திங்கள், 30 மே, 2016

ஆள் மாறாட்டம்

ஆள் மாறாட்டம்
---------------------------------
தவறான ரிசெப்ஷன்   ஹாலிலே  நுழைஞ்சது   நம்ம தப்பில்லேங்க . ஒரே தெருவிலே ஏகப்பட்ட  ஹால் இருந்து , நம்ம நண்பன் பேர் மாதிரியே மணமகன் பேர் இருந்து, ரிசெப்ஷன் ஹாலிலே இருக்கிற பெண்கள் புன்னகையோடு நம்மை வரவேற்று பூங்கொத்தும்   கொடுத்தா நாம என்ன பண்ண முடியும் சொல்லுங்க.

உள்ளே நுழைஞ்சப் புறம்  பேரை சரி பார்க்கலாம்னு நினைச்சா அங்கே புன்னகையோட திரியற மக்கள் கூட்டத்தைப் பார்த்தப்புறம் அப்படிக் கேக்கறதே அவங்களுக்கு ஒரு அவமரியாதையா ஆயிடுமோன்னு   வேறே பயமாயிடுச்சு     .

பேசாம போயி கடைசி வரிசையிலே  உட்கார்ந்து மூக்குக் கண்ணாடியைத்   தேடினா காணோம். கண்ணாடி போட்டுப் பார்த்தாலே நம்ம கண்ணு பூஜ்யம். கண்ணாடி இல்லாம மைனஸ்ஸுக்குக்   கீழேகடைசி வரிசையிலே இருந்து பாத்தா பையன் மங்கலா, பேய் மாதிரித் தெரியிறான்.

இதுக்கு நடுவிலே நமக்கு ஏகப்பட்ட தொந்தரவுகள். பக்கத்து டைனிங் ஹாலிலே இருந்து அருமையான வாசம் வந்து தொந்தரவு செய்யுது . நம்மளை மாதிரியே அந்த வாசத்தாலே இழுக்கப்பட்ட பல பேரு அதை நோக்கி நடக்க ஆரம்பிக்க நம்ம கால்களும் அவர்கள்  கால்களைப் பின் தொடர்ந்தன.

டைனிங் ஹாலிலே அருமையான காட்சி. வித விதமான காய்கறிகள், வித விதமான சாப்பாட்டு வகைகள், ஐஸ் கிரீம்கள், சாக்கலேட்கள் , . எல்லாத்தையும் ஒரு பிடி பிடிச்சுட்டு  'கம கம' வாயோடும் 'கட முட' வயிறோடும் திரும்பி வந்து பரிசு கொடுக்கிற கியூவிலே நின்னோம்.

மேடைக்குப்   பக்கத்திலே போனதும் பையன் முகத்தை உத்துப் பார்க்கிறோம். இவன் நம்ம நண்பன் இல்லேமணமகன் முகத்திலே பூசி இருக்கிற முகப் பூச்சை எல்லாம் மானசீகமா துடைச்சிட்டு நுழைஞ்சு பாத்தாலும் இந்த முகம் நம்ம நண்பன் முகம் இல்லே .

இதுக்குள்ளே மக்கள் நம்மை பிடித்து தள்ளி மணமக்கள் முன்னே கொண்டு போய் நிறுத்திறாங்க . நம்ம முழிச்சுக்கிட்டு நிக்கறப்போ பொண்ணோட அப்பா போட்டார் பாருங்க ஒரு போடு . நம்மளை மணமக்கள் கிட்டே அறிமுகப் படுத்தி வைக்கிறாரு.

' இவரு நம்ம ஒண்ணு விட்ட  மச்சானோட தம்பியோடு தாத்தாவோட  அண்ணன் பேரன் ' ன்னுட்டாருஹால் மாறாட்டத்திலே நடந்த  ஆள் மாறாட்டத்தை மகிழ்ச்சியோடு ஏத்துக்கிட்டு மணமக்களுக்கு பரிசுப் பொருளைக் கொடுத்திட்டு,            அருமையான டின்னர் சாப்பிட்ட குற்ற உணர்ச்சியை ஏப்பம் விட்டு அழித்த படி , மண மேடையை விட்டு இறங்குகிறோம்.

-------------------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து: