வியாழன், 3 செப்டம்பர், 2015

நடையா இது நடையா - நகைச்சுவைக் கட்டுரை

நடையா இது நடையா  - நகைச்சுவைக் கட்டுரை 
----------------------------------------------------------------------------------------------------------
பொதுவாக எனது நண்பர்கள் சொல்வதை உடனே நான் ஏற்றுக் கொள்வது வழக்கம். சினிமாவுக்குப் போகலாம் என்றாலும் ஓட்டலுக்குப் போகலாம் என்றாலும் நான் உடனே கிளம்பி விடுவேன். ஆனால் சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்னதை ஏற்றுக் கொள்வது மட்டும் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதி காலையில் எழுந்து நடைப் பயிற்சி செய்வது உடலுக்கு நல்லதாம்எனது உடல் நலத்தின் மேல் அவருக்கு இருக்கும் அக்கறையை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், எனது உடலுக்கு இருக்கும் சில பழக்கங்களை மாற்றுவது மிகவும் கஷ்டம்.

காலை நேரத்தில் விழிப்பு வந்த பின்பு  போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு  ஒரு அரை மணி நேரம் கண்களை மூடிக் கொண்டு படுத்திருப்பது என் உடலுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். அதை எப்படி மாற்றுவது. இருப்பினும் மாற்ற வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. என் உடல் நலத்தை பரிசோதித்த மருத்துவர் எனது சர்க்கரை அளவு, ரத்தக் கொதிப்பு முதலியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் தினசரி காலை அரை மணி நேரம் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்.

நடக்கக் கூடிய காரியமா இது . இந்த சர்க்கரை அளவு, ரத்தக் கொதிப்பு முதலியவற்றைப் பற்றி நான் கவலைப் படா விட்டாலும்அதனால் ஏற்படும் உடல் அசதி, மயக்கம், மூச்சுத் திணறல் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப் பட வேண்டிய கட்டாயம் உள்ளது. என்ன செய்வது. நானும் ஒரு நாள் காலை நடக்க ஆரம்பித்தேன் .

பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்குச் சென்றபின்தான் தெரிந்தது. நம்மைப் போல் ஆரோக்கிய அக்கறை மனிதர்கள் அதிகம் இருப்பது. எனக்கு மனதிற்குள் ஒரு நிம்மதி. நான் தனி ஆள் அல்ல. நமக்குத் துணையாக ஒரு படையே உள்ளது.
  
பூங்காவின் உள்ளே இருக்கும் வட்டப் பாதையில் நடக்க ஆரம்பித்தேன்சிறிது நேரம் தான் சென்றிருக்கும். அதற்குள் பின்னால் ஒரு குரல். ' சார், மெதுவாக நடப்பதென்றால் இடது பக்கம் ஓரமாக நடக்கவும்என்றபடி என்னை இடித்தபடி வேகமாகக் கடந்து சென்றார் ஒருவர்நான் ஓரமாக நடக்க ஆரம்பித்தபின்தான் கவனித்தேன்.

என்னைப்போல் மெதுவடைக் காரர்கள் - மன்னிக்கவும்- மெதுநடைக்காரர்கள் பல பேர் இருப்பதைக் கவனித்தேன். நாங்கள் ஒரு நீளமான  கூட்ஸ்   ரெயில் போல நடந்து கொண்டு இருந்தோம் . நின்று நின்று நடக்க வேண்டி இருந்தது . முன்னாள் இருப்பவர்  மேல் மோதி  விடக்  கூடாதே .  ‘ப்பூ சிக்கு சிக்கு’ என்று மட்டும் தான் சொல்லவில்லை . மற்றபடி, நடந்து நின்று , நின்று நடந்து அது ஒரு விதமான நடைப் பயிற்சி.

மிகவும் சௌகரியமாகச் சென்று கொன்று இருந்த அந்த நடை வண்டி ரெயில் வண்டிப் பயணத்தில் திடீரென ஒரு நாய் குறுக்கிட்டது. சற்றும் எதிர்பாராத அந்தச் சூழ்நிலையில்  எனது பெட்டி சற்றே தடம் புரண்டு வலது பக்கம் திரும்ப பின்னல் வந்த பெட்டி -மன்னிக்கவும்- மனிதர் மோத நான் அந்த நாய் மேல் விழ எனது உடல் பருமனைத் தாங்க முடியாத அந்த மெல்லிய ஜீவன் வீறிட, நான் எழ, அது என்னைத் துரத்த , எனது நடைப் பயிற்சி கொஞ்ச நேரம் ஓட்டப் பயிற்சி ஆனது.

இதற்குள் பூங்கா காவலாளி வந்து அந்த நாயைத் துரத்தி விட, எங்கள் கூட்ஸ் வண்டிப் பயணம் தொடர்ந்ததுஎனக்குள் ஏதோ ஒரு   குறுகுறுப்பு  . பூங்காவின் வாசல் பக்கம் பார்த்தேன். ஆஹா . அந்த நாய் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டு படுத்துக் கிடந்தது. 'வெளியே வா , உன்னைப் பார்த்துக் கொள்கிறேன் ' என்பது போல .

எனக்கு உள்ளூர லேசான பயம். அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அரை மணி நேரம் மெது நடைப் பயிற்சியை முடித்து விட்டுப் பார்த்தேன். இன்னமும் அந்த நாய் என்னையே பார்த்துக் கொண்டு.  ' சரி கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டுப் போவோம்' என்று அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன். கால் மணி நேரம் போனது. நாய் நகரவே இல்லை.


நான் மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, 'பாகுபலி' போல் கம்பீரமாக நடந்து வாசலை அடைந்தேன். அதுவும் 'பல்லாளதேவா ' போல் கம்பீரமாக எழுந்ததுவெளியே வந்து நான் மெதுவாக நடக்க , அதுவும் மெதுவாக என்னைப் பின் தொடர்ந்தது. நான் வேகத்தைக் கூட்ட , அதுவும் வேகம். நான் ஓட ஆரம்பித்தேன். அதுவும் பின்னால் துரத்த, வேகமாக ஓடிப் போய் வீட்டுக் கேட்டை திறந்து உள்ளே நுழைந்து வேகமாகச் சாத்தினேன்.

நாய் வெளியே நின்று நுரை கக்கும் வாயோடு என்னைப் பார்த்து முறைத்தது. 'அப்பாடா தப்பித்தேன் ' என்று நினைத்த படி வீட்டுக்குள் நுழைந்தேன். ' நாய் பட்ட படு ' என்று சொல்வார்களே . அது நான் பட்ட பாடு அன்றுஇதைப் புரியாமல், வேர்த்து விறுவிறுத்து   நுழைந்த என்னைப் பார்த்து என் மனைவி கேட்டாள் ' என்னங்க கடுமையான நடைப் பயிற்சி போல இருக்கே, இப்படி வேர்த்து ஊத்துது  '

'நடைப் பயிற்சியா அது, நாய்ப் பயிற்சி அது ' என்று நினைத்துக் கொண்டேன்.

------------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி  
Click here to buy Nagendra Bharathi's Poems 

2 கருத்துகள்:

 1. வணக்கம்

  சொல்லிய விதம் சிறப்பு.. வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -நன்றி-

  பதிலளிநீக்கு
 2. ஒண்ணும் கவலைப் படாதீங்க ,நாலு நாள் நடந்தால் அந்த நாய்க் கூட நண்பனாகி விடும் :)

  பதிலளிநீக்கு