வெள்ளி, 11 டிசம்பர், 2015

புஸ்தக யானை

புஸ்தக யானை
-----------------------------
இந்தப் புஸ்தகப் புழு ங்கிறது ரெம்பச் சிறுசா அவனுக்கு அவ்வளவு பொருத்தமான பேரா  இல்லைங்க. அவனோட அளவு கடந்த புஸ்தகப் பைத்தியத்துக்கு புஸ்தக யானை ன்னு சொன்னாத் தான் பொருத்தமா இருக்குங்க.

இந்த புத்தகம், பத்திரிக்கை மட்டும் இல்லைங்க. இந்த வடை வாங்கின பேப்பரைக் கூட முழுசா படிச்சுட்டுத் தான் வடையையே சாப்பிடுவான்னா பாத்துக்குங்க .அவன் சம்பளத்திலே பாதிபுத்தகம் வாங்கவும் பத்திரிகைக்கு சந்தா காட்டவுமே சரியாப் போயிடும்.

                இந்தப் புத்தகக் கண்காட்சியிலே எல்லாம் நீங்க அவனைப் பாத்திருப்பீங்க. ரெண்டு மூணு பை முழுக்க புத்தகங்களை வாங்கிக்கிட்டு தூக்க முடியாம தூக்கிட்டு போயிக்கிட்டு இருப்பானே அவன்தாங்க. கவிதை, அரசியல், கணிதம், ன்னு சகட்டு மேனிக்கு அள்ளிக்கிட்டு போவான்.

இதை எல்லாம் அவன் படிக்கிறானா ங்கிறது பரம ரகசியம். அவன் வீட்டுக்குப் போனா அவனோட புத்தக ரூமுக்குள்ளே ஒரு புத்தக சுற்றுலா கூட்டிட்டுப் போவான். உள்ளே ஒரு ஒத்தை அடிப் பாதையிலே நடந்து போகணும். சுத்தி புத்தக மலை இருக்கும். திடீர்னு அவன் காணாம போயிடுவான். ஏதாவது புத்தக மலை மேலே முள்ளம் பன்றி மாதிரி ஊருற மாதிரி தெரிஞ்சா அது தாங்க அவன் தலை முடி. சரியா அந்த இடத்துக்கு போயி அவனைப் புடிச்சுடலாம்

இதுக்கு நடுவிலே அவன் பெற்றோர் அவனுக்கு ஒரு படிக்காத பொண்ணைப் பாத்து கல்யாணம் முடிச்சு வச்சாங்க. அந்தப் பொண்ணுக்கு புஸ்தகம்னா கிழிச்சு துடைக்கிறதுக்கும்பேக் பண்றதுக்கும்  உபயோகப் படும் ஒரு வஸ்து ங்கிற     அளவிலே தான் ஞானம்.

கொஞ்ச நாள் ஆச்சு. அவன் புத்தக ரூமிலே இருக்கிற மலைகள் கொஞ்சம் கொஞ்சமா குன்றாக   மாறுவதை உணர்ந்தான். ஒரு நாள் அவன் மனைவியை கையும் களவுமாக ,இல்லை இல்லை, கையும் புத்தகமுமாக பிடித்து விட்டான். அடுப்படி மேடையை சுத்தப் படுத்தும் புனிதமான பணியில் அந்த புத்தகப் பக்கங்கள் ஈடுபட்டு இருந்தன.

இருவருக்கும் வாய்ச் சண்டை வலுத்தது. அவள் கேட்ட சில கேள்விகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. படித்து என்ன கிழித்தான் என்பது ஒரு கேள்வி. அவளாவது நிஜமாகவே கிழிக்கிறாளாம். அடுத்து அவனது அறிவு, புத்தகம் அளவு உயர்ந்ததா என்பது. அதை டெஸ்ட் செய்ய சில கேள்விகள் கேட்டாள் அந்த கிராமப் பெண்.

தமிழ் நாட்டில் ஓடும் சில நதிகளின் பெயர் களைக்  கேட்டாள் . இவனது மூளை நரம்புகளில் ஓடிய பெயர்கள் கூவம் ஆறும் பக்கிங்காம் ஆறும்தான்.    யோசித்துப் பார்த்ததில் தெரிய வந்தது . புத்தகங்களை வாங்கிறான், புரட்டுறான், ஒண்ணும் உள்ளே ஏறது இல்லைங்கிறது   புரிந்தது.   .
 
அப்புறம் என்ன. புத்தகங்கள் பழைய புத்தகக் கடைக்குப் போயின. புத்தக அறை  படுக்கை அறை ஆனது.   தீபாவளி அன்னிக்கு  இரட்டை குழந்தைகள் பிறந்தன. தீபாவளிப் பத்திரிகை போல ஒன்றோடு ஒன்று போனஸ். புத்தக ரத்தம் இன்னமும் அவனுக்குள்ளே ஓடுதுல்லே 
-------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


3 கருத்துகள்:

 1. //அவள் கேட்ட சில கேள்விகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. படித்து என்ன கிழித்தான் என்பது ஒரு கேள்வி. அவளாவது நிஜமாகவே கிழிக்கிறாளாம்.//

  ஹா.... ஹா... ஹா...

  உங்கள் கருத்து சரிதான்!

  பதிலளிநீக்கு
 2. அறிவு பூர்வ நகைப்
  பதிவு . ரசித்தென்..
  நன்றி
  வேதாவின் வலை

  பதிலளிநீக்கு