வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஒன் லைன் சினிமா - நகைச்சுவைக் கட்டுரை

ஒன் லைன் சினிமா  - நகைச்சுவைக் கட்டுரை 
------------------------------------------------------------------------------------------------------------------
டைரக்டர் ஒன் லைனிலே கதை சொல்ல ஹீரோ ஓகே சொல்லிட்டாருன்னு படிச்சுட்டு அந்த படத்தை பாக்குறப்போ அந்த ஒன் லைன் என்னன்னு ஈஸியா புடிச்சுட முடியுதுங்க.

'ஹீரோ உலகம் சுத்துறாரு' இந்த ஒன் லைன் பெரும்பாலான ஹீரோக்களுக்கு புடிச்சுப் போயிடுங்க. ஹீரோ அமெரிக்கா போகலாம், லண்டன் போகலாம். பாரிஸ் போகலாம். அங்கே எல்லாம் ஹீரோயின் கூட டான்ஸ் ஆடிட்டு பாட்டு பாடிட்டு , வில்லன் கூட சண்டை போட்டுட்டு திரும்பி இந்தியா வந்து கல்யாணம் பண்ணிக்கலாம். ரெண்டு மணி நேர படம் ஆக்கிடலாம்.

அடுத்த ஒன் லைன். 'ஹீரோ ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கிறார்’. பள்ளிக்கூடத்தில் துரத்தலாம். காலேஜில்  துரத்தலாம். ரோட்டிலே துரத்தலாம். வீட்டிலே துரத்தலாம். சப்ளிமெண்டா  பாட்டு, டான்ஸ், சண்டை. எல்லாத்துக்கும் காரணம் வேணுமா என்னா. ரெண்டு மணி நேர படம்.

இன்னொரு ஒன் லைன். 'இன்ஸ்பெக்டர் ரவுடி யாக  மாறிடுவாரு ' . ஆக்சன் ஹீரோவா புடிச்சு சண்டைப்படம் எடுத்துடலாம். ஹிந்தி வில்லன், இங்கிலிஷ் வில்லன் எல்லாரையும் புடிச்சு போட்டுடலாம். கப்பல்லே சண்டை, விமானத்தில் சண்டை . ஒரே அடிதடி தான். ரெண்டு மணி நேரத்துக்கு.

அப்புறம் இருக்கவே இருக்கு  பேய்ப் பட ஒன் லைன். ' ஒரே ஒரு பங்களாவில் ஒரே ஒரு பேயாம்' . ஹீரோயினைப் பேயாக்கிட்டு  , ஹீரோவைப் பேய் விரட்டுறவனா ஆக்கிட்டு  இருட்டையையும்   டமா  டமா மியூசிக்கையும் போட்டு  ரெண்டு மணி நேர படமாக்கிடலாம்.

நகைச்சுவைப் படம் வேணுமா ' கொஞ்சப் பேரு  உதைக்கிறாங்க. மத்தப்  பேரு வேடிக்கை பாக்கிறாங்க.   'சட்டையை கிழிச்சு விடலாம். பேண்டை கிழிச்சு விடலாம். வேட்டியை கிழிச்சு விடலாம்கிராமப் படம்னா வயக்காட்டிலே கிழிக்கலாம். டவுன் படம்னா மால்லே கிழிக்கலாம்.

எல்லா ஒன் லைன் படங்களுக்கும் பொதுவா டாஸ்மாக் பாட்டு ஒண்ணு வச்சுடலாம். ஹீரோயினையே  கவர்ச்சியா ஆட விட்டுடலாம்.

கொஞ்சம் ஹை கிளாஸ் படம் மாதிரி காண்பிக்கணும்னா  யாராவது ஒரு பழைய  பிரபல எழுத்தாளர்கிட்டே அவரு பேரை யூஸ்  பண்ணிக்கிறோம்னு சொல்லிட்டு கதை உதவின்னு அவரு பேரைப் போட்டு விட்டுடலாம். இதுக்கும் மேலே நம்மளாவே ஒரு புரளியை கிளப்பி விட்டுடலாம், ' டசுக் புசுக்' ங்கிற கொரிய படத்தை காப்பி அடிச்சு எடுத்திருக்குன்னு  .

இப்படி ஒன் லைன் படமாவே வாரத்துக்கு பத்து வரது. அதிலே ஒண்ணு ரெண்டு படம், பத்து நாள் ஓடிட்டாலே 'வெற்றி விழா' தான். ' நன்றி விழா' தான்.
-------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


3 கருத்துகள்: