ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

கரப்பான் கராத்தே - நகைச்சுவைக் கட்டுரை

கரப்பான் கராத்தே - நகைச்சுவைக் கட்டுரை
----------------------------------------------------------------------------------
இந்த குங்க்பு , கராட்டே படமெல்லாம் பாத்து பாத்து எனக்கும் கராத்தே கத்துக்கணும்கிற  ஆசை உள்ளுக்குள்ளே ஹா ஹூ ன்னு கத்த ஆரம்பிச்சுடுச்சு . முதல்லே ஒரு கராத்தே மாஸ்டர் கிட்டே சேர்ந்தேன். அவர் உடம்பை பில்ட் அப் பண்ணச் சொல்லி எக்செர்சைஸ் , ரன்னிங் ன்னு ஒரு வாரம் வாட்டி எடுத்துட்டார். அதுலே காய்ச்சல்லே விழுந்தவன்தான் . படுக்கையை விட்டு எந்திரிக்க பத்து நாள் ஆச்சு .

அடுத்து வேற ஒரு மாஸ்டர் கிட்டே   சேர்ந்தேன். முதல்லேயே சொல்லிட்டேன். ஏற்கனேவே பாடி பில்ட் அப் பண்ணிட்டேன். நேரே அடிதடிக்குப் போயிடலாம்னு. அவ்வளவுதாங்க  .அவ்வளவுதாங்க  . நம்ம உடம்பை ரணகளம் ஆக்கிட்டாரு . வேற என்ன. மறுபடி ஆஸ்பத்திரிதான். ஒரு மாசம் ஆச்சு ஒழுங்கா ஆக.

ஆனா கராத்தே ஆசை மட்டும் விடலைங்க. இன்னொருத்தர் மாட்டினாரு. இவரு ரெம்ப நல்லவரு. அவரு ரூமுக்குள்ளே நுழைஞ்சேன் . அவரு ஒரு பெரிய கண்ணாடி ஜாரையே உத்துப் பாத்துக்கிட்டு இருந்தாரு. அதுக்குள்ளே .. அதுக்குள்ளே  .. பயப்படாதீங்க. ஒரு கரப்பான் பூச்சி இங்கேயும் அங்கேயும் ஓடிக்கிட்டு இருந்துச்சு. டக்குன்னு நின்னுருச்சு.

அவர் என்னைப் பாத்து புன்னகைத்தார். ' பாத்தீங்களா , இந்த கரப்பான் பூச்சி எவ்வளவு புத்திசாலின்னு   .   உங்க வருகையை உணர்ந்ததும் சண்டைக்கு ரெடியாயிடித்து  . அந்த இரும்புத் துண்டுகளைப் பாருங்க. ' என்றார்,. நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். ' அட அந்தக் கால்களை பாருங்கன்னு சொன்னேன் . எவ்வளவு   விறைப்பா வச்சிக்க்ட்டு நிக்கிது. இதைதான் ' கோகுட்சு நிலை' ன்னு  கராத்தேயிலே சொல்வாங்க.' என்றார்

அது எந்த நிலையோ. எனக்கென்னமோ டிக்ரீ படிக்கிறப்போ ஜுவாலஜி லேப்பிலே அறுத்து கால்கள் மிதந்த கரப்பான் பூச்சி ஞாபகம் தான் வந்தது. .

திடீர்னு என் வயிற்றில் பயங்கர வலி . ' சார் ' என்று அலறினேன்அவர் என் வயிற்றிலே ஓங்கி ஒரு உதை விட்டுருக்கார். 'என்ன ஞாபகத்திலே இருக்கீங்க. அலெர்ட் ஆக இருக்க இந்த கரப்பான் பூச்சி கிட்ட நீங்க கத்துக்க வேண்டியது ரெம்ப இருக்கு' என்றவர் ' உங்க வீட்டிலே கரப்பான் பூச்சி இருக்கா' என்றார்.

'ஒண்ணு ரெண்டு  பாத் ரூமிலே இருக்கு சார்'.
'நீங்க கொடுத்து வச்சவர் மிஸ்டர் . அதுங்களை அங்கேயே பத்திரமா பாதுகாங்க. '
'சார், அப்ப நான் எங்கே குளிக்கிறது. உங்க வீட்டுக்கு வந்துரவா'

அவர் என்னைப் பார்த்து கேலியாகச் சிரித்தார். ' நீங்க ஒரு கத்துக்குட்டி. உங்க வீட்டிலேயே ஒண்ணு ரெண்டு கரப்பான் இருக்கிறப்போ என்னோட பாத் ரூமிலே எத்தனை இருக்கும்  . எண்ணிப் பாருங்கோ  . எக்கச் சக்கம். அதனாலே நானே பக்கத்துக்கு வீட்டு பாத் ரூமிலே தான் குளிக்கிறேன். நீங்களும் பக்கத்து வீட்டுக்காரரைப் நண்பராய் ஆக்கிங்குங்கோ' . வீட்டுப் பூட்டை பத்து முறை இழுத்துப் பார்த்து தொங்கிப் பார்த்து விட்டுப் போகும் பக்கத்து வீட்டுகாரர் முகம் ஞாபகம் வந்தது.

'சரி சார்' என்று இழுத்தேன். 'ஒரு விஷயம். ஞாபகம் வச்சிகிருங்ககரப்பான் பூச்சியை அடிக்கப் போனா அது என்ன செய்யும். உங்களை நோக்கியே ஓடி வரும். கவனிச்சிருப்பீங்க . கவனமா இருங்க. போங்க உங்க பாத் ரூமுக்கு. அதுக் கிட்டே கத்துகிட்ட ஒண்ணு ரெண்டு டெக்னிக்கை நாளை வந்து என்கிட்டே செஞ்சு காமிங்க. ' என்றார்.

வீட்டுக்கு வந்தேன். பாத் ரூம் வாசலில் என் மனைவி பூச்சி அடிக்கும் மருந்தோடு ஒரு கரப்பான் பூச்சியை குறி பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் அலறினேன்.
'நில்' .
'ஏன்'
'கரப்பான்'
'ஆமாம்'
'வேணாம்'
மணிரத்னம் பட வசனம் குறைந்த வசனங்களோடும் ஆழமான அர்த்தங்களோடும் அங்கே அரங்கேறியது.

நான் எனது கரப்பான் கராத்தே ஆசையைச் சொன்னேன். அவள் கோபத்தோடு என்னை முறைத்தபடி கேட்டாள் . ' நானா , கரப்பானா'  . நான் என்ன சொல்ல?
------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


2 கருத்துகள்: