பெய்யெனப் பெய்யும் மழை - வெண்பாக்கள்
--------------------------------------------------------------------------
( நவீன விருட்சம் நிகழ்வில் 'பெய்யெனப் பெய்யும் மழை ' என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டு எழுதி வாசித்த வெண்பாக்கள் )
குறள் வெண்பா
---------------------------
தொய்விலா எண்ணம் துணையெனக் கொண்டிடில்
பெய்யெனப் பெய்யும் மழை
சிந்தியல் வெண்பா
--------------------------------
துய்ப்பதும் தூர்ப்பதும் ஏய்ப்பதும் நோக்கமாய்
எய்வது என்றே இருந்திடில் எப்படிப்
பெய்யெனப் பெய்யும் மழை
இன்னிசை வெண்பா
------------------------------
எய்திடும் அம்பு இழுத்திடும் வில்லிடம்
செய்தியைக் கேட்டுச் 'சிடுக்'கெனப் பாய்தல்போல்
மெய்யதிர் மின்னல் இடியிடம் சொல்லிட
பெய்யெனப் பெய்யும் மழை
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
----------------------------------------------------------
பொய்யெனப் போனதும் மெய்யென மாறலாம்
மெய்யென மீண்டதும் மாறிடலாம் - செய்வதில்
மெய்யதன் மேன்மை மிளிர்ந்திடும் காலத்தில்
பெய்யெனப் பெய்யும் மழை
இரு விகற்ப நேரிசை வெண்பா
------------------------------------------------------
வலியும் வருத்தமும் வாட்டிடும் கோலம்
அழியும் நிமிடத்தின் ஆழம் -கழிகின்ற
மெய்யதன் உண்மை மினுக்கிடும் கண்ணீரில்
பெய்யெனப் பெய்யும் மழை
பஃறொடை வெண்பா
------------------------------------
கொய்த மலருக்குக் கூந்தல் செடியாக
செய்த நிலவொன்று சேர்ந்த முகமாக
பொய்கைத் தகதகப்பைப் பூண்ட உடலாக
செய்கைச் சிறப்பெல்லாம் செந்தமிழ்ச் சொல்லாக
நெய்யாகத் தேனாக நெஞ்சாக நின்றவளே
பொய்யாகிப் போனதனால் பூத்திட்ட கண்ணீரும்
பெய்யெனப் பெய்யும் மழை
-------------------------------------------நாகேந்திர பாரதி
My E-books in Tamil and English
கொடுத்த ஈற்றடிக்கு, நீங்கள் எழுதிய வெண்பாக்கள் அனைத்தும் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்
பதிலளிநீக்கு