ஞாயிறு, 14 ஜனவரி, 2018

பொங்கலோ பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை

         பொங்கலோ பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை 
  -----------------------------------------------------------------------------------------------------
'தேங்காயை நல்லா தட்டிப் பார்த்து வாங்குனீங்களோ ' கேட்டாள் மனைவி. 'முட்டிப் பாக்காததுதான் பாக்கி . ரெம்ப தடவை தட்டிப் பார்த்தாச்சு . இன்னும் கொஞ்ச நேரம் தட்டி யிருந்தா தேங்காய் ரெண்டா   உடைஞ்சிருக்கும் ' என்றோம் .

'இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. பொங்கலுக்கு பச்சரிசியோடு சேர்த்து பாசிப்  பருப்பு வாங்கி வரச் சொன்னா, சாம்பாருக்கு துவரம்  பருப்பு வாங்கிட்டு வந்திருக்கீங்க. கடைக்கார அண்ணாச்சி கிட்டே கொடுத்திருந்தா அவரே ஒழுங்கா எடுத்துக் கொடுத்திருப்பார் இல்லே' என்றாள்.

'இல்லே லிஸ்ட் பெருசா இருக்கே, நாமளும்  கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்னுதான் நானும் ஒண்ணு ரெண்டு  ஐட்டம் எடுத்தேன்
''அந்த ரெண்டாவது ஐட்டம்தான் வெல்லமா. தெரியுது. பாகு வெல்லம் போட்டிருந்தேன் .அச்சு வெல்லம்   வாங்கிட்டு வந்திருக்கீங்க. பாகு வெல்லம்தான் இனிப்பு கொஞ்சம் தூக்கலா இருக்கும்   '

நாம் மனசுக்குள் நினைத்துக் கொண்டோம் ' எந்த வெல்லம் போட்டா என்ன .சக்கரை வியாதி உள்ள நமக்கு கிடைக்கப் போவது என்னமோ கொஞ்சூண்டு பொங்கல் '
'என்ன சொன்னீங்க'
மனசோட பேசறதா நினைச்சுக்கிட்டு வாயை விட்டுட்டோமோ .
'அது ஒண்ணும் இல்லீம்மா.  மத்த சாமான்லாம் கரெக்ட்டா இருக்குதா'

' இது என்னங்க. ஒட்டடைக்குச்சி    மாதிரி. இதுதான் கரும்பா. கொஞ்சம் கட்டையா பாத்து வாங்கிருக்கக் கூடாது '  
'இல்லேம்மா , இப்ப கரும்பு விளைச்சல் சரி இல்லையாம். எல்லா கரும்பும்  இப்படித்தான் வருதாம் '.
'ஏதாவது விவசாயி பிரச்சினையை டிவியில் அரை குறையாக கேட்டுட்டு அடிச்சு விடுறது. பக்கத்து வீட்டிலே வாங்கி வந்திருக்கிற கரும்பைத்தான் நான் பார்த்துட்டேனே. ஒழுங்கா பார்த்து வாங்கணும்' என்று அலுத்துக் கொண்டாள்.

அவர் கூட அவர் மனைவியும் சேர்ந்து போயி வாங்கிட்டு வந்ததை இப்ப இவ கிட்டே சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா . நாம 'தனி ஒருவனா' ரெண்டு தோளிலேயும் ரெண்டு கட்டைப் பைகளை சுமந்துக்கிட்டு கையிலே இந்த கரும்பு வில்லை - இல்லை - கரும்புக் குச்சிகளை புடிச்சுக்கிட்டு ரோட்டிலே டிராபிக்கில்  நடந்து வர்றதை பாத்தவங்களுக்கு தெரியும் நம்ம பாவம்னு. சரி அதை விடுங்க.

இன்னமும் லிஸ்ட் அர்ச்சனை முடியலே. 'பச்சைப் பனங்கிழங்கு வாங்கிட்டு வரச் சொன்ன, அவிச்ச கிழங்கை வாங்கிட்டு வந்திருக்கீங்க.'
'இல்லேம்மா, பாவம், உனக்கு காலையிலே இருந்து ரெம்ப வேலை. உனக்கு இந்த அவிக்கிற சிரமத்தைக் குறைக்கலாம்னுதான். '

'ஆஹாஹா  , ரெம்பத்தான் சிரமத்தைக் குறைக்கிற கரிசனம். சாயந்திரம் வெளியிலே போயிட்டு வரக் கொஞ்சம் லேட்டானா பாலைக் காய்ச்சி ஒரு காபி போட்டுக் குடிக்கத் தெரியாது. நம்ம வந்ததும் காபி க்கு  லேட்டாயிடுச்சுன்னு முறைக்கிறது. ரெம்பத்தான் சிரமத்தைக் குறைக்கிறாங்களாம். '

'அது சரி . இது என்னங்க. பச்சை மொச்சை எண்ணிப் பாத்தா இருபது தான் இருக்கும் போலிருக்கு. '
'அது வந்து எல்லாக் காயும் கொஞ்சமா வாங்கிட்டு வரச் சொன்னியாஅதுதான் இதுதான் நூறு கிராம் ... ' என்று இழுத்தோம்.

'அவியலுக்கு பச்சை மொச்சைதான்  ஜாஸ்தி போடணும். அரைக் கிலோவாவது வாங்கி வந்திருக்கணும். எல்லாம் எழுதிக் கொடுக்கணுமா . தனக்குன்னு ..... ' என்று ஏதோ சொல்ல வந்தவள் நிறுத்திக் கொண்டாள்.
அந்த மரியாதை இருக்கட்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டோம்.

'என்னங்க இது. இஞ்சி கிழங்கு இருக்குது. மஞ்சள் கிழங்கை காணோம். அதுதானே , பொங்கல் பானையை சுத்திக் கட்ட வேணும்' என்றாள் .
'இல்லே  , இதுவும் மஞ்சளாய்த்தானே இருக்கு...' என்ற படி இஞ்சி தின்ற ஏதோ மாதிரி இழுத்து  நிறுத்தினோம்.

'சரி சரி மாத்த வேண்டியது , வாங்க வேண்டியது  எல்லாம் இன்னொரு லிஸ்ட் போட்டுக் கொடு ' என்று வாங்கிக் கொண்டு இன்னொரு நடை அண்ணாச்சி கடைக்கு நடந்தோம். இந்த முறை ஞாபகமாக அவர் மேல் இரக்கப் படாமல் எல்லா ஐட்டம்களையும் அவரையே எடுத்துக் கொடுக்க வைத்தோம்.

வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ஆச்சு. 'வாங்க வாங்க . பொங்கல் பொங்கப் போகுதுன்னு ' அடுப்படியில் இருந்து சத்தம். நாமும் அவசர அவசரமா போயி நிக்கிறோம். தண்ணீர் பொங்கி வர்ற மாதிரி வர்றது . போயிடுது . இப்படி நம்மளை கால் கடுக்க கால் மணி நேரம் நிக்க வச்சப்புறம் ஒரு வழியா ஒரு ஓரமா  நுரை பொங்கி வழியுற மாதிரி தெரிஞ்சதும் ' பொங்கலோ பொங்கல் 'ன்னு அவசரமா கோஷமிட்டுட்டு  வந்து காலாற உட்கார்றோம்.

அப்புறம் 'பூஜைக்கு தேங்காய் உடைக்க வாங்க ' ன்னு அழைப்புஇதிலேயாவது நமக்கு முதல் மரியாதை கிடைக்குது ன்னு சந்தோசப்பட்டுக்கிட்டு  போயி, தேங்காய் உடைச்சு, சூடம் காண்பிச்சு சாமி கும்பிட்டு , காலிலே விழற மனைவியை  தொட்டு தூக்கி குங்குமம் வச்சு ' வாழ்க வளமுடன்' ன்னு சொல்றோம். ஏதோ ஒரு நிமிட சந்தோசம். இதுக்குத்தானே ரெண்டு தடவை கை கடுக்க பைகள் சுமந்து , கால் கடுக்க படியேறி வந்தோம் .

அப்புறம் வர்றது தாங்க ஆன்டி- கிளைமாக்ஸ் .. சாப்பிட உட்கார்ற நம்ம தட்டிலே வந்து விழறது. ஒரு டீ ஸ்பூன் சக்கரைப் பொங்கலும், ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிறதுக்கு   ஒரு துண்டு சக்கரை வள்ளிக் கிழங்கும். அப்புறம் வழக்கமான கைக்குத்தல் அரிசி சோறும் கொஞ்சம் காய்கறியும்இந்த சக்கரை வியாதிக்காரங்களுக்கு இதுதாங்க ' பொங்கலோ பொங்கல்   '
-----------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


15 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. சுடச்சுட பொங்கல் வாழ்த்துக்கள்!

  அருமை.

  அன்புடன் ருத்ரா

  பதிலளிநீக்கு
 4. மனம் நிறைந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்,,,/

  பதிலளிநீக்கு
 5. ஹா ஹா ஹா ஹா..நல்ல பொங்கலோ பொங்கல்....!!!

  ரசித்தோம்

  பதிலளிநீக்கு
 6. நக"ச்சுவை"பொங்கல் விருந்து ரொம்ப நல்லா இருந்த து.

  பதிலளிநீக்கு