வியாழன், 20 அக்டோபர், 2016

அதிகாலைக் கனவு - நகைச்சுவைக் கட்டுரை

அதிகாலைக் கனவு - நகைச்சுவைக் கட்டுரை 
----------------------------------------------------------------------------------------------------------
இந்த அதிகாலைப் பொழுது எப்படி இருக்கும்னே ரெம்ப நாளா தெரியாம இருந்துச்சுங்கநம்ம காலையிலே ஒன்பது மணிக்குத்தானே சாவகாசமா எந்திரிப்போம். எந்திரிச்சு அவசர அவசரமா குளிச்சுட்டு சாப்பிட்டு ஓடுற பஸ்ஸிலே இடிச்சுப் பிடிச்சு ஏறி வேர்த்து விறுவிறுத்து பத்து மணி ஆபீசுக்கு பத்தே காலுக்கு உள்ளே நுழைஞ்சு மேனேஜர் கிட்டே திட்டு வாங்கிக்கிட்டே அட்டெண்டன்ஸிலே கையெழுத்து போடுறது பழக்கம் ஆயிடுத்தே.

ஒரு நாள் என்னமோ தெரியலீங்க. காலையிலே அஞ்சு மணிக்கே முழிப்பு வந்திடுச்சு . அதுக்கு பிறகு தூக்கமே வரலை. சரி, வெளி உலகம் எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாம்னு வெளியே போயி நடந்தா , ஆஹா, ஆஹா.

அந்த லேசான இருட்டிலே நடக்கிறப்போ சுகமான காத்து சூப்பர். டிராபிக் இல்லாததால்  சத்தமும்  இல்லை . பெட்ரோல்  வாசமும்  இல்லை மரத்தில் இருந்து பறவைகளின் கீச் கீச் சப்தம்ஒண்ணு ரெண்டு  பேரு தொந்தியும் தொப்பையுமா ஓடிக்கிட்டு இருக்காங்க. அவங்க ஓட்டத்துக்கு ஏத்த மாதிரி அந்த தொந்தியும் உருண்டு ஓடுது . அப்புறம் சைக்கிள் பெல் சத்தம். அடுக்கிய தினசரி பேப்பர்களை பின்னாலே வச்சுக்கிட்டு சைக்கிள் பையன்கள். பால் பாக்கெட்டுகள் டப்பாக்களை  வேனில் இருந்து இறக்கிக்கிட்டு இருக்காங்க.

 பக்கத்து டீக்கடையில் இருந்து சுகமான தேநீர்   வாசம்போயி ஒரு டீ சாப்பிட்டா   அது என்னமோ தெரியலீங்க, அந்த இதமான குளிருக்கும் அந்த சூடான டீக்கும் என்ன ஒரு பொருத்தம். இந்த டீயை தினசரி சாயந்தரம் இதே டீக்கடையில் சாப்பிட்டுத்தான் இருக்கோம். ஆனாலும் இந்த காலை நேர வாசம் சேர்ந்து அது ஒரு ருசிங்க.

அப்படி ஒரு அரை மணி நேரம் நடந்து இயற்கையை ரசிச்சுட்டு திரும்பி வந்து ' நான் திரும்ப வந்துட்டேன்னு ' நம்ம படுக்கை கிட்டே சொல்லிட்டு படுத்தா ஒன்பது மணிக்குத்தான் முழிப்பு. திரும்ப அதே அவசரம்  அவசரம் .

சரி, இனிமே  தினசரி அஞ்சு மணிக்கே எந்திரிச்சுடணும். திரும்ப வந்து படுக்கக் கூடாது ன்னு ஒரு தீர்மானம் போட்டுட்டு அஞ்சு மணிக்கு அலாரம் வச்சிட்டு சீக்கிரம் படுக்கப் போயாச்சு. காலையிலே அலாரம் அடிக்குது. எந்திரிக்க முடியலீங்க. போர்வையை இழுத்துப் போத்திக்கிட்டு தூங்கத் தான் தோணுது. ம்ஹூம். முடியலே. அலாரத்தை ஒரு அழுத்து அழுத்திட்டு தூங்கியாச்சு. மறுபடி ஒன்பது மணிக்குத்தான் முழிப்பு.

தினசரி இதேதான் . ஆனா  அன்னைக்கு  அதிகாலை அஞ்சு மணிக்கு எந்திரிச்சது  மட்டும்  மனசிலே  பசுமையா  இருக்குது. தூய்மையான காத்து. அமைதியான சூழல். பறவைகளின் சப்தம். எல்லாத்துக்கும் மேலே அந்த அதிகாலை டீ. ஆனா அனுபவிக்கத்தான் கொடுத்து வைக்கலீங்க. அது அதிகாலைக் கனவாகவே இன்னமும் இருக்கு. என்ன செய்ய
-----------------------------------------------------------------நாகேந்திர பாரதி   


2 கருத்துகள்: