வெள்ளி, 22 ஜனவரி, 2016

ஓடும் ரெயிலில் ஓசிப் பேப்பர்

ஓடும் ரெயிலில் ஓசிப் பேப்பர் 
------------------------------------------------------------------------------------------------------------
சில பேர் ஓடுற ரெயிலிலே ஒத்தைக் கையிலே தொங்கிக்கிட்டு இன்னொரு கையிலே எட்டா மடிச்ச நியூஸ் பேப்பரை படிச்சுக்கிட்டு வருவாங்க. நடுவிலே பக்கத்தை மடிச்சு மாத்தி  படிப்பாங்க  .ஏதோ மேஜிக் மாதிரி இருக்கும் .

நம்மளாலே அது மாதிரி எல்லாம் படிக்க முடியாததாலே கூட்டம் கொஞ்சம் குறைஞ்ச ரெயில் பெட்டியாப்  பாத்து ஏறுவோம். இடம் பாத்து உட்கார்ந்து பேப்பரை   விரிச்சு படிக்க ஆரம்பிப்போம். நம்ம ரெண்டு தோள்லேயும் உஷ்ணமா   மூச்சுக் காத்து வரும்நமக்கு ரெண்டு பக்கத்திலேயும் உட்கார்ந்திருக்கிறவங்க நம்ம தோள்லே முட்டுவாயை  வைக்காத குறையா நெருக்கி உட்கார்ந்து நம்ம பேப்பரை படிச்சுக்கிட்டு இருப்பாங்க.

இதுக்கு நடுவிலே ஒரு குரல் எதிர் சீட்டிலே இருந்து. 'சார். கொஞ்சம் பேப்பரை தூக்கிப் பிடிங்க. சரியாத் தெரிய மாட்டேங்குது.  ' எதிர் பக்கம் இருந்து படிக்கிறதுக்கு அவருக்கு வசதி பண்ணிக் குடுக்கணுமாம் .

அடுத்த பக்கம் திருப்பப் போனோம்னா அதிகாரக் குரல் ஒண்ணு கேட்கும். 'நாங்க இன்னும் படிக்கலைல . அதுக்குள்ளே திருப்புறீங்க' . இடது பக்கத் தோளர்இடது தோள் பக்கம் இருக்கிறதாலே அவரு தோளர் தானே.

நம்மளும் கொஞ்ச நேரம் பொறுத்து அவரு  சரின்னு சொன்ன பிறகு தான் அடுத்த பக்கம் பிரிக்க முடியும். இதுக்குள்ளே எதிர் சீட்டிலே இருக்கிறவர், ' சார் சார் ' அந்த சீட்டைப் பிரிச்சுக் குடுத்திட்டு   நீங்க பாட்டுக்கு ப்ரீயா படிங்க' .

                யாரு ப்ரீயாப்  படிக்கிறதுன்னு நமக்கே சந்தேகம் வந்துடும். இப்படி பாதிப் பேப்பர் சீட்டு சீட்டாய்ப் பிரிஞ்சு  பல பேர் கைக்குப் போயிடும். நம்ம ஒரே சீட்டைப் ப்ரீயாப் படிச்சுக்கிட்டு இருப்போம்  .

அதிலே ஒரு   செய்தி முடிவிலே 'எட்டாம் பக்கம் பார்க்கவும் ' ன்னு போட்டு இருக்கும். எட்டாம் பக்கம் யார் கிட்டே இருக்கோ. எல்லாரும் சீரியஸ் ஆக படிச்சுட்டு இருப்பாங்க. தொந்தரவு பண்ண தயக்கமா இருக்கும். 

இதுக்குள்ளே நம்ம இறங்கிற ஸ்டேஷன் வந்துடும். எத்தனை பேர் கிட்டே பேப்பரைக் கேட்டு வாங்கிறது. நம்ம கையிலே இருக்கிற அந்த ரெண்டு பக்கப் பேப்பரோட இறங்க வேண்டியது தான்.
-------------------------------------------------நாகேந்திர பாரதி


6 கருத்துகள்:

 1. அருமையான கரு..
  நன்று ரசித்தேன்...சகோதரா...
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு
 2. இதுக்குத்தான் இ-பேப்பர் போட்டிருக்கான். போன்லயே படிச்சுக்கலாம்.
  அது சரி, அப்படி பேப்பர்ல என்ன இருக்கு?

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. ஹஹஹஹ் சில சமயம நம்மகிட்ட வாங்கற பேப்பர் பஜ்ஜி மடிக்கக் கூட போயிடும் நண்பரே! இல்லைனா கீழ உக்கார, படுக்க என்று....கஷ்டம்தான்...
  இப்போதான் மொபைல்லயே பார்த்துக்கலாமே ஆனா ட்ரெயின்ல கஷ்டம்தான்..நெட் கிடைக்கறது...

  பதிலளிநீக்கு