ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

‘ஐயா’ - லா ச ரா சிறுகதை - மதிப்புரை

 

‘ஐயா’ - லா ரா சிறுகதை - மதிப்புரை

---------------------------------------------------------------------

(நவீன விருட்சம் நிகழ்வு - 23/4/21)

நன்றி அழகியசிங்கர். நெருப்பு என்று எழுதினால்  படிப்பவர்களுக்கு சுட வேண்டும் என்று லா ரா அவர்கள் சொல்லியதாக படித்த ஞாபகம். இந்த சிறுகதை ஐயாவும் அந்த ஐயாவை நம் கண் முன் எலும்பும் சதையும் எண்ணமும் செயலுமாக  கொண்டு வந்து நிறுத்துகிறது.

 

கதைச் சுருக்கம் என்று சொல்ல முயற்சித்தால் முழுக் கதையையும் தான் வாசிக்க வேண்டும். ஒரு வரியை விட்டு விட்டாலும் இந்த கதையை நாம் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

 

எனவே  நமது மெய்  வாய் கண் மூக்கு செவி என்ற நமது  ஐம்புலன்களுக்கும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்து சுவைகளாக விழுகின்ற அந்த எழுத்துச் சிற்பியின் சில வாக்கியங்களை  மட்டும்தான் இந்த ஐந்து நிமிடங்களில் உங்கள் முன் பகிர்ந்து கொள்ள முடியும்.

 

ஐயா சந்தனக் குழம்பு நிறம். முகத்தில் எப்போதும் மூணு மாதத் தாடி .சடைத் தலை. அழுக்கு. பொடிப் பழக்கம் வேற. ஐயாவுக்கு குளியல் என்றாலே அலர்ஜி . ஐயாவை நம் கண் முன் கொண்டு வந்து விட்டார் அல்லவா.

 

அவரது வாழ்க்கை பற்றி ஒரு சுருக்கம். படிப்பறிவு இல்லாதவர். இருபது வயதிலேயே மனைவி தலைப்பிரசவத்தில் இறந்து விட்டாள் . குழந்தையும் தக்கவில்லை . அவர் மறுமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் கடைசி வரை அவர் பெயர் கறை  படவில்லை . என்று அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும்போதே அவரது தம்பி தமிழ்ப் பண்டிதர் , அம்பாள் உபாசகர் வாரத்தில் ஒன்றிரண்டு நாள் இரவு ஊர் திரும்ப மாட்டார் , அப்போதெல்லாம் அவர் மனைவி மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பாள் ' என்று சொல்லப் படும்போது  படிப்புக்கும் ஒழுக்கத்துக்கும்  சம்பந்தம் இல்லாத அந்த சூழ்நிலையை சூசகமாக நமக்கு அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.

படிப்பறிவு இல்லாவிட்டாலும்  ஐயாவுக்கு தெரிந்த வேலைகள் பல. மாட்டுக்கு பிரசவம் பார்ப்பார். கட்டிலுக்கு கயிறு பின்னுவார் . கூடை முடைவார்.  ஓலைக் கூரை மேய்வார்  என்று அடுக்கப்படும்  விவரங்கள் ஐயா மேல் நம் மதிப்பைக் கூட்டுகின்றன. பேரக் குழந்தைகளோடு தானும் ஒரு குழந்தையாய் வீட்டில் வெல்லம்  திருடித்  தின்பது , ஊரான் வீட்டு மரத்தில் ஏறி இளநீர் திருடிக் குடிப்பது என்று விவரிக்கப் படும்நிகழ்ச்சி உரையாடல்கள் எல்லாம் நமது செவிக்கு விருந்து. நீங்கள் படித்து ரசியுங்கள்.

 

 

அவர் மடியில் கட்டி வந்து கொட்டிய திருட்டு பிஞ்சு கத்தரிக்காய்களை சமைத்து கத்திரிக்காய் குழம்பு.  கொஞ்ச நேரத்தில் குழம்பு காய்கையிலே வாசனை கூடத்தைத் தூக்கும். பருப்பா  மண்ணாங்கட்டியா. எல்லாம் மன்னியின் அதாவது மன்னி என்று அழைக்கப் படும் பாட்டியின்கை  வாசம் தான். நமது நாசிக்கும் அந்த வாசம் எட்டுகிறது தானே. 

 

குழம்பை அந்த அத்தைப் பாட்டி சுவைத்து சாப்பிடும் அழகை எப்படி சொல்கிறார் கேளுங்கள்.

அத்தை பாட்டி ஒரு காலை நீட்டியபடி வெறும் குழம்பை தேனாட்டம் உள்ளங்கையில் சொட்டிக்கொண்டு , நாக்கை ஒவ்வொரு தடைவையும் 'டொக் டொக்' என்று  கொட்டிக்கொண்டு உள்  தொண்டை வரை இழுப்பது ' என்று விவரிக்கும்போது நமக்கும் அந்த கத்திரிக்காய் சாப்பிட்ட உணர்வு நம் வாய்க்கும் வருகிறது தானே.

 

வாய் கண் மூக்கு செவி என்ற நான்கு புலன்களாலும் இந்த கதையை அனுபவித்தோம். இப்போது  நம் மெய்யை அதிர வைக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கலாமா.

 

விளையாட்டாய்  திரியும் ஐயாவுக்கு  கோயில் காவல் காரர் வேலை கிடைக்கிறது. ஒரு நாள் வேலை முடிந்து  வரவில்லை அவர். வெகு நேரம் கழித்து வந்து வீட்டுக்குள் வந்து விழுகிறார். அனைவரும் துடித்துப் போய்  கேட்கும் போது   விவரிக்கிறார். இப்படி .

 

''அசந்து தூங்கிப் போயிட்டேன். வெடுக்குண்டு உதறிண்டு முழிப்பு வந்தது .ஒரே இருட்டு. ஓர் அகலில் மட்டும் முத்துப் பொறி. எதிரே யார் நிக்கிறா . அலறிப் புடைச்சுண்டு எழுந்திருந்தேன். இல்லை. வாயடைச்சுப் போச்சு. கை கால் விழுந்து போச்சு .முகம் மூஞ்சின்னு உருப்படியா தெரியலை .தெரியாமலும் இல்லை. ஏதோ கோட்டுக்குள் அடைச்ச இருட்டில் மூக்குத்தி திகு திகு .அதை விட கண்கள் . எனக்கு கண் கூசறது. நெற்றியில் குங்குமம் சுடர் விடறது.

 

சிப்புப் பாவாடை. நீலத் தாவணி. தோளில் பச்சைக்கிளி.தலையை சொகுசா திரும்பி திரும்பி பார்த்துண்டு .  இரை  தின்ன பாம்பு மாதிரி முழங்காலில் இடிக்கிற பின்னல்.என்னைப்  பார்த்து சிரிச்சுண்டு ஒரு கையால் பின்னலைச் சுழட்டிண்டு நிக்கிறா . சிரிப்பா , கண்ணா , எதன் ஒளி கூட. அப்பா எனக்கு கண்ணைப் பறிக்கிறது , கண்ணை இறுக மூடிண்டு என்னை அழுத்துற பயத்தை ஒரு வழியா உதறிண்டு எழுந்திருந்தேன். 'ஹத்து  தேவடியா முண்டை எட்ட ஓடு . எப்படி உள்ளே வந்தே.

உரக்க சிரிச்சுண்டே , பின்னலைச் சுழட்டிண்டே கர்ப்ப ஹ்ரகத்துக்குள் , அந்த சிரிப்பு '

செவிகளைப் பொத்தியவண்ணம் மரண அடி  பட்ட விலங்கு போல் ஐயா அலையாடினார்.

 

நமது மெய் அதிரவைக்கும் விவரிப்பு அல்லவா இது.

 

அடுத்து அய்யாவின் தம்பியின் அரற்றல். 'அம்பாள் வந்தது தெரியாமல் பேயைப் பார்த்ததாக அலறி உளறி விட்டானே தம்பி '  என்ற அவரின் கோபம். அதன் பின் ஐயா ஒரு வாரம் படுக்கையில் கிடந்து எழுந்தவர் ஒரு நாள் போனவர் திரும்பி வரவேயில்லை என்று முடிகிறது கதை.

கடைசியில் ஒரு வரி. 

'சீ 'ன்னு சுறா மீனுக்கு அதன் மண்டையில் தட்டிக் காட்டுவான் மன்னன்.  என்கிறார் லா ரா.ஐம்பொறிகளுக்கும் விருந்து கொடுத்து விட்டு ஆறாம் பொறிக்கும் ஒரு விடுகதை கொடுத்து முடிக்கிறார். 

பண்டிதராய் இருந்தாலும் அம்பாள் உபாசகராய் இருந்தாலும்  மனைவிக்கு துரோகம் செய்த தம்பியை விட , இளம் வயதிலேயே மனைவியை இழந்தாலும்  கடைசி வரை ஒழுக்கமாய் இருந்து அம்பாளே வந்தாலும் பெண் பேய் என்றே நினைத்த  அண்ணனுக்கே அம்பாள் தரிசனம் தந்தாள் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

 

அந்த மாபெரும் எழுத்து மேதை லா ரா அவர்கட்கு எனது வணக்கங்களை சமர்ப்பித்து , வாய்ப்பளித்த அழகியசிங்கருக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்.        ------------------------------நாகேந்திரபாரதி

My E-books in Tamil and English 


2 கருத்துகள்:

மரம் பேசுகிறேன் - கவிதை

 மரம் பேசுகிறேன் - கவிதை  ------------------------------------------------ (ஜூன் 5 , சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பைந்தமிழ் ( greentamil.in )...