செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

வாட்ஸ் அப் உலகம்

வாட்ஸ் அப் உலகம்
-------------------------------
இந்த வாட்ஸ் அப் குரூப்பிலே குட் மார்னிங்க் , குட் நைட்  ன்னு கூகிளிலே சுட்ட ஏதோ ஒரு பொன் மொழியோ வெள்ளி மொழியோட     நிறுத்திக்கிறவங்க பரவாயில்லைங்க. ஆனா இந்த கருத்து  சிகாமணிகள் சில பேரு இருக்காங்க பாருங்க. இவங்க படுத்துற பாடு தாங்க முடியலீங்க.

அந்தக் கால அறிஞர்கள் முதல் இந்தக் கால நடிகர்கள் வரை என்ன சொல்லியிருக்காங்கன்னு அதே கூகிள் கடவுள் கிட்டே கேட்டு வாங்கி போடுவாங்க பாருங்க. நம்ம போன் ஸ்கிரீனில் கீழே கீழே போய்க்கிட்டே இருக்கும். அதை படிச்சு முடிக்கிறப்போ நம்ம குட் மார்னிங்க் பிரெண்ட் வந்து குட் நைட் கமெண்ட்  போட்டுருவாரு . அவ்வளவு நீளம். அவ்வளவு நேரம் ஆகும் படிச்சு முடிக்க.

இது தவிர ஆடியோ பைல்லுன்னு வேற அப் லோட்  பண்ணுவாங்க . அதை அமுக்கி விட்டா அது இங்கிட்டும் அங்கிட்டும் கால் மணி நேரம் ஓடும். பப்பர் பண்ணுதாம். ஒரு வழியா முடிச்சு நம்ம நண்பரோட டப்ஸ் மாஸ் பேச்சோ பாட்டோ  ஒரு அரை மணி நேரம் ஓடும். கேட்கணும். வேற வழி. நண்பேண்டா .

இவங்க பரவாயில்லைங்க. சில சுய பிரதாப சரித்திரங்கள்  இருக்கே . அப்பப்பா .இவங்க டூர் போனது, கோயிலுக்குப் போனது, கல்யாணத்துக்குப் போனது, கருமாதிக்குப் போனது ன்னு  ஒரே போட்டோவாய்ப் போட்டு தாளிச்சிருப்பாங்க. அது பாட்டுக்கு ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து விழுந்துக்கிட்டே இருக்கும். கொஞ்சம் பொறுமையா காத்திருக்கணும். எல்லாம் ஓபன் ஆறதுக்கு.

அடேய். செத்துப் போன பெரியவர் கூட எல்லாம செல்பீ  எடுத்து போடறது. . இது தவிர அவரைப் பற்றிய குறிப்புகள். நல்லது கெட்டது எல்லாமே. மனுஷன் போயி சேந்துட்டாரு . இப்பப் போயி அவரு பண்ணது இது  சரியில்லே  அது சரியில்லே ன்னு . மனுஷன் செத்தாக் கூட விட மாட்டீங்களா உங்க ஆராய்ச்சியை .

இது தவிர அரசியல், சினிமான்னு சில பேரு ஒரே அடிதடிப் பேச்சு. இதுக்கு நடுவிலே யாரோ ஒரு புண்ணியவான் சமயப் பெரியவர் ஒருத்தரு பொன் மொழியை எடுத்து விட்டுருப்பாருஅது இந்த சண்டைப் பேச்சுக்கு நடுவிலே கிடந்து தத்தளிக்கும்.

நம்ம பிரயாணம் பண்ணுறப்போ தெரியாம இந்த குரூப்புகளிலே நுழைஞ்சு படிக்க பாக்க கேக்க ஆரம்பிச்சுட்டோம்னு வச்சுக்குங்க. அவ்வளவுதான். நம்ம இன்டர்நெட் பேலன்ஸ் காலியாகி சார்ஜும் போயி அவசர போன் கூட பண்ண முடியாம , வீட்டுக்குப் போயி மனைவி கிட்டே ' எத்தனை தடவை   போன் பண்ணுறது . தொடர்பு எல்லையைத் தாண்டி அப்படி என்ன தொடர்புலே இருந்தீங்க ' ன்னு பேச்சு வாங்க வேண்டியிருக்கும்.

அது சரி, இவ்வளவு சிரமம் இருக்குதுல்லே  அப்புறம் ஏன் இந்த வாட்ஸ் அப் குரூப்பிலே இருக்கணும்னு கேக்கறீங்களா. அப்பப்போ நம்மளும் ஆடியோ வீடியோ, இமேஜ் ன்னு போட்டுட்டு நண்பர்கள் கமெண்ட்டுக்கு காத்துக் கிடக்கிறோம்லே. அதுக்குதான்.

---------------------------------------------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்: