வெள்ளி, 23 அக்டோபர், 2015

அந்தக் காலத்திலே .. - நகைச்சுவைக் கட்டுரை

அந்தக் காலத்திலே ..   - நகைச்சுவைக் கட்டுரை
---------------------------------------------------------------------------------------------------------
இந்த வயசானாவங்க மேலே எங்களுக்கு  ரெம்ப மரியாதைங்க   . என்ன ஒண்ணு . அவங்க வாயைத் திறந்து அட்வைஸ் பண்ணாம இருந்தாங்கன்னா அந்த மரியாதை இன்னும் கொஞ்சம் கூடுங்க. வாயைத் திறக்கவே கூடாதுன்னு சொல்லலேங்க. இந்த, சாப்பிடறது , தண்ணி குடிக்கிறது இந்த மாதிரி எவ்வளவோ முக்கியமான வேலைங்களுக்கு நல்லாவே பெருசாவே வாயைத் திறக்கலாம். ஆனா எங்களுக்குப் பிடிக்காத எங்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களைப் பத்தி நீட்டி முழக்கிப் பேச    வேணாம் கிறதுதான்  எங்களோட தாழ்மையான விண்ணப்பங்க.  

இப்ப உதாரணத்துக்கு கிரிக்கட்டை எடுத்துக்கலாம். எல்லா வயசுக் காரங்களுக்கும் புடித்தமான விளையாட்டுத்தான் .ஒத்துக்கிறோம் . ஆனா நாங்க இப்ப ட்வெண்டி ட்வென்டி போரடிச்சுப் போயி டென் டென்னுக்கு போயிக்கிட்டு இருக்கிறப்போ இவங்க அந்தக் காலத்திலே டெஸ்ட் மேட்சிலே பாரூக் எஞ்சினீயரொ பாரூக் டாக்டரோ  விளையாண்டதெல்லாம் சொல்லி எங்களை வெறுப் பேத்தணுமா   .

அப்புறம் இந்த சினிமாப் பாட்டு. எம் கே தியாக ராஜ பாகவதருக்கு நல்ல குரல் வளம் தான். நாங்க ஒத்துக்கிறோம். ஆனா அதே பாட்டை இவரு கர கர தொண்டையிலே உச்ச ஸ்தாயிலே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட பாடி அந்தப் பாட்டு மேலேயும் பாகவதர் மேலேயும் எங்களுக்கு ஏன் கோபம் வர வைக்கணும். அவரு பாடினதுனாலே தானே இவரு பாடுறாரு. தேவையா.

  அப்புறம் இந்த நடிகர்கள் மாதிரி ஆக்டிங். சிவாஜி சார் டயலாக் டெலிவரி எல்லாம் நாங்களும் கேட்டு ரசிச்சிருக்கோம். அதுக்காக இவங்க அவரு மாதிரி பேசி சிரிச்சு முகத்தை துடிக்க வச்சு எங்களை எல்லாம் பயமுறுத்தணுமா . அப்புறம் எம் ஜி ஆர் சார் மாதிரி சிலம்பமாம் - குடைக் கம்பை   சுத்தி விளையாண்டு கம்பு குத்தி பேண்டேஜ் போட்டு ஒரு வாரம் படுக்கை. அவங்க ஆசைகள்ளே எவ்வளவோ நிறைவேறாமப் போயி இருக்கலாம்.     அதுக்காக நாங்களா கிடைச்சோம். இப்படிப் போட்டு படுத்துறாங்க.

ஏங்க நான்  தெரியாமாத் தான் கேக்கிறேன். அவங்க அனுபவத்தை ட்ரை பண்ண விஷயமா இல்லை. இப்ப ஒரு நாளைக்கு மூணு குலாப் ஜாமுனுக்குப் பதிலா ரெண்டு சாபிட்டாங்கன்னு வச்சுகுங்க. அவங்க குறைக்கப் போறதில்லே. சும்மா ஒரு பேச்சுக்கு வச்சுக்குங்க. அப்ப சுகர் டெஸ்ட் பண்ணி சுகர் லெவல் குறைஞ்சிருக்கான்னு டெஸ்ட் பண்ணி பாக்கலாம். பொழுது போகலேன்ன டெய்லி  டெஸ்ட் பண்ணலாம். ஒரு துளி ரத்தம் தானேஒரு பாய்ன்ட் குறைஞ்சாலும் சந்தோசம் தானே.

அப்புறம் பழைய நண்பர்கள் படம் பேப்பரிலே இரங்கல் பகுதியிலே வந்தா வாழ்க்கையைப் பத்தி நிலையாமைப் பத்தி யோசிக்கலாம். ஏன் கவிதையே கூட எழுதலாம். இப்படி அவங்க வயசுக்கு ஏத்தமாதிரி  எதையாவது செய்யலாம். அய்யய்யோ வயசைப் பத்தி சொல்லிட்டேனா . அவங்களுக்குக் கோபம் வந்திடப் போகுது.   அப்ப  பேசாம பேஸ் புக்கிலே வயசைக் குறைச்சுப் போட்டு வாலிபப் பசங்க கூட அரட்டை அடிக்கலாம்

இதையெல்லாம் விட்டுப் போட்டு நம்மளைப் போட்டு படுத்துறாங்க. நமக்கும் வயசாகத் தான் போகுது. அப்ப நாம எப்படி இருப்போம்னு கேக்கறீங்களா .அதை அப்ப பாத்துக்கலாங்க . என்ன நான் சொல்றது.
-------------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


4 கருத்துகள்: