புதன், 16 மே, 2018

குவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை


குவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை 
------------------------------------------------------------------------------------------------------------------
நம்ம நண்பர் குவாலிட்டி விஷயத்திலே ரெம்பவே உஷார் பார்ட்டிங்க. எதையுமே ஒரு தடவைக்கு ரெண்டு தடவை இல்லே பத்து தடவையாவது சரி பார்த்துட்டுதான் வாங்குவாருங்க.

இவர் மனைவிக்கு நகை வாங்க போனா கூடவே ஒரு அப்ரைஸரையும் கூட்டிட்டு போவாரு. அவர் பார்த்து ஓகே சொன்னாதான் அந்தக் கடையிலே நகை வாங்கலாம். இல்லேன்னா அடுத்த கடை. ஒரு ஜோடி தோடு வாங்க எத்தனை கடை இப்படி நடக்கிறது. வெறுத்துப் போன இவரு சம்சாரம் இப்பல்லாம்  தனியாவே நகைக்கடைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. வேற என்னங்க பண்றது .

மளிகைக்கடைக்கு போனா , அங்கே பருப்பு , புளி , அரிசின்னு ஒவ்வொண்ணுக்கும் ஆயிரம் குறை சொல்லி அந்தக் கடைக்காரரை ஒரு வழி பண்ணிடுவாரு. இவரு சொல்றதை கேட்டு வந்திருக்கிற வாடிக்கையாளர்களும் நடையைக் கட்டுறாங்க. இப்பல்லாம், இவரு வந்தா கடைக்கார பையனே இவரை உள்ளே விடுறதில்லைங்க.

எலக்ட்ரானிக் கடையிலே வேற மாதிரி. ஒரு ஹெட் போன் வாங்கப் போனா அதிலே இருக்கிற ஒவ்வொரு பார்ட்டையும் பிரிச்சு போட்டு விளக்கம் சொல்லணும், அது தவிர கேட்டலாக் புத்தகம் முழுக்க படிச்சுக் காட்டணும் இவருக்கு. விளங்குமா .
  
வெளிக் கடைகளே இந்தப் பாடு படுதுன்னா, இவரு வேலை பார்க்கிற ஆபீஸ் எப்படி இருக்கும். இதிலே இவரு அந்த சாப்ட்வேர் கம்பெனியில் குவாலிட்டி மேனேஜர் வேற. இவர் கிட்ட வர்ற சாப்ட்வேர் கோட் எல்லாம் டெஸ்ட் முடிஞ்சு கஸ்டமர் கிட்டே போனதா சரித்திரமே இல்லைங்க. எல்லாம் டெவெலப்மெண்ட் டீமுக்கே திரும்பிடும். இதனாலே அந்தக் கம்பெனியோட   விற்பனை அளவும் லாபமும்  குறைஞ்சுக்கிட்டே போக ஆரம்பிச்சிடுச்சு .

காரணத்தை ஆராய்ச்சி பண்ணின  கம்பெனி தலைவரு கண்டு பிடிச்சாருங்க. நம்ம நண்பர் கம்பெனிக்கு வந்த நாள்லே இருந்து எந்த சாப்ட்வேரும் கம்பெனியை விட்டு கஸ்டமர் கிட்டே போகவே இல்லை. அப்புறம் என்னாச்சு. நம்ம நண்பரை கம்பெனியை விட்டு தூக்கிட்டாங்க. இப்ப வேற வேலை தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்காருங்க.

ஹலோ, உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது கம்பெனியில் இவருக்கு வேலை கிடைக்குமாங்க. என்னங்க. ஓடாதீங்க. நில்லுங்க.
-------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

3 கருத்துகள்: