செவ்வாய், 6 அக்டோபர், 2015

நியூயார்க் அலட்டல் - நகைச்சுவைக் கட்டுரை

நியூயார்க் அலட்டல்   - நகைச்சுவைக் கட்டுரை
-------------------------------------------------------------------------------------------------------------------
என்னமோ நியூயார்க் , நியூயார்க் ன்னு பெருமை அடிச்சுங்கிறாங்களே  அப்படி என்னதான் அங்கே நியூவா இருக்குதுன்னு போய் பாத்தா நம்ம மதுரை மாதிரித் தாங்க இருக்கு,

நியூயார்க்கைத்  தூங்கா நகரம்னு சொல்லுறாங்களாம்  .   நம்ம மதுரையும் தூங்கா நகரம் தானுங்களே. அங்கே டைம் ஸ்குயரிலெ நைட்டு   முழுக்க ஏகப்பட்ட கலர் லைட்டைப் போட்டு   உயர உயர பில்டிங்கா ஜொலிக்குது . நம்மளும் நம்மாலே முடிஞ்ச அளவு லைட்டைப் போட்டு டவுன் ஹால் ரோடு ஓரளவு ஜொலிக்கத்தானே செய்யுது . ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை. மத்தபடி தூங்கா நகரம்தானே.

அங்கே ராத்திரி முழுக்க ரோட்டுக் கடையிலே பிஸ்ஸாவும் பர்கரும் கிடைக்குது  . மதுரையிலும் ராத்திரி முழுக்க இட்டிலியும் இடியாப்பமும் கிடைக்குதே. அப்புறம் என்னங்க  . 

ஏதோ எம்பயர் ஸ்டேட் பில்டிங்காம்  .      பெரிசா அலட்டிகிறாங்க  . நியுயார்கிலே  உயரமான பில்டிங்கிலே ஒண்ணாம்  . ஊரிலே எங்கே இருந்து பார்த்தாலும் தெரியுமாம். சுத்தி சுத்தி அவெனியு , ஸ்ட்ரீட் ன்னு அமைப்பா இருக்காம். நம்ம மீனாக்ஷி அம்மன் கோவில்  எப்படி. மதுரைக்கு நட்ட நடுவிலே சுத்தி ஆடி, ஆவணி மூல  , மாசி , வெளி வீதின்னு அழகா இருக்கே.

என்ன இந்த ராத்திரியிலே வித விதமான லைட்டைப் போட்டு ஆடுறாங்க அங்கே. . நாம அடக்கமா இருக்கோம். அம்புட்டுதான்.

அப்புறம் ஹட்சன் ரிவர் , ஈஸ்ட் ரிவராம்  . அங்கே   லிபர்ட்டி சிலை இருக்காம். அதைப் பாக்க க்ரூயிசாம். பெர்ரி யாம் . அதிலே போயி கூட்டம் கூட்டமா பாக்கிறாய்ங்  களாம்    .  நமக்கும் தான் வைகை இருக்கு. என்ன, தண்ணி மட்டும் தான் இல்லை. அது இருந்தா நாங்களும் படகு விட்டு மைய மண்டபத்துக்குப் போயிப் பாப்போமுல்லே.

அப்புறம் சென்ட்ரல் பார்க்காம்வித வித மரங்களோடு மிகப் பெரிய பார்க்காம். நம்ம கிட்ட இருக்கிற கருவ மரத்திலே ஒண்ணைக் கூட காணோம். பெருசா அலட்டுறாங்க  .

நியூயார்கிலே பாதி சனம் கருப்பாத்   தான் இருக்கு.  அதுவும் முரட்டுத் தனமா ஏதோ ஒரு மாதிரி இங்க்லிஷிலெ பேசுறாங்க. நம்ம மதுரைப் பசங்களும். அப்படித்  தானே. என்ன நம்ம தமிழிலே பேசுறோம். அது தவிர அவங்க குளிருக்காக ஜீன்சும் கோட்டும் போட்டிருங்காங்க. நம்ம வெயிலுக்காக வேட்டியை மடிச்சுக் காட்டி திறந்த மார்போட திரியுறோம்.

அப்புறம் ஏதோ நெய்பர்ஹூடாம். லிட்டில் இத்தாலி, சீனா டவுன் ன்னு வெளி நாட்டு ஜனங்கள்லாம் வந்து  அவங்க வாழ்க்கை முறையைக் கலந்திருக் காங்களாம். நம்ம மதுரையிலும் தான், ராம்நாட், திருநெல்வேலி, விருதுநகர் பக்கத்து மாவட்ட  ஜனங்கள் எல்லாம் வந்து கலந்து இருக்காங்க. இதைப் போயி பெருசா சொல்லுறாங்க  . .

என்னமோ போங்க. இப்பதான் நம்ம மதுரையைச் சுத்தி தோண்டி அகழ்வாராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாளிலே அந்தக் காலத்திலே நம்ம மதுரைகட்டிடக் கலையிலே நியுயார்க்கை  விட எப்படி முன்னேற்றமா இருந்துச்சுன்னு தெரிய வரப் போகுது. இப்ப எப்படின்னு கேக்காதீங்க. அதை எல்லாம் நம்ம இளைய தலைமுறை பாத்துக்குவாங்க.

அது வரைக்கும் நியுயார்கைப் போயி '' ன்னு பாத்துட்டு போட்டோ எடுத்து பேஸ்புக்குலே போட்டு  பெருமை  அடிச்சுக்க வேண்டியது தான். நானும் போயி போட்டோவெல்லாம் பேஸ் புக்கிலெ ஏத்தப் போறேன்வர்றேங்க.
-----------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


5 கருத்துகள்:

 1. உலகத்தில் எந்த இடமும் மதுரைக்கு ஈடாகதுங்க..... மல்லிகை பூவாசம் ஊரெல்லாம் மணக்குமே அதுக்கு ஈடு இணையாகுமா என்ன? அப்புறம் இரவு எங்கும் கேட்கும் கொத்துபுரோட்டா போடும் போது கேட்கும் தாளம் நீயூயார்க்கில் கேட்குமா என்ன? மதுரை பஸ்டாண்டில் கிடைக்கும் ப்ருட் மிக்ஸ்ர் டேஸ்டுக்கு ஈடு இணை உண்டா?

  பதிலளிநீக்கு
 2. மதுரை நியூயார்க் ஒப்பீடு சூப்பர். . நகைச்சுவையாக சொன்ன விதம் அருமை

  பதிலளிநீக்கு
 3. ரசனை.
  தங்களின் இதுபோன்ற கட்டுரைகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு