சாவித்ரி - சிறுகதை
-------------------------------
'என்னை இந்த நிலையில் பார்க்க நீங்க வர வேணாம் சார்'
கெஞ்சும் அவளின் குரலுக்கு இறுக்கமாகப் பதிலளித்தான் அவன்.
' ஒழுங்கு மரியாதையா அட்ரஸ் அனுப்பி வைங்க . உங்க பிரெண்ட்ஸ் யாரைக் கேட்டாலும் ஒரே பதில். அட்ரஸ் தெரியாது . ஏன் இப்படி ஒளிஞ்சு மறையிறீங்க '
'ப்ளீஸ், என்னை விட்டுருங்களேன் '
' மத்தவங்க மாதிரியா நான். என்னைத் தெரியாது உங்களுக்கு . மூணு வருஷமா, நியூயார்க் போனப்புறம் , நியூயார்க்கிலே இருந்து எப்படியும் மாசம் ஒரு தரம் உங்க கூட பேசுவேனே. நம்ம முந்தி அந்த ஆபீஸ்லே லன்ச் டயத்திலே பேசின மாதிரியே எவ்வளவு கலகலப்பா பேசுவீங்க . சினிமா , இலக்கியம்னு எத்தனை விஷயங்கள். '
'ஒரு வருஷமா உங்க நம்பரும் மாறிப் போச்சு. இப்ப இந்தியா வந்ததும் , முதல்லே உங்க பிரென்ட் மூலம் இந்த புது நம்பர் கிடைச்சாலும், அட்ரஸ் கிடைக்கலே. உடனே , என்னோட இந்த நம்பருக்கு உங்க அட்ரஸ் அனுப்பி வைங்க . புரியுதா ' என்று கோபமாகப் பேசி வைத்த சில நிமிடங்களில் வந்தது அட்ரஸ் வாட்சப்பில் .
ஊபேரில் ஏறி அவள் வீடு சேரும் வரை பழைய ஞாபகங்கள்தான்.
அந்த ஆபீசில் மேனேஜரின் ஸ்டெனோ அவள். மேலாளர் முதல், கடைசிப் பணியாள் வரை அவள் தான் எதற்கும் . மேனேஜரின் மீட்டிங் விஷயம் முதல், கடை நிலை ஊழியரின் வீட்டுப் பிரச்னை வரை அவள் தான் உதவி. அதுவும் அந்த பியூன் கோவிந்தசாமிக்கு அவள் தான் குலதெய்வம் அடிக்கடி பண உதவி செய்வதால் .
அவன் அந்த அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் இது அவனுக்கே புதுமையாக இருந்தது. ஒரு நாள் லன்ச் ரூமில் அவளுடன் சாப்பிடும் சந்தர்ப்பம். இவன் டிபன் பாக்ஸை உரிமையுடன் திறந்தவள் ' என்ன சார், தயிர் சாதம், ஊறுகாயா' . இந்தாங்க இதை நீங்க சாப்பிடுங்க ' என்று அவள் நகர்த்தி விட்ட அவளது டிபன் பாக்ஸில் இருந்த சாதமும் வத்தக்குழம்பும், வாழைக்காயும் தேவாமிர்தம்.
அவனது தயிர் சாதத்தை ரசித்தபடி ' உங்க ஒய்ப் போட கைமணம் இதிலே இருக்கு ' என்றவளிடம் ' இல்லே, அது அம்மா செஞ்சது. கல்யாணம் ஆகலே' என்றவனிடம், ' ஏன் சார் ' என்று கேட்டவளிடம் என்ன சொல்வது. ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. இப்படி உரிமையோடு எல்லோரிடமும் பழகி, அவர்களுக்குத் தேவையான உதவி அன்பான வார்த்தைகளாலும், தேவையான செயல்களாலும் செய்துதான் இங்கே அவள் ஒரு தேவதையாக உலா வருகிறாள் என்பது புரிந்தது.
அன்று முதல் அம்மாவிடம் சொல்லி, ஒவ்வொரு நாளும் வேறு வேறு சாதம் செய்து கொண்டு வந்து அவளுடன் பரிமாறிக் கொள்வது பழக்கம் ஆனது. அவளுக்கும் நடிகை சாவித்ரியின் பழைய படங்கள் பிடித்திருந்தன . அவளுக்கே கொஞ்சம் சாவித்ரி சாயல்தான் . அவளுக்கும் சுசீலாவின் குரல் பிடித்திருந்தது. அவளுக்கும் திருக்குறளின் ஒண்ணே முக்கால் வரியின் உள்ளார்ந்த அர்த்தம் பிடித்திருந்தது. இவற்றைத் தவிர வேறு எதுவும் அவர்கள் பேசுவதில்லை. குடும்ப விஷயம் அறவே கிடையாது.
ஆனால் , அவளின் கணவன் அரசாங்கத் தலைமை அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பதும், மூன்று வயதிலும், ஒரு வயதிலும் மகனும் மகளும் இருப்பதும் அலுவலக நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. அலுவலக வேலையில் அவளின் சுறுசுறுப்பும் , மற்றவர்க்கு உதவும் அவளின் மனப்பான்மையும், அவள் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்த, ஒரு முறை அவள் பேர் சொல்வதை மாற்றி ' மேடம் ' என்று சொன்னதில் அவளுக்கு அவன் மேல் கோபம்.
அது வரை அவனை 'சார்' என்று சொன்னவள் , சட்டென மாற்றி, மிஸ்டர் ... என்று அவன் பெயர் சொல்லி அழைத்து, நீங்களும் பெயர் சொல்லித்தான் பேச வேண்டும் ' என்ற போது அவன் அதிர்ந்து போனான். இது என்ன விதமான தோழமை என்ற குழப்பம். கூட . அலுவலகத்தில் இருப்பவர்கள் சிலர் இவர்களை இணைத்து கிசுகிசுப்பது தெரிந்து மேலாளர் அவர்கள் இருவரையும் உள்ளே கூப்பிட்டு விசாரிக்கும் அளவுக்குப் போனதற்கு காரணம், அவர்களின் லன்ச் டைம் பேச்சும் சிரிப்பும் தான் என்று தெரிந்து அதற்கு இருவரும் தடை போடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இருந்தும் போனில் பேச்சும் சிரிப்பும் தொடர்ந்தன.
சில நாட்களில் அவனுக்கு வேறு ஒரு அலுவலகத்தில் வேலை கிடைத்து வேறு ஊர் மாறுதலாகிச் சென்று, பிறகு அயல் நாடு என்று மாறிய காலங்களிலும் அவர்களின் போன் பேச்சு அதே பழைய லன்ச் நேரக் கலகலப்போடு சென்று கொண்டுதான் இருந்தது. சென்ற வருடம் வரை. இதோ அவள் வீடு வந்து விட்டது.
அவன் வருகை பற்றி முன்பே தெரிந்திருந்த அவள் கணவர் அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். கொண்டு வந்த பிஸ்கேட் பாக்கட்டுகளை அவளின் குழந்தைகளிடம் அந்த வரவேற்பறையில் கொடுத்து விட்டு ,அவர் அழைத்துச் சென்ற அந்த மருந்து நெடி வீசிய அந்த அறைக்குள் நுழைந்தவுடன் அங்கே அவன் கண்ட காட்சி.
எலும்பும் தோலுமாக , ஒரு நைட்டிக்குள் இருந்த அந்த உருவம் அவனை வரவேற்றது , 'வாங்க . இதைத்தானே பார்க்கணும்னு ஆசைப்பட்டீங்க. பாருங்க. புற்று நோயால், முடி கொட்டி , உடல் மெலிந்து , இன்னும் எத்தனை நாளைக்கோ என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்க ' சாவித்ரி ' யை ப் பாருங்க . அவர்கள் பேச்சின் நடுவில் அவளை சில சமயம் 'சாவித்ரி 'என்று அழைத்துக் கிண்டல் செய்த ஞாபகம் வந்து அவன் கண்களை நிரப்பியது.
' இதுக்குதான் , இதுக்கு தான், வர வேணாம் னு சொன்னேன். உங்க எல்லார் நினைவிலே , நான் என்னிக்கும் உங்க பழைய சாவித்ரியாய் இருக்கவே ஆசைப்பட்டேன். ஆனா நீங்க கோபத்தோடு போனை வைச்சதும் உடனே அட்ரஸ் அனுப்பிட்டேன். அது என் தப்புதான் ' என்றவள் அருகில் சென்று அவள் கட்டிலின் அருகில் அமர்ந்து, அந்த மெலிந்த விரல்களை நீவி விட்டான்.
அதற்கு மேல் தாங்க முடியாத அவள் அப்படியே அவனுடன் நெருங்கி அவனைக் கட்டித் தழுவினாள். பார்த்துக் கொண்டிருந்த அவள் கணவர் , 'நீங்க பேசிக்கிட்டு இருங்க ' என்று சொல்லிவிட்டு அறையை விட்டுச் செல்ல , ' அவருக்கு நம் தோழமையும் , தொடர் பேச்சும், சிரிப்பும் ஆரம்ப முதலே தெரியும் ' என்றவள் அவனைக் கட்டிப் பிடித்தபடியே இருந்தாள்.
அந்த மெலிந்த உடம்பின் எலும்புகள் அவன் மேல் குத்துவதை உணர்ந்தபடி அவள் அணைப்பில் இருந்தபடியே , ' சினிமா, இலக்கியம் ' என்ற அவர்களின் அந்தக் காலப் பேச்சைத் தொடர்ந்து கொண்டு இருந்தான். அவனின் சில நகைச்சுவைத் துணுக்குகளுக்குச் சிரித்தபடி விலகிய அவள் , அவனையே உற்றுப் பார்த்தபடி சொன்னாள்.
'நான் உனக்கு முன்னாலேயே என் அட்ரஸ் கொடுத்திருக்கணும். குணம் ஆனாலும் ஆகி இருப்பேன். இப்போ முத்திப் போச்சு . இன்னும் சில நாட்கள்தான் ' என்றவளின் வார்த்தைகளில் ,' உங்களுக்கு' என்பது ' உனக்கு ' என்று மாறியது அவர்களுக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் கசிந்த நீரைத் துடைத்து விட்டபடி சொன்னான். 'நான், உன்னைப் பார்க்க வரலே . இதோ இந்தப் பேச்சுக்குத்தான் நான் இங்கே வந்தேன். நீயும் இதை எதிர் பார்த்துதான் இருந்திருப்பே . இல்லே ' என்றவனுக்கு ஒரு விம்மல் தான் பதில் அவளிடம் இருந்து .
'அவரும் ,குழந்தைகளும் என்னை நல்லா பார்த்துக்கிறாங்க . நீங்க, இல்லே நீ கவலைப்படாதே ' என்று உரிமையுடன் அவள் சொன்ன வார்த்தைகளில் தோழமையுடன் கலந்திருந்த அந்தத் தாய்மை, அதே தாய்மை, எது அந்த அலுவலகத்தையே அவளைச் சுற்றி வரச் செய்ததோ அதே பண்பு அது இந்த உடலில் இல்லை. அவளுக்குள் இருக்கிறது ' என்ற எண்ணத்தைக் கலைத்தது அவள் கணவரின் குரல் '. நர்ஸ் வந்திருக்காங்க,. அவளுக்கு சில இன்ஜெக்ஷன், மருந்து கொடுக்கிற நேரம் '
விரல்களை விடுவிக்கப் பார்த்தான். அவள் விடவில்லை. கைகளைத் தட்டித் தடவி விடுவிக்கும் நேரம் உள்ளே நர்ஸ் நுழைந்தாள்.
அடுத்த நாள், அவள் கணவரிடம் இருந்து போன் ' உங்க சாவித்ரி போயிட்டா ' . அவன் போகவில்லை. போனால் அவள் என்ன பேசவா போகிறாள் .
-----------------------நாகேந்திர பாரதி