வியாழன், 1 அக்டோபர், 2015

ஜிம்தலக்கடி ஜிம்மா - நகைச்சுவைக் கட்டுரை

ஜிம்தலக்கடி ஜிம்மா - நகைச்சுவைக் கட்டுரை 
--------------------------------------------------------------------------------------------------------------
நம்ம ராம சிவ பால முரளி சந்தான சபேசனுக்கு பயில்வான் ஆகணும்னு ரெம்ப ஆசைங்க. 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ' என்ற பழமொழியை சிரமேற்கொண்டு -இல்லை இல்லை- சிந்தைமேற்கொண்டு பக்கத்திலே இருக்கிற ஜிம்மிலே சேர்ந்தான். அங்கே என்னடான்னா ஏகப்பட்ட கருவிகள். எதை எடுப்பது எதை விடுவது என்ற கேள்வியோடு எப்படி எடுப்பது என்பதும் தெரியவில்லை.

அங்கே இருந்த டிரெயினர் ' உங்களுக்கு உடம்பிலே எந்தப் பார்டை டெவெலொப் பண்ணனும்னு கேட்டார். இவன் சட்டை பேண்டைக் கழற்றி விட்டு டிரவுசர் பனியனோடு நின்றான்.   அவன் உடலின் ஒவ்வொரு பாகங்களும் டெவெலொப் செய்வதற்கு ஏங்குகின்றன என்ற உண்மையை அவர் உடனே தெரிந்து கொண்டார். பார்ப்பதற்கு  நடிகர் ஓமக்குச்சி மாதிரி இருப்பான் என்றால் புரிந்து விடும்

'சரி கொஞ்சம் கொஞ்சமா மெதுவா ஆரம்பிக்கலாம் ' என்றவர் கைக்கு 'டம்பல்ஸ்' , காலுக்கு 'சைக்ளிங்' , மார்புக்கு 'பெஞ்ச் பிரஸ்', ஓவர் ஆல் எனேர்ஜிக்கு 'டிரெட் மில்' என்று கொஞ்ச நேரமே பண்ணச் சொல்லி ப்ராக்டிஸ் கொடுத்து விட்டுப் போனார் . ஒரு வாரம் பண்ணினான். ஒன்றும் முன்னேற்றம் தெரியவில்லை.

பக்கத்தில் இருக்கும் பயில்வான் ஆசாமிகள் பண்ற எக்செர்சைஸ் எல்லாம் பார்த்தான். அவர்கள் ஏதோ ஒரு பெரிய உருண்டையில் உட்கார்ந்து   நகர்ந்தார்கள்தொங்கிய ஒரு பெரிய மூட்டையைக் குத்தி உதைத்தார்கள். ஏகப்பட்ட வெயிட்டை இழுத்து இழுத்து தூக்கினார்கள்.

 இவனும் முடிவு செய்து விட்டான். இப்படியெல்லாம் பண்ணினால்தான் , இவர்கள் மாதிரி பயில்வானாக சீக்கிரம் ஆகலாம்  என்று டிரைனர் இல்லாத நேரம் பார்த்து    எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்தான்.

உருண்டையில் உட்கார்ந்து பேலன்ஸ் தவறி விழுந்து இடுப்பில் அடி. மூட்டையைக் குத்தி , உதைத்து காலும் கையும் சுளுக்கு. பெரிய வெயிட்டை நெஞ்சில் இறக்கி நெஞ்சில் அடி.

தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்து , ஒவ்வொரு பார்ட்டுக்கும்   ஒவ்வொரு டாக்டரிடம் போனான். இவன் பேரைக் கேட்டதும் ஒரே டாக்டர் பார்க்க மாட்டேன்  என்று சொன்னது தனிக் கதை. இப்போது கட்டுக்கள் போட்டு மாத்திரை சாப்பிட்டு  ராம தனியா, சிவ தனியா, பால தனியா, முரளி தனியா, சந்தான தனியா, சபேசன் தனியா ஒவ்வொரு பார்ட்டா படுத்துக்  கிடக்கான்.

ஆனாலும் மனசிலே வேற மாதிரி பிளானோட இருக்கான்.. எக்செர்சைக்குப்  பதிலா பல வித கேம்ஸ் ட்ரை பண்ணி உடம்பைத் தேத்தப் போறானாம்.

ஸ்னூக்கர் , கோல்ப் , டேபிள் டென்னிஸ் , நீச்சல் எல்லாம் மனசிலே ஓடுது. என்ன பண்றதுங்க. ராம சிவ பால முரளி சந்தான சபேசன்னு பேரு வச்ச அவனோட   பெற்றோரைதான் கேட்கணும் . அவனது பன்முகப் பல்வகை ஆசைகளின்  அடிப்படையை  .    
------------------------------------------------------நாகேந்திர பாரதி


3 கருத்துகள்:

  1. கேரம்,செஸ்,பல்லாங்குழி இப்படி முயற்சி செய்யலாமே அவன்! :))

    பதிலளிநீக்கு
  2. ஹஹஹஹஹஹ் கிட்டிம்புல் நல்ல விளையாட்டு..அது கூட முயற்சிக்கலாம்...ரசித்தோம்..

    பதிலளிநீக்கு