திங்கள், 23 மே, 2016

ஓலைக் குடிசை

ஓலைக் குடிசை
-----------------------------
'பாத்து உள்ளே வாப்பு    , நெலப் படி இடிக்கும்'

குனிந்து நுழைந்து ஓலைத் தடுக்கில்
உட்கார்ந்து   பார்க்க  மண்ணுச் சுவற்றில்
ஆணியோடு சேர்ந்து அசைந்து கொண்டிருக்கும்
பாட்டனும் பாட்டியும் சிரிக்கும் புகைப்படம்

பக்கத்தில் சாய்ந்து ஆடிக் கொண்டிருப்பது
சின்ன வயதில் செத்துப் போன பெரியப்பா படம்
டவுசர் சட்டையோடு போட்டோ மேல் குங்குமத்தோடு

'பாலு தீந்திடுச்சு  , வரக் காப்பி போடறேன் '
ஓலையைப் பத்த வச்சு அடுப்புக்குள் சொருக
காப்பி வாசமும்  புகை  வாசமும்
ஓலைக் குடிசைக்குள்  சேர்ந்து நிரம்பும்

உடைஞ்ச  மண்சட்டி  அங்கங்கே  கிடக்கும்
என்ன கதைகள் இருக்கோ அதுக்குள்ளே
'பட்டணத்துக்கு  கூப்பிட்டா வர மாட்டேங்கிறே '
'பாட்டன்   உசிரு இங்கே ஒட்டிக்கிட்டு இருக்குய்யா'

பாட்டியின் பதிலோடு திரும்பும் போது
நிலைப் படி தலையிலே  இடிக்கும்
குட்டி அனுப்புவது பாட்டனாக இருக்குமோ?
--------------------------------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

3 கருத்துகள்: