சனி, 27 ஆகஸ்ட், 2016

போகே மானைத் தேடி

போகே மானைத்  தேடி
------------------------------------
பொன் மானைத்  தேடி அலைஞ்ச காலம் போயி போகே மானைத்  தேடி அலையும் காலம் வந்தாச்சு .

சூப்பர் ஸ்டைலிலே நமக்கு ஒரு இளைய அவதாரத்தை ஏற்படுத்திக்கிட்டு விளையாட்டுக்குள்ளே நுழைஞ்சிருவோம் . ஆரம்பிக்கிறப்போ ரெம்ப ஜோராய்த்தான் நம்ம   மொபைலிலேபக்கத்திலே காண்பிக்கிற   போகே  ஸ்டாப் புக்குள்ளே     போயி  போகே முட்டை, போகே பந்து, போகே லோஷன் எல்லாம் வாங்கிட்டு ரெம்ப சுறுசுறுப்பா  ஆரம்பிப் போம்.

மொபைலைப்  பாத்துக்கிட்டே நடந்து போயி, ரெம்பப் பேரை முட்டிச் சாய்ச்சிட்டு  ' எருமை மாடு' ன்னு திட்டு வாங்கிட்டு  அடுத்த போகே ஸ்டாப், பார்க்கில் போயி ஓரமா நின்னு போகே பந்தைப் போட்டு   ஒரு போகே மானைப் புடிக்கிறதுக்குளேயே காலும், கைவிரலும் வலிக்க ஆரம்பிச்சிடும்.

பரிசாய்க் கிடைக்கிற கேண்டீஸை வச்சிக்கிட்டு பவரையும் லெவலையும் கூட்டிக்கிட்டே   போறதுக்கு எத்தனை இடத்துக்கு போறது . கோயில், சர்ச் , மசூதின்னு எம்மதமும் சம்மதம்னு சுத்திக்கிட்டு திரிவோம்  .

வந்தது தான்  வந்தோம்னு கோயிலுக்கு உள்ளே போயி சாமி கும்பிட்டு வர்றதாலே இப்பல்லாம் கோயில்லே இளைஞர் கூட்டம் அதிகம் ஆயிடுச்சு. நம்மளைத்தாங்க இளைஞர்ன்னு சொல்லிக்கிறோம் . படிக்கிற யாருக்கு நம்ம வயசு தெரிய போகுது. சாமி கும்பிட்டு வந்து முந்தியெல்லாம் செருப்பைத்தான் தேடுவோம். இப்பெல்லாம் மொபைலைத் திறந்து போகே மானைத்தான் தேடுறோம்.

அடுத்த போகே ஸ்டாப் திருமண மண்டபம். அங்கே போனா நம்ம பழைய காதலி புள்ளை குட்டிகளோடு வந்திருப்பா . நம்ம ' எங்கிருந்தாலும் வாழ்க' ன்னு            '  இங்கிருந்தே ஆட்டோகிராப் ' வாழ்த்து வாழ்த்திட்டு அடுத்த போகே மானைப்    பிடிப்போம்.

 அடுத்து பீச்சுக்குப் போனா அவனவன் அஞ்சு லெவல் முடிச்சுட்டு போகே ஜிம்மில்  விளையாடிக்கிட்டு இருப்பான். நாமோ லெவல் மூணிலேயே திணறிக்கிட்டு இருப்போம். அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிப் போயி ஒரு வழியா  தேவையான பவர் லெவெலோட போகே ஜிம்முக்குள்ளே நுழைவோம்.

 ஏதாவது ஒரு டீமில் சேர்ந்து விளையாடுறப்போ தான் நம்ம டீம் ஆளுங்க ' அவனா நீ' ன்னு நம்மளையும், நம்ம மொபைல் அவதாரத்தையும் மாறி மாறிப் பார்ப்பாங்க.  கொஞ்சம் கஷ்டமாய்த்தான் இருக்கும். அதுக்காக நம்ம சுய ரூபத்தையா அவதாரமா போட முடியும்.  பசங்க பயந்து போயிற மாட்டாங்க ! .

நம்மளும் விடாம கேம் விளையாடி  கிடைச்ச போகே மானையெல்லாம் கோட்டை விட்டுட்டு மறுபடி மானைத் தேடி மச்சான் வர போறான்னு புறப்பட வேண்டியதுதான்.

என்ன. அங்கே இங்கே ஓடிப் போயி உடம்பு இளைச்சது. போகே ஸ்டாப் மாலுக்குள்ளே போயி பர்ஸ் இளைச்சது. இதுதான் இந்த விளையாட்டின் சுக துக்கம்.

மத்தபடி பத்து போகேமானைப் புடிக்கவே  படாத பாடு பட வேண்டியதா இருக்கு. இதுலே நம்ம எப்படி நூத்து அம்பத்தி ஒண்ணு போகே மானைப் பிடிச்சு  போகே டெக்ஸுக்குள்ளே போயி  ஜெயிக்கிறது . சீச்சீ இந்தப் பழம் புளிக்குதுங்க.

--------------------------------------- -------------------நாகேந்திர  பாரதி

1 கருத்து: