திங்கள், 30 நவம்பர், 2020

விளையாட்டு முகங்கள் - கவிதை

 விளையாட்டு முகங்கள் - கவிதை 

------------------------------------------------------

நமது புறங்களில் 

அகங்களின் முகங்கள் 


அவையும் 

முலாம் பூசிய முகங்கள் 


அடுத்தவரின் 

அனுமானத் தவறுகளில் 


சில நேரங்களில் 

அவர்களின் கர்வங்கள் 


பல நேரங்களில் 

கர்வ பங்கங்கள் 

----------------------------நாகேந்திர  பாரதி 

My E-books in Tamil and English

புதன், 25 நவம்பர், 2020

யுகப் புரட்சி - கவியரங்கக் கவிதை

யுகப் புரட்சி -  கவியரங்கக் கவிதை 

-----------------------------------------------------------------

கெட்டவர்க ளாயிருப்போம், கேடு செய்வோம்  

     கீழ்ஜாதி என்று பேசி கிழித்திடுவோம் 

பட்ட மரம், பதியிழந்தாள், விதவை  என்போம் 

      பதினாறை  அறுபதிற்கு பரிசளிப்போம்  

குட்டிடுவோம் குனிபவரை, குரங்கைப் போல 

       கூரை  விட்டு  கூரை  தாவி குதித்திடுவோம் 

எட்டாகச் செய்திடுவோம்,  ஏழைச்  சைபர் 

       எம்மிடத்தில் அகப்பட்டால் பிழிந்திடுவோம்  

ஏன் வேண்டும் யுகப் புரட்சி,  இந்த  மண்ணில்  

       என்னப்பா  குறைச்சல் இப்போ புரட்சி பூக்க 


பெண்களென்றால்  தெய்வமென்போம், பெற்ற நெஞ்சம் 

       பேதலிக்கக் கேட்டிடுவோம் சீத னங்கள் 

வண்ண மயில் பெண்ணரசி வாலிபத்தை 

       சீதனமாய் எண்ண  மாட்டோம், வட்ட நிலா  

புன்னகைக்கும் பூமுகத்தை, புதிய வண்டை , 

         பூத்த மலர்க் கூட்டத்தை, புன்சிரிப்பை ,

கன்னத்தில் விழுகின்ற குழியை,  அந்த 

         காவியத்தை  விட்டு, சீரைக்  கேட்கின்றோம் 

ஏன்  வேண்டும் யுகப் புரட்சி இந்த மண்ணில் 

          என்னப்பா குறைச்சலிப்போ புரட்சி  பூக்க  

-----------------நாகேந்திர  பாரதி   

(1971 இல் கவிஞர் மீரா அவர்கள் முன்னிலையில் சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் நினைவுக் கல்லூரிக் கவியரங்கில் வாசித்த  கவிதையின் ஒரு பகுதி . அது ஒரு காலம் )

My E-books in Tamil and English

செவ்வாய், 24 நவம்பர், 2020

புதுமைப் பித்தனின் ' சிறுகதை - மதிப்புரை

 

புதுமைப்  பித்தனின் ' சிறுகதை -  மதிப்புரை

 நவீன விருட்சம்  நிகழ்வு on 21/11/2020

---------------------------------------------------------------------------

 சிறுகதை மன்னன் புதுமைப் பித்தனின் 'குப்பனின் கனவு' என்ற சிறுகதையைப் படித்த அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .

முதலில் ஒரு சின்னஞ்  சிறிய கதைச் சுருக்கம். குப்பன் ஒரு ரிக்ஷாக்காரன்.ஒரு மழை நாளில்  சவாரிக்கு ஒரு ஆள் கூட வராமல் அலைகிறான். ஒரு  நாலணா சாராயம் குடிக்க கிடைக்காதா என்று ஏங்குகிறான். அப்போது ரிக்ஷாவில்  இருந்தபடி ஒரு  கனவு. 

பணக்காரனாகி ஆங்கில மதுக்கடைக்கு செல்கிறான். இவன் ரிக்ஷாவில் நனவில் ஏற மறுத்த   ஒரு கனவானிடம் நாலணாவைத் தூக்கி எறிகிறான். கனவு கலைகிறது . நாலணா  கொடுப்பதாக சொல்லி இவன் ரிக்ஷாவில் ஏறுகிறான்   ஒருவன். அந்த  நாலணா சாராய நினைப்பிலேயே ரிக்ஷாவை ஓட்டுகிறான்.இதற்கு '  நாலணா ' என்றே  தலைப்பு  வைத்திருக்கலாம் என்று  தோன்றுகிறது. 

-----------------------------------

என்னைப் போன்று மேலோட்டமாக  படிப்பவர்களுக்கு  இது ஒரு குடிகார ரிக்ஷாக்காரனின்  வாழ்க்கையைச் சொல்லி இரக்க உணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறுகதை  போலத்தான் தோன்றும். ஆனால்  புதுமைப் பித்தனை உணர்ந்து படிப்பவர்களுக்கு இது  பொது உடைமைத்  தத்துவத்தின் பக்கம்  வாசகர்களை  ஈர்க்கும் ஒரு  சமுதாய சிந்தனை சிறுகதையாகத்  தான்  வெளிப்படும்.

இடத்தை காட்சிப் படுத்துவதிலும்  பொருளில் உணர்ச்சிப் படுத்துவதிலும் நம்மை ஒரு நோக்கம் நோக்கி  ஏவி விடுவதிலும் தான் ஒரு வாசகனை எழுத்தாளன் வசப் படுத்துகிறான். இந்த சிறு கதையில்  அது நிறைவேறுகிறது.  சில உதாரணங்கள்.

----------------------------

முதலில் இடத்தைக் காட்சிப் படுத்துதல் .

அந்த மழை  நாளை எப்படி வர்ணிக்கிறார்  கேளுங்கள் .

அன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ மூன்று மணி நேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று வேலை பார்க்கலாம். இப்படி நாள் முழுவதும் அழுது  கொண்டிருந்தால் ?.தலையில் போட்டிருந்த ஓட்டைத் தொப்பி. அது எந்த வெள்ளைக்காரன்  போட்டதோ.  அதுவும்  தொப்பலாக நனைந்து விட்டது. தொப்பியிலும் உள்பக்கம்  ஈரம் கவரியது என்றால் வேஷ்டியைக் கூட பிழிந்து கட்ட நேரமில்லை.

அந்த ரிக்ஷாக்காரனின்  தொப்பித் தோற்றம் நம்  முன் தெரிகிறது தானே..   அந்த சிணுசிணுக்கும் மழைத்தூறல் நம் மீதும் தெறிக்கிறது  தானே.

--------------------------------------

அடுத்து கதை பொருளில் நம்மைக்  கட்டிப் போடுதல்.

மழை நாளில் சவாரிக்கு அலையும்  ரிக்ஷாக்காரனின்  மன நிலை அவன் குடும்ப நிலை , சிறுகதை மன்னனின் வார்த்தைகளில்.இதோ

ஒரு நாலணா கிடைத்தால் வீட்டிலே  எறிந்து  விட்டாலாவாது முடங்கலாம் .இப்பொழுது ஒரு மொந்தை சாராயம அடித்தால்   என்ன குஷியாக இருக்கும்.  நாவில் ஜலம் ஊறுகிறது..

குப்பன்  பொண்டாட்டி நாலு  காசு  பார்க்காமலா  இருப்பாள். அவளும் கொஞ்சம் '  தொழில் ' நடத்துகிறவள் தான். இப்போ எந்த ...  பத்தினியா இருக்கா  . அவனுக்கும் தெரியும் .அவனுக்குத் தெரியும் என்று அவளுக்குத்  தெரியும் .அவ நாலு காசு பாத்திருந்தா வீட்டுக் கவலை ஓய்ஞ்சுது .  இவனுக்கும் இந்த நாலணா கிடைச்சா சாராயக் கடைக்காச்சு.

 

அந்த ஏழை தொழிலாளியின் சாராய மன  நிலையும்,  வீட்டுக் கவலை போக்க விலை போகும் மனைவியின் துயர்  நிலையும் , இந்த அடித்தட்டு மக்கள் சிலரின்  வாழ்க்கைப்  பொருளை நமக்கு விளக்குகிறது அல்லவா.

-------------------------------------------

இடத்தையும் பொருளையும் காட்டிவிட்டு அடுத்து  நம் மீது சமுதாய சிந்தனையை ஏவி விடுகிறார் பாருங்கள்.

 

சட்டை போட்ட பேர்வழிகளை கண்டால் அவனுக்கு  எரிச்சலாக இருந்தது.திருட்டுப் பசங்க.  ஒரு பயலாவது ரிக்ஷாவில் ஏற கூடாதா. அந்த மனிதனை கிழித்து  விடலாமா என்று கோபம். என்ற  வரிகளில்  தெறிக்கும் ஏழையின் எரிச்சல் .

அடுத்து  வரும் கனவிலே  ' பணக்காரனாகி இவனை ரிக்ஷாவில்  இழுத்து செல்லும் குப்பனுக்கு ' இந்தாடா நாலணா ,  கூட  ஓரணா இனாம் ' என்று கொடுப்பது.  இவனை ஒத்த  ஏழைகட்கு உதவி  செய்ய நினைக்கும்  மனதின் வெளிப்பாடு.   முன்பு தன் ரிக்ஷாவில்   ஏற  மறுத்த கனவானைப் பார்த்து 'குப்பாயி வெளியே  புடிச்சு   தள்ளு  அவனை.. ஓடிப் போ. கூச்ச போடாதே  இது குப்பாயீ  வீடு தெரிஞ்சுதா. வேணும்னா  வெளியே ரிக்ஷா கீது. .இஸ்து பொய்ச்சிக்கோ ' என்ற வரிகளில்  பணக்காரனிடம் கோபப்படும்  குணமும் , மனைவி ஒழுக்கமாக  இருக்க வேண்டும் என்ற ஆசையும் வெளிப்படுகிறது ..

இப்படி கோபம்,  எரிச்சல்,  குணம் , என்று  அந்த ஏழை  குப்பனின் ஆசைகள் அந்த கனவிலே வெளிப்படும்  போது

சமுதாய சிந்தனையை வாசகனின் மனதில் விதைக்கிறார் அல்லவா.

--------------------------------------

 

இப்போது ரிக்ஷா லாந்தல் கம்பத்தில் மோதி கனவு  கலைகிறது..

பிராட்வேக்கு வர ஒருவர்  நாலணா கொடுக்க முன் வருகிறார். 

குப்பனுக்கு சற்று முன்  இழந்த முதலாளிப் பதவியை  விட அந்த  நாலணா மிகுந்த களிப்பை தந்தது . 'நாலணா ' என்ற வார்த்தையோடு கதை  முடிகிறது...

       

காடு வெளஞ்சன்ன மச்சான்   , நமக்கு கையும்  காலும்  தானே மச்சான் ' என்ற பட்டுக்கோட்டையின்  பாட்டு வரிகளை நினைவு  படுத்தும்   படி கதை முடிகிறது.

 

ஒரு பொது உடைமை  சமுதாயம்  பூக்காதா , ஏழைகள் வாழ்வில் இன்பம்  மலராதா  என்ற  எண்ணத்தை நம்முள்ளே,  இடம்,   பொருள் ஏவல் பாணியிலே  ஏற்றி விடும்  இந்த  சிறுகதை தந்த  புதுமைப்பித்தன்  சிறுகதை  மன்னன் மட்டும் அல்ல. பொதுவுடைமை சிந்தனைக்காரன்  என்ற  உண்மையும்  புரிகிறது  அல்லவா.  நன்றி. வணக்கம்.

------------------------------நாகேந்திர  பாரதி

 My E-books in Tamil and English

.

.

சனி, 14 நவம்பர், 2020

தீபத்தின் ஒளியும் திரியின் வலியும்

 தீபத்தின் ஒளியும் திரியின் வலியும் 

----------------------------------------------------------

அதிகாலை உசுப்பி விட்ட 

தாத்தாவைக்  காணோம் 


ஓலை வெடி  கொளுத்திப் போட்ட 

அப்பாவைக்  காணோம் 


உச்சந்தலை எண்ணெய் வைத்த 

அப்பத்தா காணோம் 


பலகாரம் சுட்டுப் போட்ட 

அம்மாச்சி காணோம் 


ஒவ்வொரு உயிராய் 

ஊர் விட்டுப் போன பின் 


தீபத்தின் ஒளியாகத் 

தெரிந்தது அப்போது 


திரியின் வலியாக 

எரிந்தது  இப்போது 

------------------------------நாகேந்திர பாரதி 

My E-books in Tamil and English

வியாழன், 12 நவம்பர், 2020

உயிரும் மழையும் - கவிதை

 உயிரும் மழையும் - கவிதை 

----------------------------------------------------

மண்ணிலும்  விண்ணிலும் 

இருப்பது கண்டேன் 


ஆக்கமும் அழிவும் 

செய்வது கண்டேன் 


பழியும் புகழும் 

சேர்வது கண்டேன் 


முதலும் முடிவும் 

ஆவதும் கண்டேன் 


உயிரும் மழையும் 

ஒன்றாய்க்  கண்டேன் 

---------------------------------நாகேந்திர பாரதி 

My E-books in Tamil and English

சனி, 7 நவம்பர், 2020

இடப் பெயர்ச்சி - கவிதை

 இடப்  பெயர்ச்சி - கவிதை 

------------------------------------------------

உறிஞ்சுகின்ற மண் பார்த்து

பழக்கப்பட்ட மழைக்கு


தெறிக்க வைக்கும் கல் தரைகள்

திடுக்கிடத்தான் வைக்கும்


திரும்பிப் பார்த்து மேலிடத்தில்

தன் வலியைச் சொல்லும்


கான்கிரீட் காடுகளைக்

கடந்து செல்லும் மேகம்


காய்ந்து விட்ட மண்ணோடு

கருகி விட்ட மனத்தோடு


காத்துக் கிடக்கின்ற

கிராமங்களை நோக்கி

———————————நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English