சனி, 16 ஜனவரி, 2016

சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் 


வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே   இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்மா கிட்டே பூ, பழம்,   தேங்காய் , வெத்திலை - ரோட்டோரக் கடையிலே கரும்பு , கிழங்கு, காய்கறி   - எல்லாம் வாங்கிட்டு  ரெண்டு கனத்த பைகளோடு  ரெண்டு மாடி படியேறி வீட்டுக்குள்ளே நுழைஞ்சவுடனே 'முக்கியமான ஒண்ணை லிஸ்டிலே போட மறந்துட்டேங்க. உப்பு இருக்குதுன்னு நினைச்சு இருந்துட்டேன். வாங்கிட்டு வாங்க' ம்பாங்க. 

மறுபடி ரெண்டு மாடி இறங்கி உப்பு பாக்கெட்டோட ஏறி வந்தா ' என்னங்க. செல போன் அடிச்சா கேக்க மாட்டீங்களா . எத்தனை தடவை போன் பண்றது' ன்னதும், போனை எடுத்துப் பாத்தா அதுலே சார்ஜ் போயிருக்கும். பத்து வருஷத்துக்கு முந்தி வாங்கின போன் . செங்கல் மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கு. ஸெல்ப் டிபென்சுக்கும் உபயோகப் படும். எதுக்கு மாத்தணும். என்ன, ரெண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சார்ஜ் ஏத்தணும். சவுண்டும் கொஞ்சம் கம்மியா இருக்கும். பேசறது கொஞ்சம் சத்தமா பேசணும். பக்கத்திலே இருக்கிறவங்க ' 'தம்பி ,போனைக் காதிலே இருந்து எடுத்துட்டே பேசலாம். அடுத்த ஊருக்கே நேரே கேட்டுடும் '   ன்னு  கிண்டல் செய்வாங்க.

'இப்ப எதுக்கு போன் பண்ணினே ' னாக்க  இன்னும் ரெண்டு லிஸ்டிலே விட்டுப் போச்சாம். மறுபடி மாடி  இறங்கி ஏறி மூச்சு வாங்க உள்ளே நுழைவோம். இதுக்குள்ளே காலையிலே பொங்கல் வைக்கிற நல்ல நேரம் முடிஞ்சு போயிருக்கும். இனிமே சாயந்திரம் தான் ன்னு சொல்லிட்டு டிவி பார்க்க ஆரம்பிப்போம்  .  வழக்கம் போல சேனல்லை மாத்தி மாத்தி பாப்போம்  .
  
 'பொங்கலுக்கு முக்கியத் தேவை அரிசியா சர்க்கரையா' ன்னு ஒரு பட்டி மன்றம்.
 'வெளியாகி ஒரே நாளில் தியேட்டரை விட்டு ஓடிய புத்தம் புதிய திரைப் படம் '
 ''அவசரமாக் கூப்பிட்டதாலே , குளிக்கப் போறதுக்குப் போட்ட உடுப்போடு    நடிகைங்க வந்து உட்கார்ந்து இருக்கிற அவார்ட் பங்ஷன்
'கிராமத்துக் கலாச்சாரம்னு பொய் சொல்லிக்கிட்டு நடத்துற  பீப் சாங் குத்தாட்டம்'
  'வயசுக்கு மீறிப் பேசுற ஆடுற  சின்னப் புள்ளைங்களை பெருமையாப்   பாத்துக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்கிற  அப்பா அம்மா கூட்டம் '
  ' மது குடிப்பதின் அவசியத்தை இளைஞர்களுக்கு அறிவுறுத்தும் புதுத் திரைப்படங்களின், பாடல்களின்  முன்னோட்டம் '
   இப்படி ஒண்ணொண்ணா பாத்து முடிக்கிறதுக்கு சாயந்திரம் ஆயிடும்.     

பொங்கல் பொங்கி சாமி கும்பிட்டு சாப்பிட   உட்கார்ந்தா நம்ம தட்டிலே வெண் பொங்கல் மட்டும்   தான் விழும். விசாரிச்சா நமக்கு சர்க்கரை   வியாதியாம். சக்கரை   பொங்கல் சாப்பிடக் கூடாதாம்ரெண்டு மாடி, மூணு முறை ஏறி இறங்கி வாங்கிட்டு வந்ததுக்குப் பரிசு.

'ஏதோ சாஸ்திரத்துக்கு கொஞ்சம் எனக்கும் வைங்க. இல்லைன்னா சாமி கோவிச்சுக்ரும்' ன்னு சொன்னதும் வைப்பாங்க. சர்க்கரைப்   பொங்கல் இல்லே .சர்க்கரைப் பருக்கைகள். நம்மளும் ஒண்ணொண்ணா எண்ணிப் பார்த்துச் சாப்பிட்டு சர்க்கரைப்  பொங்கல் கொண்டாடிட வேண்டியதுதான்.
------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


2 கருத்துகள்: