திங்கள், 14 செப்டம்பர், 2015

தலைப்பைத் தேடும் தவிப்பு - நகைச்சுவைக் கட்டுரை

தலைப்பைத் தேடும் தவிப்பு - நகைச்சுவைக் கட்டுரை 
---------------------------------------------
கவிதைத் தலைப்பு முதல் சேலைத் தலைப்பு வரை தலைப்புகளில் பலவகை உண்டு. நான் சொல்லுவது இந்த கதை, கவிதை, கட்டுரை எழுதிவிட்டு எழுத்தாளர்கள் தலைப்பைத் தேடி அலைவதைப் பற்றித்தான்.

பார்த்தது, கேட்டது, படித்தது, பட்டது இதை வைத்து ஏதோ எழுதி  விடுகிறார்கள். அதற்குப் பின் அதற்குப் பொருத்தமான தலைப்பைத் தேடி அலைகிறார்கள் .

எல்லா சப்ஜெக்ட்டும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. சிலருக்கு மர்மக் கதை பிடிக்கிறது. சிலருக்கு காதல் கவிதை பிடிக்கிறது. சிலருக்கு நகைச்சுவைக் கட்டுரை பிடிக்கிறது. எழுதிய விஷயத்தில் காதலோ, மர்மமோ நகைச்சுவையோ இருக்கிறது என்று நமக்கு எப்படித் தெரியும் . தலைப்பை வைத்துத் தானே. அதற்காக இப்படியா நம்மை ஏமாற்றுவது,

'இரவில் தெரிந்த இருட்டு விளக்கு' என்று தலைப்பு வைத்தால் மர்மக் கதை என்று  புரிந்து கொள்ள வேண்டுமாம் . இருட்டு விளக்கைத் தேடி கதைக்குள் நுழைய வேண்டுமாம். . விளக்கு எப்படி இருட்டாக இருக்கும் என்ற ஆர்வம் நம்மைப்  படிக்க வைக்குமாம்  .ஏதோ ஒரு விளக்கை இறுதியில் அணைத்துவிட்டு இருட்டாவது போல் முடித்திருந்தாலும் ஏற்றுக் கொள்வோமாம். நாம் என்ன அவ்வளவு இளித்த வாயர்களா. .

'மேகக் கூட்டத்தின் மின்னல் அவள்' என்று தலைப்பு வைத்தால் காதல் கவிதை என்று புரிந்து கொள்வோமாம் . அந்த மின்னல் பெண்ணைப் பார்க்க ஆவலுடன் கவிதைக்குள் வருவோமாம் . எதுகை மோனை எதுவும் இல்லை என்றாலும் 'வந்தாள் போனாள்' என்று வர்ணனைகள் இருந்தாலே ஆராதிக்க ஆரம்பித்து விடுவோமாம். ரெம்பவே ஆசை இந்த கவிஞர்களுக்கு .


'உதை வாங்கிய உதவாக்கரை ' என்று தலைப்பு வைத்தால் நகைச்சுவைக் கட்டுரை என்று தெரிந்து விடுமாம்  . அந்த உதவாக்கரை எப்படி எல்லாம் உதை வாங்கினான் என்பதை தெரிந்துகொள்ள புன்சிரிப்போடு படிப்போமாம்  .கழுதை உதைத்தாலும்   சரி காதலி உதைத்தாலும் சரி உதைக்கப்பட்டான் என்பதே நமக்கு  சிரிப்பை வரவழைத்து   விடும் என்று நினைக்கிறார்கள்.

இப்படி தலைப்பை வைத்தே வாசகர்களை ஏமாற்றி விடலாம் என்ற எழுத்தாளர்களின் நம்பிக்கை இப்போது தகர்ந்து வருகிறது.இந்தக் கால டுவிட்டர் உலகில் இரண்டு வரிகளுக்கு மேல் என்ன எழுதி இருந்தாலும் நாம் படிப்பதில்லை 

எனவே இப்போது சில எழுத்தாளர்கள் தலைப்பை மட்டும் இரண்டு வரிகளில் எழுதி விட்டு அதுதான் கதை, கவிதை, கட்டுரை என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். 'மின்னல் பெண் விளக்கை எடுத்துக் கொண்டு தேடித் தேடி இருட்டு மேகங்களை உதைத்துக்  கொண்டிருந்தாள் ' என்று வைத்து
விடுகிறார்கள் . இது மர்மமா, நகைச்சுவையா, காதலா .  நமக்கு ஏற்றபடி ஏதாவது ஒன்றை நாமாகவே  நினைத்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது
-----------------------------------------------------------------நாகேந்திர பாரதி


3 கருத்துகள்: