்சாந்து கழுத்து. அதில் கோதுமை மாவை துவி விட்டது போல ஒரு ஆங்காங்கே ஒரு மினு மினுப்பு. அடியில் சிவந்து நுனியில் வெளுத்து சற்று மஞ்சள் பூசிய மிளகாய்ப்பழ அலகு.குறு குறுவென்று பார்க்கும் நீலமணிக்கண்கள்,

மரகதச் சிறகுகளுக்கும் கீழே சிப்பிக் காளான் நிறத்தில் அடுக்கடுக்கான கீழடுக்கு சிறகுகள். அதே வண்ணத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் நீண்ட வால். கழுத்துக்கும் கீழே ஊதாப்பூவின் மீது இலேசாக செந்துருக்கம் பூசியது போல மினு மினுக்கும் தாடை . செல்லமாகக் குலுங்கும் தொப்பை வயிறு .

.

அது சாரின் உள்ளங்கைகளில் பயந்து போய் நடுங்கிக் கொண்டேயிருந்தது பார்ப்பதற்கு அழுவது போல இருந்தது

“ அழுகுது சார் ”

“ காட்டுக்குள்ள திரியுறத இப்படி பைக்குள்ள போட்டு பூட்டி வச்சா, அழுகாம என்னடா செய்யும். ஃபாரஸ்ட்காரங்க பார்த்தாங்கன்னா பதினஞ்சு வருசம் உள்ள புடிச்சுப் போட்ருவாங்க ”

“சார் இத வித்தா நல்லா காசு கிடைக்கும்”

“இப்ப என்ன கிடைக்குதுன்னு பார்ப்போம். கூப்பிடுறா இதை புடிச்சிட்டு வந்தவனை” என்றார் பி.டி சார்.

துரத்தில் வரும் போதே சசிக்கு விசயம் தெரிந்து விட்டது.

முகத்தை ஒரு மாதிரி அப்பாவியாக வைத்துக் கொண்டு தயங்கி தயங்கி பக்கத்தில் வந்து நின்றான்.

“எங்கடா புடிச்ச இத ?”

“சார் வரும் போது தேயிலைக்காட்டுக்குள்ள நொண்டிகிட்டு கிடந்தது அதுதான் மருந்து போடலாம்னு எடுத்துட்டு வந்தேன்” என்றான்

அப்புறம் ஏண்டா எங்ககிட்ட சொல்லலை ?

“சார் பர்ஸ்ட் பீரியட் ஆரம்பிச்சது. அப்படியே படிக்கிற ஆர்வத்துல எல்லாம் மறந்துட்டேன் ”

“ ஓஹோ அப்பிடியா சார் நான் சொல்லலை பய நல்ல படிப்பாளின்னு”

“சரி ,இதை என்ன செய்யப்போற ?”

“சார், வளர்ப்பேன் சார்”

“சரி, எவ்வளவுக்கு விப்ப ?” என்றார் மிகவும் எதேச்சையாக கேட்பது போல.

“மரகதப்புறாவுக்கு நல்ல விலை கிடைக்கும் சார் ” வாய் தவறி சொல்லி விட்டு நாக்கை கடித்துக்கொண்டான்  'சசி' .


தன் தவறு அனைவர்க்கும் தெரிந்து விட்டது என்று பதட்டத்தில் அந்தப் பையன் நிற்கும் போது தலைமை ஆசிரியர் என்ன செய்யப் போகிறார் என்று நம்மையும் எதிர்பார்த்துக் காக்க வைக்கிறார் ஆசிரியர்.


தலைமை ஆசிரியர் யோவான் சொல்கிறார். 


 

“ இந்தாடா” என்றபடி அந்தக் கிளிப்பச்சையை நான் அவன் கையில் கொடுத்தேன்.

அதை எதிர்பார்க்கவேயில்லை அவன் . வாங்கும் போது அவன் கைகள் இலேசாக நடுங்கினதை உணர்ந்தேன். அவன் கைகளுக்குள் சென்றதும் அது இலகுவாகத் தன்னை அங்கே அமர்த்திக் கொண்டது. சிறிது நேர அமைதி தாங்கொண்ணாததாக இருந்தது.

“வாங்க எல்லோரும் போகலாம் அவன் அதை என்ன செய்யணுமோ செஞ்சிகிறட்டும்” என்றேன் நான்.

அவன் எதுவுமே பேசாமல் அந்தப் பறவையை கைகளில் வைத்து பார்த்தபடியே இருந்தான். நாங்கள் ஒரு எட்டு கூட வைத்திருக்கவில்லை. அதற்குள் என்ன நினைத்தானோ மெல்லப் படிக்கட்டுகளின் வழியாக இறங்கி விளையாட்டு மைதானத்திற்குள் சென்றான்.

எதிர்பாராத ஒரு கணத்தில் வலது கையை மேலே உயர்த்தி கீழே இறக்கி அதை வேகமாக தலைக்கு மேலாக உயர்த்தினான். அந்தப்பறவைக்கு முதலில் இந்த திடீர் சீர்குலைவைப் புரிந்து கொள்ள முடியவில்லை . பதட்டத்தில் தன் பிடிமானத்திற்காக அவனது உள்ளங்கைகளை தன் கொக்கிக் கால்களால் நன்றாக அழுத்தியபடியே விழுந்து விடாமல் இருக்க படபடவென்று அவன் உள்ளங்கைக்குள்ளேயே சிறகடித்தபடியே இருந்தது.

இப்போது மாணவர்கள் அவர்களை அறியாமலேயே ஹோவென்று பெருங்குரலெடுத்து கூச்சலிட்டபடி கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவன் இரண்டாவது முறையும் அது போலவே செய்த போது காற்றில் தத்தித் தத்தி சிறகடிக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் கூட பறந்திருக்காது .அதற்குள் காம்பவுண்ட் சுவருக்கருகில் நின்ற சிறிய கொய்யா மரத்தடியின் மடியில் பொத்தென்று விழுந்தது. மாணவர்கள் மறுபடியும் ஹோவென்று பெருங்குரல் எழுப்பினார்கள். அதற்குள் அது எழுந்து மெல்லச் சிறகடித்து சற்று தொய்வாகப் பறந்து பின்னர் சட்டென்று விரைவாகி சவுக்கு மரங்களின் ஊடாகப் பறந்து பறந்து ஒரு பச்சைப்புள்ளியாக தூவானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

சசி எதுவுமே பேசாமல் வெறும் உள்ளங்கையை ஏந்திய நிலையிலேயே அப்படியே அசைவற்று நின்று கொண்டிருந்தான். மாலை நேரப் பொன் மஞ்சள், புற்களின் மீது பட்டு எதிரொலித்துக்கொண்டிருந்தது.. ஒரு கணம் அவன் நெற்றியிலும் அந்த இளம் பச்சை வெய்யில் படர்ந்து போனது.


என்று முடிகிறது கதை . 


கவித்துவ மனம் கொண்ட இளகிய மனம் கொண்ட அந்த தலைமை ஆசிரியரின் செயல், அந்த சேட்டைப் பையனின் மனதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கி இருப்பதை நாமும் உணர்ந்து கொள்ள முடிகிறது . 


அந்தத் தலைமை ஆசிரியர் பள்ளிக்குழந்தைகளுக்கு மட்டும் பாடம் நடத்தவில்லை.படிக்கும் நமக்கும் பாடம் நடத்துகிறார். மன்னிப்பாலும் அன்பாலும்  முடியாதது எதுவும் இல்லை என்பதை சேட்டைப் பையன் சசி திருந்தும் முடிவில் காண்பித்து நண்பர் கவிஞர், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்  தங்கேஸ் அவர்கள்,  கவித்துவம்  மிக்க   ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பதை நமக்கு உணர்த்துகிறார். அவருக்கு வாழ்த்துகள். நன்றி 


--------------நாகேந்திர பாரதி 

  

My Poems/Stories in Tamil and English 


புகைப்படம் - கவிதை

 புகைப்படம் - கவிதை 

--------------- 

வீட்டுக்கு வெள்ளையடிக்கக்

கழற்றியதும் தெரிந்தது


மாலையோடு மாட்டியிருந்த

புகைப்படத்தில் தூசி


சிந்திய கண்ணீரைச்

சேர்த்துத் துடைக்கையிலே


தண்ணீர் தேவையில்லை

துண்டை ஈரமாக்க


தூசி தொலைந்தது

சிரித்தபடி அப்பா

------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English are available at  


நம்பிக்கை - கவிதை

 நம்பிக்கை - கவிதை 

————


கோயில் கிடையாது

கோபுரம் கிடையாது


உண்டியல் கிடையாது

ஊரும் கிடையாது


ஒதுக்குப் புறத்திலே

ஒத்தை வேப்பமரம்


குத்திவச்ச வேல் கம்பு

குதிரையிலே முனுசாமி


கும்பிட்டுப் போனாலே

கூடுறதாம் நெனைச்சதெல்லாம்


பத்துத் தலைமுறையாய்ப்

பத்து ஊரு சனத்திற்கும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நிழலும் நிஜமும் - கவிதை

 நிழலும் நிஜமும் - கவிதை 

———

நிழல்கள் 

சில சமயம் 

முன்னால் போகின்றன 

சில சமயம் 

பின்னால் வருகின்றன 

சில சமயம் 

பதுங்கிக் கொள்கின்றன 

நிஜங்களும் கூட 

அப்படித்தானோ

எல்லாம் 

நேரத்தைப் பொறுத்தது 

———-நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


சிறுகதை மதிப்புரை - கட்டுரை

  சிறுகதை மதிப்புரை - கட்டுரை  ------------- அழகியசிங்கரின்  கதை புதிது நிகழ்வில் நண்பர் கவிஞர் தங்கேஸ் அவர்களின் ' மரகதப் புறா'  சி...