ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

கண்ணீரும் கதை சொல்லும் -நகைச்சுவைக் கட்டுரை

கண்ணீரும் கதை சொல்லும் -நகைச்சுவைக் கட்டுரை
---------------------------------------------------------------------------------------------------
கண்ணீரைப் பற்றி பல பேர் பல விதமாகச் சொல்றாங்க . விஞ்ஞானிகள் கண்ணீர் மூளையோடு சம்பந்தப் பட்டதுன்னு சொல்றாங்க . கவிஞர்கள் இதயத்தோடு தொடர்புடையதுன்னு    சொல்றாங்க. எனக்கென்னமோ கண்ணீர் கண்களோடு சேர்ந்ததுன்னுதான்    தோண்றது. இதயநீர் என்றோ மூளைநீர் என்றோ நாம் சொல்வதில்லையே. கண்ணீர் என்றுதான் சொல்கிறோம். அதுதவிர கண்ணீர் நெஞ்சிலே இருந்தோ தலையில் இருந்தோ வருவதை நான் பார்த்ததில்லை. கண்ணில் இருந்து வருவதைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

இதில் கண்ணீரில் பல வகை வேறு சொல்கிறார்கள். ஆனந்தக் கண்ணீர், துயரக் கண்ணீர், நீலிக் கண்ணீர், முதலைக் கண்ணீர் என்றெல்லாம்.

மிகுந்த மகிழ்ச்சியை மூளை உணரும்போது ஆனந்தக் கண்ணீர் வருமாம். எனக்குத் தெரிந்த ஒருவனுக்கு நல்ல சம்பளத்தில் நல்ல வேலை ஒன்று கிடைத்தது. ஆனந்தக் கண்ணீர் வரணுமா வேண்டாமா. ஒண்ணும் வரலை. அவன் அந்த ஆபர் லெட்டரை வச்சிக்கிட்டு, அடுத்த கம்பனியிலே அதிகச் சம்பளத்துக்கு பேரம் பேசிக்கிட்டு இருக்கான். என்ன சொல்றது.

அப்புறம் துயரக் கண்ணீர். காதல்லே தோல்வி அடைஞ்சா துயரக் கண்ணீர் வருமாம். இன்னொருத்தன் காதல் தோல்வி அடைஞ்சவன் ரெம்ப மகிழ்ச்சியா இருக்கான். கேட்டா பழைய காதலியை விட பெட்டெர் காதலியை பிக் அப் பண்ணப் போறானாம். சிரிக்கிறான்.

இந்தக் கண்ணீர் விடுறதிலேயும் பல முறை இருக்குங்க. சில பேர் கண்ணோரம் வர்ற ஒண்ணு ரெண்டு  துளியை விரலாலே விருட்டுன்னு சுண்டி விட்டுட்டு  உம்முன்னு உட்கார்ந்து இருப்பாங்க. சில பேர் மாலை மாலையா கண்ணீர் விடுவாங்க. இவங்க ஆண்களா இருந்தா பக்கத்திலே இருக்கிறவங்க வேட்டி காலி. பெண்களா இருந்தா பக்கத்திலே இருக்கிறவங்க சேலை காலி. உரிமையோடு எடுத்து துடைச்சுக் கிடுவாங்க. சில பேருக்கு மூக்கிலே இருந்தும் கண்ணீர் வரும். பக்கத்திலே இருக்கிறவங்க பாட்டை எண்ணிப் பாருங்க.

கண்ணீரை வைத்து காரியம் சாதித்துக் கொள்வோரும் சிலர் இருக்காங்க. இந்தக் கலையில் சில குழந்தைகளும் சில பெண்களும் கை தேர்ந்தவங்க. விளையாட்டு சாமான், விலை உயர்ந்த சேலை இதெல்லாம் இவங்களுக்கு ரெம்ப ஈஸியாக் கிடைச்சிரும்.

கண்ணீரைப் பார்த்து இரக்கப் படுறவங்களும் இருக்காங்க. சிரிக்கிறவங்களும் இருக்காங்க. கலி காலங்க . இப்படி சிரிக்கிறவங்க , அழுகிறவங்க தலை லேசா திரும்புற   நேரம் பாத்து காத்திருப்பாங்க. இவங்க சிரிக்கிறதை அழுகிறவங்க பார்த்துட்டா அழுகிறது போல பாவனை செய்வாங்க. அதைப் பாக்க சிரிப்பா இருக்கும்.

கிராமங்கள்ளே  அந்தக் காலத்திலே துக்க வீடுகள்லே அழுகிறதுக்குன்னே சிலரை அழைத்து வருவாங்க. அவங்க போடுற கூப்பாட்டிலே  பக்கத்து ஊரு சொந்தங்கள் எல்லாம்    விவரம் தெரிஞ்சு ஓடி வருவாங்கதகவல் துறை இல்லாத காலம் அது.

சில பெருசுகள் இறந்து போனா தாரை தப்பட்டை அடிச்சு வெடி வெடிச்சு  மாலை, சாராய வசானையோடு தூக்கிட்டுப் போவாங்க.     அங்கே அழுகையை விட ஆர்ப்பாட்டம்   அதிகமா இருக்கும். போனவரு முழிச்சுப் பார்த்தா எப்படி இருக்கும். 'ஏண்டா நான் போனதிலே இவ்வளவு சந்தோஷமா ' ன்னு கேட்டு வெறுத்துப் போயி மறுபடி போயிச் சேர்ந்திரும்.

எனக்குக் கூட லேசா கண்ணீர் வர்ற மாதிரி இருக்குங்க    . வேற ஒண்ணும் இல்லை. கண்ணிலே ஏதோ தூசி விழுந்திருச்சு. இப்படி வேற கண்ணீர் இருக்கு.. கண்ணிலே தண்ணீ அடிச்சா சரியாயிரும். கண்ணீரைத் தண்ணீரால் சரி செய்யணும்   .  கிளம்புறேங்க. .

----------------------------------------------------------------நாகேந்திர பாரதி


4 கருத்துகள்: