புதன், 30 செப்டம்பர், 2015

சந்தேகச் சக்கரவர்த்தி - நகைச்சுவைக் கட்டுரை

சந்தேகச் சக்கரவர்த்தி - நகைச்சுவைக் கட்டுரை
------------------------------------------------------------------------------------------------------------------
சந்தேகப் படறதிலே இளவரசரைப் பாத்திருப்பீங்க  .  ராஜாவைப் பாத்திருப்பீங்க. சக்ரவர்த்தியைப் பாக்கிறீங்களா . இவரைப் பாருங்க .இவர் சந்தேகம் வீட்டிலே, ஆபீசிலே , வெளியிலே எல்லா இடத்திலேயும் விரவிக் கிடக்குங்க.

வீட்டைப் பூட்டிட்டுப் போறவங்க ஏதோ ஒண்ணு ரெண்டு  தடவை இழுத்துப் பாக்கலாம். இப்படியா. ஒரு எட்டுத் தடவை இழுத்துப் பாத்துட்டு ஒம்பது தடவை தொங்கிப் பாத்துட்டுத்தான் போவார். இதிலே அந்தப் பூட்டு நொந்து நூலாகி அடுத்து யாராவது வந்து லேசாத் தட்டினாலே தொறக்கிற நிலைமையிலே இருக்கும்.

வெளியூர் போனப்புறமும் பூட்டு தவிர கேஸ் , குழாய், ஸ்விட்ச் எல்லாத்தைப் பத்தியும் இவர் படுற சந்தேகம் தாங்க முடியாம இவரு சம்சாரம் அடுத்த நாளே ஊருக்குத் திரும்பலாம்னு சொல்லிடுவாங்க.

ஆபிசிலே இவர் பாக்கிற வேலை கம்ப்யூடேரிலே தமிழ்லே டைப் அடிக்கிறது. கேக்கணுமா. தமிழ்லே , ,   குழப்பம் ரெம்பவே வரும் இவருக்கு. சந்தேகப்பட்டு   சந்தேகப்பட்டு  கரெக்டா தப்பா அடிப்பாரு.

'பள்ளிக்கூடம்' 'பல்லிக்கூடம்' ஆகும். என்னதான் ஒண்ணு ரெண்டு பல்லி இருந்தாலும் அது பல்லிகள் வாழும் கூடம் இல்லைங்க. அப்புறம் 'குதிரை'  'குதிறை' ஆகும். அந்த ஒரு குதிரை முரடுங்கிறதுக்காக  குதிரை இனத்தையே முரட்டு இனமா மாத்துறது கொஞ்சம்   கூட சரியில்லைங்க.

அப்புறம் மனைவிக்கு அப்பப்போ மல்லிகைப் பூ வாங்கிட்டுப் போவாருங்க. அந்தப் பூ வாசமா இருக்கான்னு சந்தேகப் பட்டு அடிக்கடி மோந்து பாப்பாரு பாருங்க. அந்தப் பூவோட எல்லா வாசமும் இவரு மூக்குக்குள்ளே போயிருக்கும். வீடு போய்ச் சேரப்போ அந்தப் பூவிலே கொஞ்சம் கூட வாசம் இருக்காது.

கோயிலுக்குப் போனா சாமியை நினைக்கிற நேரத்தை விட வெளியிலே கழட்டிப் போட்ட செருப்பை நினைக்கிற நேரம் தான் அதிகமா   இருக்கும். இவரைப் பொறுத்த வரைக்கும் சாமி தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். செருப்பிலும் இருப்பார்

எல்லாத்தையும் விட ரெம்ப மோசம். இவர் பேரைப் பத்தி இவருக்கு வர்ற சந்தேகம் தாங்க. சுப்பிரமணியன் இவர் பேரு. அதைச் சுப்ரமணி ன்னு எழுதுறதா, சுப்பிரமணி ன்னு எழுதுறதா. 'யன்' சேக்கணுமா வேணாமா.

எதுக்கும் இருக்கட்டும்னு இவரு நாலு இடத்திலே . கேஸ், ஆதார்  , ரேசன் , பேங்கு ன்னு  நாலு இடத்திலே நாலு விதமாய்க் குடுத்து வச்சிட்டாரு.   கவெர்ன்மென்ட் இவரு ஒருத்தரா நாலு பேரா ன்னு குழம்பிக் கிடக்கு. இவரோ அடுத்தடுத்து ஏகப்பட்ட சந்தேகம்   வர்றதாலே   அடுத்து எதைப் பத்தி சந்தேகப்   படலாம்னு குழம்பிக் கிடக்கிறாரு. சக்ரவர்த்திங்கிறது   சரிதானுங்களே  .
   
------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


5 கருத்துகள்: