மாறிய தோள்கள் - சிறுகதை
-------------------------------
'உசுப்பி விட்டு நடக்க வைச்சு கூட்டிட்டு வாங்க. நாலாவது படிக்கிற பெண்ணை இன்னும் தோளில் தூக்கிச் சுமக்கிறது சரியில்லை. ரெம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க '
மனைவியின் சொல்லைக் கேட்டு இறக்கிவிட முடியுமா. அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, தோளில் தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கும் மகளை எப்படி இறக்கி விட முடியும். மடக்கிய கை வலித்தாலும் கூட.
சினிமா இரவுக் காட்சி பார்த்து விட்டு எலெக்ட்ரிக் ட்ரைனில் க்ரோம்பேட் ஸ்டேஷன் வந்து இறங்கி குறுக்குப் பாதையில் ரெயில்வே லைனைக் கடந்து வீடு போக ஐந்து நிமிடம் ஆகும் . ட்ரைனிலில் வளவள என்று படத்தைப் பற்றி பேசிக் கொண்டு வந்தவள் க்ரோம்பேட் நெருங்குவது தெரிந்ததும் அப்பா தோளில் சாய்ந்து தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தது இதற்குத் தானே.
அதுவரை நடந்து வரச் சோம்பேறித்தனம். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி என்ற எண்ணமே அவனை ,மகளைத் தூக்கி வரச் செய்தது . விடுமுறை நாட்களில் விளையாட்டு, சினிமா, ஹோட்டல் என்று கூட்டிப் போகச் செய்தது . ஐஸ்க்ரீம் வாங்கித் தரச் செய்தது. தொடர்ந்து இருமல் வர, டாக்டரிடம் தூக்கிப் போகச் செய்தது . பாட்டுப் பாடி தூங்கச் செய்யச் செய்தது.
கிரௌண்டில் அவள் சைக்கிளில் சுழன்று வரும்போது கழன்று விழும் சைக்கிள் செயினால் தடுமாறி அவள் விழும்போது தாங்கிப் பிடித்து, செயினை மாட்டி விட்டு கை கழுவி விட்டு திரும்பி வரும் முன்பே அவள் சைக்கிளில் ஓட்டம் பிடிக்க பின்னாலே ஓடும் போது மூச்சு வாங்கத்தான் செய்தது .
காலம் நிற்காமல் ஓடத்தான் செய்தது. பள்ளி முடிந்து, கல்லூரி முடிந்து மணமும் ஆகி குழந்தை பெற்று வீட்டுப்பொறுப்பு, அலுவலகப் பொறுப்பு என்று அவள் வாழ்வில் ஓட்டமோ ஓட்டம். கூட ஓட முடியாமல் வீட்டில் ஓய்வெடுக்கத்தான் முடிந்தது அவனால் இப்போது.
இதோ, ஆஸ்பத்திரியில் இதயத்தில் மூன்று ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டு . அவன் களைப்போடு கிடக்கும் அந்தக் கட்டில் அருகே , மற்றும் ஒரு சின்ன பெஞ்சில் தூங்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருக்கிறாள் அவள். இரவில் பாத்ரூம் எழும்போது தடுமாறுவானே. விழாமல் தோளில் தாங்கிப் பிடித்து பாத்ரூம் கூட்டிச் செல்ல வேண்டுமே. எப்படித் தூங்க முடியும்.
பகலில் அம்மா வந்து பார்த்துக் கொள்ளும்போது குட்டித்தூக்கம் போட்டு விடலாம். இப்போது வீட்டில் வாலுக்குட்டி அம்மாச்சியை என்ன பாடு படுத்துகிறதோ . கண்டிச்சு வைக்கணும். மூன்று நாட்கள் லீவு போதுமா . அவரு பாவம் ராத்திரி என்ன சாப்பிட்டாரோ . எண்ணங்களுக்குள் மூழ்கி கண் அசந்து விட்டாள்.
ஏதோ சப்தத்தில் திடுக்கிட்டு எழுந்தவள், பாத்ரூம் அருகே தடுமாறி சுவரைப் பிடித்தபடி நிற்கும் அப்பாவின் அலங்கோல நிலை பார்த்து. ஓடிச்சென்று அவர் கைலியைச் சரி செய்து ' சாரி ப்பா , அசந்துட்டேன் ' என்று அவள் தோளில் அவரைச் சாய்த்தபடி மெதுவாக கூட்டிவந்து படுக்கையில் அமர்த்தும்போது நினைத்தான் அவன் . 'தோள்கள் மாறிவிட்டன இப்போது' .
----------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக