வெள்ளி, 11 செப்டம்பர், 2015

தியானப் பயணம்-நகைச்சுவைக் கட்டுரை

தியானப் பயணம்-நகைச்சுவைக் கட்டுரை 
----------------------------------------------------------------------
எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. நான் பிறந்த உடனே முதல் அஞ்சு நிமிஷம் கண்ணைத் திறக்கலை. அழலை . அவங்க பயந்து போயி டாக்டர் கிட்டே கேட்டாங்க. டாக்டர் சொன்னாராம். ' அம்மா  உங்க பையன் ஒரு தெய்வீகப் பிறவி. அதான், மேலுலகத்தில் இருந்து பூமிக்கு வர்றப்போ இருக்கிற ஸ்டிரெஸ்ஸைப்    போக்க கொஞ்ச நேரம் தியானம் பண்றான்' . உடனே நான் கையைக் காலை உதைச்சுக்குட்டு அழ ஆரம்பிச்சுட்டேனாம். அப்ப ஆரம்பிச்சதுங்க என்னோட தியானப் பயணம்.

அப்புறம் இந்த எலிமெண்டரி ஸ்கூல் லிலே டீச்சர் எங்க அம்மாவைக் கூப்பிட்டு சத்தம் போட்டிருங்காங்க. ' உங்க பையன் எப்பப் பாத்தாலும் தூங்கிகிட்டே இருக்கான். ' எங்க அம்மா சொன்னாங்க. ' இல்லே டீச்சர், அவன் தியானம் பண்ணிக்கிட்டு இருப்பான்’. டீச்சர் கோபத்தோடு ' என்ன, தியானம் பண்றப்போ குறட்டை விடுவாங்களா ' . எங்க அம்மா விடலைமேடம். தியானத்திலே பல வகை இருக்கு. இது குறட்டைத் தியானம். எங்களோட துக்கசாமி இல்லை இல்லை , தூக்க சாமி சொல்லிக் கொடுத்தது ' ன்னாங்க .    அவ்வளவுதான். டீச்சர் என்னை ஒரு வாரம் ஸ்கூல்லே சஸ்பெண்ட்  பண்ணிட்டாங்க.

அப்புறம் இந்த ஹை ஸ்கூலிலே  பிரச்சினையே இல்லை. டீச்சர் முன்வரிசைப் பசங்களுக்குத்தான் பாடம் நடத்தினாங்க. பின் வரிசைப் பசங்க சத்தம் போடாம் இருக்கிற வரைக்கும் கண்டுக்கவே இல்லை. நானும் குறட்டை தியானத்தில் இருந்து குறட்டையில்லாத தியானத்திற்கு மாறி இருந்தேன். பிரச்சினையே இல்லை.


காலேஜிலே என்னடானா புது மாதிரி தியானம்ஆண்கள் பெண்கள் மேலே மயக்க தியானம். பெண்கள் ஆண்கள் மேலே மயக்க தியானம். நானும் அந்த தியானத்திலே கலந்துக் கிட்டேன். சினிமா ஹோட்டல் ன்னு சுத்தித் திரிஞ்சோம்..  படிப்பைப் பத்திக் கேக்கிறீங்களா. அதுக்குத் தான் ஸ்டடி லீவ் இருக்கே. அப்பதானே படிக்கணும். அப்புறம் ப்ராக்சி ன்னு ஒண்ணு  இருக்கே . அதை வச்சு பரீட்சை எழுத அட்டெண்டன்ஸ் கிடைச்சிருச்சு.

அப்புறம் வேலை கிடைச்சு கல்யாண ஆச்சு. என் நண்பன் சொன்னான்' இந்த தூக்க சாமி தியானத்தை விட்டுட்டு ஒழுங்கான சாமி கிட்டே தியானம் கத்துக்க' ன்னான்.சரின்னு நானும் நல்ல குருவாய்த் தேடி பார்த்தேன். அதான் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு   தெருவுக்கும்  குரு இருக்காங்களே. என்ன பிரச்சினைன்னா பெரும்பாலும் அவங்க பெண் சீடர்களுக்குத் தான் சொல்லிக் கொடுக்கிறாங்க. அப்புறம் ஒரு மாதிரி ஒரு குருவைப் பிடித்தேன் புளிய மரத்தின் அடியில் .

புளிய மரத்துப் பிசாசுகள் கூட சேர்ந்து நானும் தியானம் கத்துக்க ஆரம்பித்தேன். அவர் சொன்னார். ' மூச்சை இழுத்துப் பிடிக்கணும். அப்புறம் விடணும்' . நான் கேட்டேன் ' சாமி இதைத்தானே நான் இத்தனை வருஷமா செஞ்சுட்டு வர்றேன். அதனாலேதானே     உயிரோட இருக்கேன் ' ன்னேன். அவருக்குக் கோபம் வந்திடுச்சு. 'நீ இதுவரைப் பண்ணினதுக்குப் பேரு தூக்கம். இப்ப பண்றது தான் தியானம்' ன்னார். ' என்ன தூக்கமும் தியானமும் வேற வேறயா'   எனக்குப் புளிய மரத்துக் கீழே ஞானம் வந்தது.

'சாமீ' ன்னு அவர் காலில் விழுந்தேன். அவர் என்னைப் பெருமையோடு அணைத்துத்   தூக்கி வீட்டிலே போயி தியானம் பண்ணச் சொன்னார். நானும் வீட்டுக்கு வந்து என் மனைவி கிட்டே உத்தரவு வாங்கிகிட்டு பண்ண ஆரம்பிச்சேன்கல்யாணம் ஆனவங்களுக்கு தெரியும். மனைவி உத்தரவு எத்தனை முக்கியம் ன்னு.

ஆச்சு. தரையிலே உட்கார்ந்து தியானம் ஆரம்பிச்சேன். சமையலறை வாசம், குளியலறை சத்தம். எல்லாம் காதிலே விழுது. எப்ப தூங்கினேன்னு எனக்கே தெரியாது. திடீர்னு ஒரு இடிச் சத்தம். வேற ஒண்ணும் இல்லீங்க. என்னோட மனைவியோட அதட்டல். ' போதும் தியானம் . எந்திரிங்க. புள்ளையை பள்ளிக்கூடம் கூட்டிட்டுப் போங்க '

நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவள் என்னையே உற்றுப் பார்த்தாள்.  'என்னங்க . உங்க முகம் இப்படி ஜொலிக்குது. இதான் தியானத்தின் மகிமையா' எனக்கு கொஞ்சம் எண்ணைப் பசை முகம். அதை சொல்ல அது நேரம் இல்லை' 'ஆமா  தியான மகிமை' என்ற படி எழுந்தேன். உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன் . இந்த எண்ணைப் பசைக்கே இவ்வளவு எபெக்ட் இருக்கே. நிஜமாவே தியானம் பண்ணி முகம் ஜொலிச்சா எப்படி இருக்கும்.

நான் முடிவு பண்ணிட்டேங்க. ஆமாங்க. இப்படிதான் முடிவு பண்ணி   பி ஏவை அஞ்சே அட்டெம்ப்டிலெ முடிச்சேன். எம் பி ஏவை  பத்தே அட்டெம்ப்டிலெ  முடிச்சேன். நூறு அட்டெம்ப்ட் ஆனாலும் சரி, தியானம் கத்துகிட்டே தீர்வேன். என் தியானப் பயணம் தொடர்கிறது .
--------------------------------------------------------நாகேந்திர பாரதி


8 கருத்துகள்:

 1. தியானப் பயணம் வெற்றிகரமாய் தொடர வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 2. ஹா... ஹா... பல தில்லாலங்கடி வேலைகள் தெரியுதே...!

  பதிலளிநீக்கு
 3. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 4. எல்லா விஷயங்களையும் நகைச்சுவை கலந்து கொடுத்துவிடுகிறீர்களே!, பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 5. பரவாயில்லை தங்களுக்கு..நான் கண்ணை மூடினால் கேட்கவேண்டாம்...ரெக்கை கட்டி வரிசையில் வந்து நிற்கும் பிரச்சனைகள்...அதனால் தியாணமே செய்வதில்லை நண்பரே.......

  பதிலளிநீக்கு
 6. ஹஹஹஹஹ் செம நண்பரே! எப்படி இப்படி நகைச்சுவையோடு சொல்றீங்க...அருமை...தூக்கத் தியானம்....ஹஹாஹஹ் மயக்கத் தியானம்...குறட்டைத் தியானம்...செம...குலுங்கி குலுங்கிச் சிரிச்ச தியானம் இருக்கு பாருங்க...செம...தியானம் பண்ணினாக் கூட மனசு அலைபாயும்...ஆனா சிரிச்சா மனசு லேசாகுது...எங்கள் ஓட்டு நகைச்சுவை/சிரிப்புத் தியானத்துக்கே....

  தூக்கம் கூட அருமையான தியானம் அதான் இப்படி அழகா உங்களால நகைச்சுவைத் தியானம் பண்ண முடியுது...பாராட்டுகள். தொடர்கின்றோம்...தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 7. நண்பரே உங்கள் தளத்தில் மின் அஞ்சல் சம்ஸ்க்ரிப்ஷன் விட்கெட் கொடுங்களேன். அதில் எங்கள் மின் அஞ்சலைக் கொடுத்தால் எங்கள் பெட்டிக்கே உங்கள் இடுவை வெளியாகும் போது வந்து விடுமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்புக்கு பக்கத்திலே போட்டுட்டேங்க . உங்க மின் அஞ்சலைக் குடுத்துடுங்கோ . நன்றி

   நீக்கு