செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

பாடாய்ப் படுத்துற பாட்டு

பாடாய்ப் படுத்துற பாட்டு
----------------------------------------------
ஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒரு ஆசை இருக்கிற மாதிரி எனக்கும் பிரபல பாடகர் ஆகணும்கிற ஆசை வந்ததிலே எதுவும் தப்பு இருக்கிறதா எனக்குத் தெரியலீங்க.

பாத்ரூமில் பாடுறப்போ சில சமயம்  என் குரல் யேசுதாஸ் குரல் மாதிரி இருக்கிறதா எனக்குத் தோணும். அந்த நேரத்திலே எங்கிருந்தோ  ரேடியோ எப் எம்மில்  யேசுதாஸ் பாட்டு கேட்டது லேசா ஞாபகம் இருக்கு, அதே மாதிரி சில சமயம் என் குரல் எஸ் பி பி  மாதிரி ஹரிஹரன் மாதிரியெல்லாம் ஒலிக்கும். பின்னணியில்  எப் எம் ரேடியோவில் அவங்க பாடியிருக்கலாம். . அதை பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லைங்க. பல அருமையான பாடகர்களோட குரல்கள் கலந்த ஒரு கம்பீரக் குரல் எனக்கு இருக்குன்னு ஒரு தன்னம்பிக்கை எனக்கு வந்திருச்சு.

முழு நேர பாடகரா ஆறதா முடிவு பண்ணிட்டேன். கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டா குரல் வளம் இம்ப்ரூவ்  ஆகும்னு சொன்னாங்கயேசுதாஸ், ஹரிஹரன் எல்லாம் அப்படி வந்தவங்க தானாமேசரின்னுட்டு கர்நாடக சங்கீதம் கத்துக்கிட ரெண்டு மூணு இடத்திலே முயற்சி பண்ணினேன். அவங்கள்லாம் அம்பது வயசுக்கு மேலே ஆனவர்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கிறது இல்லைன்னு சொல்லிட்டாங்க. நம்மளோட கலைத்தாகத்தை யாரும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியலையேன்னு ரெம்ப வருத்தமா இருந்துச்சு.

கடைசியா எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டிலே நேத்து ஒரு போர்டு மாட்டியிருந்துச்சு. ' இங்கே கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுக்கப்படும்'  'ஆஹா. பக்கத்திலேயே வந்தாச்சு, ரெம்ப சவுகரியமாய் போச்சு ' ன்னு உள்ளே நுழைஞ்சேன். ஒரு பாட்டிம்மா இருந்தாங்க. நான் விஷயத்தைச் சொன்னதும்பீஸ் விஷயங்களை ரெம்ப விவரமா சொல்லிட்டு நாளைக்கே வரலாம்னு அவசரமாய்ச் சொன்னாங்க. சரி. யார் சொல்லிக் கொடுக்கிறதுன்னு கேட்டேன். ' 'ஏன் , நானேதான்' ன்னு  சொல்லிட்டு பல் செட்டை எடுத்து மாட்டிக்கிட்டு ஒரு பாட்டு பாடினாங்க. அந்த நடுக்கத்திலும் ஏதோ ஒரு நளினம் இருந்த மாதிரி தோணுச்சு. வேற வழி. நமக்கு சொல்லிக் கொடுக்கிறேன்னு அவங்க சொன்னதே பெருசுன்னு நினைச்சுக்கிட்டேன். இதுக்கு மேலே அவங்க அந்தக் காலத்திலே  பெரிய நாயகியோ சின்ன நாயகியோ அந்தச் சினிமாப் பாடகியோட எல்லாம் கோரஸ் பாடி இருக்காங்களாம். ' மகிழ்ச்சி' ன்னு சொல்லிட்டு மறு நாளே சேர்ந்துட்டேன்.

என்னமோ ' ரி நி ' ஏழு ஸ்வரம் தானேன்னு அலட்சியமாய் போனா , ஒண்ணொண்ணுக்கும் ஏதோ  'ஆதாரம் , மத்தி , ஆகாசம் ' ன்னு மூணு வகை இருக்காம். ஏழு மூணு இருபத்தொண்ணையும் மாத்தி மாத்தி போட்டு ஏகப்பட்ட ராகம் வருமாம்அவங்க பல் செட்டோட கஷ்டப்பட, நான் பல்லோடவே கஷ்டப் பட்டேன்.  'சரி' ன்னு போனவன் 'கமா' போடாமே  சரிகமாவுக்கு புல்  ஸ்டாப் போட்டுட்டு வந்துட்டேன்.

இந்த மெல்லிசை , சினிமாப் பாட்டுதான்  நமக்கு சரிப்பட்டு வரும்னு தோணிச்சு .எம் எஸ் விஸ்வநாதன் இளையராஜா ரஹ்மான் ன்னு ஒவ்வொருத்தர் இசை அமைச்ச பாட்டையும் பிராக்டிஸ்  பண்ண ஆரம்பிச்சேன். அமைதியா ஆரம்பிச்சு இனிமையா மாத்தி, வேகமா பாடி நல்லா பிராக்ட்டிஸ் பண்ணினேன். நண்பர்கள் சொன்னாங்க. ' இந்த டி வி புரோக்கிராமிலே பாட்டுப் போட்டி வைக்கிறாங்க. அதிலே கலந்துக்கிட்டு பாடி பரிசு வாங்கிட்டா சினிமா சான்ஸ் உடனே கிடைச்சிரும்'.

எப்படியோ சான்ஸ் புடிச்சு நுழைஞ்சு மேடைக்கு போயிட்டேங்க. நடுவர்களை பார்த்தேன். பழைய பாடகர்கள் சில பேர் இருந்தாங்க. 'சரி இப்ப இவங்க குரலும் நம்ம குரல் மாதிரிதானே இருக்கு. நம்மளை செலக்ட் பண்ணிருவாங்க.' ன்னு நினைச்சு பாட  ஆரம்பிச்சேன். பாதியிலே நிறுத்திச் சொல்லிட்டாங்க. லகர ளகர ழகரம் வித்தியாசம் இல்லாம பாடுறேனாம்போகச் சொல்லிட்டாங்க. ஏங்க , நான் பாடத்தானே வந்தேன்தமிழ்ப் பேச்சு பேசவா வந்தேன். பல்லிக் கூடத்திலே சாரி பள்ளிக் கூடத்திலே தமில் மறுபடி சாரி தமிழ் வாத்தியார் எவ்வளவோ சொன்னாருங்க. நாக்கை வளைச்சு  பேசச் சொல்லி , விரலை வளைச்சி எழுதச் சொல்லி. ம்ஹூம் வரலீங்கஅப்ப அதை  ஒரு பொருட்டாவே மதிக்கலீங்க. இப்ப பாருங்க. என்னோட வாழ்க்கையின் லட்சியத்துக்கே இடைஞ்சலா வந்திடுச்சு.

சரி, வேற வழியே  இல்லே. பேசாம இங்கிலிஷ் பாட்டு பிராக்ட்டிஸ்  பண்ணி இங்கிலிஷ் பாடகராய் ஆக வேண்டியதுதான் போலிருக்கு. ஆனா அங்கேயும்  எஸ்ஸை எத்தனையோ விதமா உச்சரிக்கிறாங்க. அதுவும் முடியலீங்க. ஒழுங்கா நம்ம தமிழ் ல ள ழ வை உச்சரிக்க  உருப்படியா கத்துக்கிட்டு பெரிய தமிழ் பேச்சாளரா  ஆறதுன்னு முடிவு பண்ணிட்டேன். பார்க்கலாம். 
----------------------------------------------------------நாகேந்திர பாரதி

3 கருத்துகள்:

 1. #'சரி' ன்னு போனவன் 'கமா' போடாமே சரிகமாவுக்கு புல் ஸ்டாப் போட்டுட்டு வந்துட்டேன்#
  வாழ்க்கையில் செய்த நல்ல காரியம் இது ஒண்ணாத்தான் இருக்கணும் :)

  பதிலளிநீக்கு
 2. தமிழ் வராத வாயால
  ஆங்கிலம் வருமா?
  நாக்கை வளைத்து நிமிர்த்தி
  வாயிலே தமிழ் வெளிப்பட
  வழிகாட்டினால்
  பதிவுக்கு வெற்றியே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதாங்க. கடைசியிலே இதைச் சேர்த்துட்டேன் .
   'ஆனா அங்கேயும் எஸ்ஸை எத்தனையோ விதமா உச்சரிக்கிறாங்க. அதுவும் முடியலீங்க. ஒழுங்கா நம்ம தமிழ் ல ள ழ வை உச்சரிக்க உருப்படியா கத்துக்கிட்டு பெரிய தமிழ் பேச்சாளாரா ஆறதுன்னு முடிவு பண்ணிட்டேன். பார்க்கலாம். '

   நீக்கு