திங்கள், 3 நவம்பர், 2025

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை  மதிப்புரை - கதை  புதிது  நிகழ்வு 

-----------------

நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே .


ஜெயந்தன் அவர்களின் 'நிராயுதபாணியின் ஆயுதங்கள் ' சிறுகதை . பல உண்மைச் சம்பவங்களை கதைக்குள் இணைத்து அதற்கு எதிர் வினை ஆற்றும் ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் கோபத்தின் நியாயத்தை அற்புதமாக வெளிப்படுத்தும் கதை. 


சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டவர்கள் , அந்த நிராயுத பாணிகள் ஆயுதங்கள் எடுத்தால் எப்படி இருக்கும் , அந்தக் கோபம் எப்படி வெளிப்படும் என்பதை உண்மைச் சம்பவங்களை இணைத்து எழுதப்பட்டுள்ள சிறுகதை ' நிராயுதபாணிகளின் ஆயுதங்கள் .


அநீதி கண்டு கொதித்து எழுந்து பழிவாங்கும் அந்தக் கோபக்காரப் பெண்  பாவ மன்னிப்பு பெறுவதற்கு ஒரு  தேவாலயத்தில் பாதிரியார் முன் மண்டி  இட்டு அமர்ந்து சொல்லுகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் நாம் பத்திரிகைகளில் படித்தவை. 


'கொலை செய்தவர்களை கர்த்தர் மன்னித்து விடுவாரா ' என்று அவள் கேட்கும் முதல் கேள்வியே பாதரை மட்டும் அல்ல, நம்மையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது . தொடர்ந்து நடக்கும்  உரையாடல்களில் பாவ மன்னிப்பு தொடர்பான கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட   பல விபரங்கள் பாதிரியார் மூலம் நமக்கும் தெரிய வருகின்றன.  அது இந்தக் கதைக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது . 


பாவ மன்னிப்பின்  ரகசியத் தன்மை, அவர்களின் நாவு 'உடைபடா முத்திரை' என்ற விபரமும் அதை உடைக்க முயன்ற சர்வாதிகாரிகளும் , போலீஸ் அதிகாரிகளும் தோற்றுப் போன விபரங்களும் சொல்லப்பட்டு அவளுக்கு நம்பிக்கை அளிக்க   தொடர்ந்து சொல்கிறாள்  அவள் செய்த முதல் கொலையின் விபரங்களை . 


வரதக்ஷிணைக் கொடுமையால் இறந்து போன ஒரு தோழியின் கணவனையும் அவள் மாமியாரையும் இவள் தனது தோழிகளோடு சேர்ந்து கொன்ற விதம். சமுதாயக் கொடுமைக்கு எதிராக இவர்கள் எடுத்த முடிவு கதையின் தலைப்பான 'நிராயுதபாணியின்  ஆயுதங்கள் ' என்ற தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் விளக்கப்படுகிறது .


பாவ மன்னிப்பு தொடர்கிறது மற்றும் ஒரு நாளில் . இன்னும் ஒரு சமுதாய அநீதிக்குச் செய்த கொலைக்காக .அந்தக் காலச் செய்தியாக வெளிவந்த ஒரு பெண்ணின் சோகக் கதை .  போலீஸ் ஸ்டேஷனில் கற்பழிக்கப்பட்டு , சித்ரவதை செய்யப்பட்ட  சிதம்பரம் பதமினிக்காக     அந்த ஸ்டேஷன் ஏட்டை செருப்பால்  அடித்தே கொன்றனர் இவர்கள் . 


அநீதிகளைக் கண்டு சத்திய ஆவேசம் கொள்ளும் அவள் நிலை புரிகிறது பாதிரியாருக்கு. அவள் மேல் வேறு சில கடமைகளும் தனக்கு இருக்கின்றன என்று புரிந்து அவள் தகப்பனார் பெயர் கேட்கிறார். சொல்ல மறுத்து  அவள்  செல்கிறாள். பாவம் தொடர்கிறது. பாவ மன்னிப்பும் தொடர்கிறது . 


அடுத்து வருவது அவருக்கு ஒரு போன். அவள்தான். அவளை போலீசும் உளவுத் துறையும் தேடி வருவதால் , சர்ச்சுக்கு வர முடியவில்லை என்று சொல்லி விட்டு தொடர்கிறாள் . இதுவும் முன்பு வந்த ஒரு பத்திரிக்கைச் செய்திதான். 


ஒரிசாவில் மதபோதகர் ஒருவரையும் அவர் குழந்தைகளையும் வேனோடு சேர்த்துக் கொளுத்திய  தாராசிங்கின் கூட்டாளிகள் முப்பது பேரை இவர்கள் சுட்டுக் பொசுக்கி தீய்க்கு இரையாக்கிய செய்தியைச் சொல்லும் போது தொடரும் உரையாடலில் , மத மாற்றம். அதன் அடிப்படை , இதில் உள்ள தீவீர வாதம் போன்ற விஷயங்களும் விளக்கப் படுகின்றன. சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள். 


'அவர்களின் கலாச்சாரத்தைத்தானே நீங்களும் செய்தீர்கள்',  என்ற பாதரின்  கேள்விக்கும்  சுருக்கென்று வருகிறது அவளின் பதில் ' நமது ஆயுதங்களை எதிரிகள் தானே தீர்மானிக்கிறார்கள் பாதர் ' 


போனில் பாவ மன்னிப்பு தர மறுத்து , சர்ச்சுக்கு வரச் சொல்கிறார் பாதிரியார். போன் வைக்கப்படுகிறது . 


அடுத்த முறை சர்ச்சுக்கு எப்படியோ வந்து விடுகிறாள் .இவரும் 'தயாரிப்போடு'  இருக்கிறார்  என்ற ஒரு வரி சிறுகதையில் நமக்கு சில யூகங்களைக் கிளப்பி விடுகிறது . இம்முறை   தாங்கள் மூன்று கிராமங்களைத் தீ வைத்துக் கொளுத்தி சாமபாலாக்கி விட்டதாகச் சொல்கிறாள் . பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் - இவற்றில் தலித்துகளுக்கு நடந்த கொடுமைகள் , விவரிக்கப்படுகின்றன. பாதிரியாரும் தனது இளவயது வாழ்வின் கஷ்டங்களை நினைத்துப் பார்த்து , தான் கிறிஸ்த மதத்திற்கு மாறிய  சூழ்நிலைகளையும் எண்ணிப்  பார்க்கிறார். 


'சட்டத்தை இதுபோல் கெட்டவர்களும் எடுத்துக்கொண்டால் என்ன செய்வது' என்று கேட்கிறார். அவளது பதில் ' அவர்கள் முதலில் எடுத்துக் கொண்டதால் தான் நாங்கள் இப்போது எடுக்கிறோம் ' என்கிறாள். 


'இவ்வளவு தெளிவாக இருக்கும் நீ ஏன் பாவ மன்னிப்பு கேட்கிறாய் ' என்ற கேள்விக்கு அவளது பதில். 'கிறிஸ்தவ தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்த எனக்கு வன்முறை பாவமாகத் தெரிகிறது . வலது கை 'வன்முறை பாவம். பாவ மன்னிப்பு கேள்' என்கிறது . இடது கை வன்முறையைச் சகித்துக் கொள்வது மஹா பாவம். ' என்கிறது  என்கிறாள் .


'நியாயங்களை நிபந்தனையற்ற சத்திய பிரமாணமாக ஏற்றுக் கொண்ட அந்த இளம் மூளைக்குள் ஏற்பட்டு விட்ட விபத்தைச் சரி செய்ய வேண்டியது தனது கடமை' என்று உணர்ந்து அவளின் ' தந்தை பெயர் ; கேட்கிறார் ' . அவள் ' கர்த்தர் ' என்று சொல்லிவிட்டு பாவமன்னிப்பு பெற்றுச் செல்கிறாள். 


அவளை ப்  பற்றிய கவலையும் , அவளை வேட்டையாடும் காரணிகளும் இரட்டைச் சுமைகளாக அவரை அழுத்த 'ஏசுவே' என்று இருக்கையில் சாய்கிறார் பாதிரியார் என்று முடிகிறது கதை  . 


சமுதாயத்தின் அநீதியான  நிகழ்வுகள் பல ஒரு எழுத்தாளனைக் கோபப்படுத்தி , ஒரு பெண்ணின் மூலமாக பழி வாங்கி இருக்கிறது இந்தக் கதையில் . இன்றும்  சமுதாயத்தில் தொடரும் பல தீய நிகழ்வுகள் அன்றைய உண்மைச் சம்பவங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு அவற்றுக்கு தீர்வாக  அந்த நிராயுத பாணிகள் ஆயுதங்கள் எடுக்கும் நிலை வரக்  கூடும் , அந்த மன நிலைக்கு அவர்கள் ஆளாவார்கள் என்ற எச்சரிக்கையை இந்த நாயகியின் பழி  வாங்கும்  செயல்கள் மூலம் கற்பனையில் வெளிப்படுத்தி   அந்தக் கருத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் ஆசிரியர். 


அதன் தாக்கம் படிக்கும் நமக்கும் ஏற்படும் விதத்தில் இந்த ' நிராயுதபாணியின் ஆயுதங்கள் ' அமைந்திருப்பது எழுத்தாளர் ஜெயந்தனுக்கு கிடைத்த எழுத்தின் வெற்றி . நன்றி. வணக்கம் .


------------------------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English 


சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை  மதிப்புரை - கதை  புதிது  நிகழ்வு  ----------------- நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே . ஜெயந்தன் அவர்களின் 'நிராயுதபாணியி...