திங்கள், 21 செப்டம்பர், 2015

இலக்கியத்துக்கு இலக்கணம் -நகைச்சுவைக் கட்டுரை

இலக்கியத்துக்கு இலக்கணம் -நகைச்சுவைக் கட்டுரை 
--------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்கும் இந்த கவிச் சக்கரவர்த்தி கம்பர் மாதிரி ' வேள்வியைக் காண வந்தார் , வில்லும் காண்பார் ' என்றோ ' எடுத்தது கண்டார் , இற்றது கேட்டார்' என்றோ கோதண்ட ராமரைப் பற்றி  எழுத ஆசைதான். ஆனா என்னமோ சாப்பாட்டு ராமர்களைப் பற்றி ' முதல் பந்தியைக் கண்டார்மூன்றாம்  பந்தியும் காண்பார்' என்றும்  'எடுத்தது கண்டனர் , ஏப்பம் கேட்டனர்' என்றும்தான் எழுத வருகிறது.

இருந்தாலும் பலப் பல மாதிரியில் கவிதைகள் எழுதி பலப் பல பத்திரிகைகளுக்கு அனுப்பித்தான் பார்க்கிறேன். ஆனால் ஒன்றும் பிரசுரம் ஆகமாட்டேன் என்கிறது. என் நண்பன் ஒருத்தன் சொன்னான். 'இது புதுக் கவிதைக் காலம். புரியாத கவிதைக் காலம் . அது போல எழுது ' என்றான். நானும் எழுதினேன்.

'இயற்கையின் உலக
ஆரம்பச் சோதனையை
உற்றுப் பார்த்து அடங்கிக் கிடங்கும்
அமைதியின் ஆர்ப்பாட்டம்
என்னவென்று சொல்ல '
என்று எழுதிக் காண்பித்தேன். என்னவென்று சொல்ல. அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

 'ஆரம்பச் சோதனை என்ற வரியில் மட்டும் அர்த்தம் இருப்பது போல் தெரிகிறது . அதை மாற்று' என்றான் . நானும் உடனே அதை 'போக்கின் புலம்பல்' என்று மாற்றி விட்டு , ஏழெட்டு பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டேன். ஏதாவது ஒன்றிலாவது பிரசுரம் ஆகாதா .

என்ன ஆச்சரியம். அந்தக் கவிதை எல்லாப் பத்திரிகைகளிலும் வெளி வந்து விட்டது. அதனால், அந்தப் பத்திரிகைகள் 'உங்கள் எழுத்தை இனிமேல் எங்கள் பத்திரிகையில் பிரசுரம் செய்ய மாட்டோம் ' என்று லெட்டெர் அனுப்பி விட்டார்கள். என்ன செய்வது.

சரி. அந்தக் கவிதையை வைத்துதான் பிரபலம் ஆகி விட்டோமே. கவிதைப் புத்தகம் போட்டுவிடலாம் என்று முடிவு செய்து எனது நூறு கவிதைகளை தூசி தட்டி எடுத்து  ஒரு பதிப்பாளரிடம் போனேன். அவர் அதற்கு அம்பதாயிரம் ரூபாய் கேட்டார். அது தவிர  நானே எனது புத்தகம் நூறை , ஒன்று நூறு ரூபாய் விலையில் வாங்கிக் கொள்ள வேண்டுமாம். இது எப்படி இருக்கு. புத்தகத்தாலே   நமக்கு காசு வரும்னு பார்த்தா நம்ம காசே போகும் போல இருக்கு.

கேட்டா சொல்றாரு  ' உங்க நண்பர்களுக்கு ஒவ்வொரு புத்தகம் ஒசியாக் கொடுங்க. அவுங்க, அவுங்க நண்பர்களுக்கு சொல்வாங்க. அப்படியே பிரபலம் ஆகி புத்தகம் விற்பனை பிச்சுக்கும் ' .

எனக்குத் தெரியாதா என்ன பிச்சுக்கும்னு. என் நண்பர்கள்  அதை பேப்பர்  பேப்பரா பிச்சு எதுக்கு உபயோகிப்பாங்களோ  . ‘அது ஒத்து வராதுங்கோ. இந்த புஸ்தகம்   எப்படி’ன்னு கேட்டேன். பாதி விலைன்னார். பட்டுன்னு போடச் சொல்லிட்டேன்.

அதிலே இருந்து ஒரு சாம்பிள் கவிதை எடுத்து பேஸ் புக்கிலெ போட்டு    லிங்கைக் கொடுத்தேன். அந்த சாம்பிள் கவிதை இதோ.
' லா லா லா லா
லி லி லி லி லி
லு லு லு லு லு ' இப்படின்னு போகும் அது.

நண்பர்கள் அதைப் பலருக்கும் பரிமாறி புத்தக விற்பனை எகிறிப் போச்சு. இந்த இன்டர்நெட் உலகத்திலே எது எப்படி நடக்கும்னே தெரிய மாட்டேங்குது.

அப்புறம் சிறந்த குழந்தை இலக்கியம் என்று சொல்லி இந்த ' புலிட்சர் விருது ' மாதிரி நம்ம லோகல்லா 'புளிச்ச பரிசு' ன்னு ஒண்ணு கொடுத்திட்டாங்க. அது அவங்களுக்குப் புடிச்ச பரிசான்னு தெரியாம   நானும்   அதைப் புரியாத பரிசா நினைச்சு வாங்கிட்டேன்.

இப்போ ' ரூ ரூ ரி ரி ' ன்னு அடுத்த கவிதை எழுதிக் கிட்டு இருக்கேன் . இது தவிர ஒரு இலக்கிய அமைப்பு எனக்கு ' இலக்கியத்தின் இலக்கணம்' ன்னு ஒரு பட்டம் வேற கொடுத்திருச்சு.

என்னங்க. ஓடாதீங்க. கொஞ்சம் நில்லுங்க. உண்மையைத்தாங்க   சொல்றேன்.
---------------------------------------------------------------------நாகேந்திர பாரதி
    

4 கருத்துகள்: