வியாழன், 13 ஆகஸ்ட், 2015

நாளை முதல் குடிக்க மாட்டேன் - நகைச்சுவைக் கட்டுரை

நாளை முதல் குடிக்க மாட்டேன் - நகைச்சுவைக் கட்டுரை
-------------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளா ரெம்ப கஷ்டமாப் போச்சுங்க . டாஸ்மாக் பக்கம் போகவே பயமாய் இருக்குங்க . முந்தியெல்லாம் நம்ம பாட்டுக்குப் போவோம். ஹாட்டா ஒரு குவார்டர் கூலா ஒரு பீர், தள்ளாடிட்டு வீடு வந்து சேர்வோம். நடு வழியிலே  விழுந்துட்டாலும் யாரவது ஒரு புண்ணியவான் அட்ரஸ் கேட்டு கொண்டாந்து சேத்துடுவார்.

இப்ப என்னன்னா டாஸ்மாக் போறதுக்கு முன்னாடி அங்கே பாதுகாப்பு எப்படி இருக்குன்னு விசாரிக்க வேண்டியிருக்கு. நம்ம பாதுகாப்புக்கும் யாராவது ஒரு குடிகார நண்பனைக் கூட்டிட்டுப் போக வேண்டியதா இருக்கு. குடிக்கற செலவு ரெட்டிப்பாகுது .

ரெம்ப நாள் கடை திறக்கிறதே சந்தேகமா இருக்கு. அப்படியே திறந்தாலும் , கல்லடி விழுறதுக்குள்ளே அவசர அவசரமா வாங்க வேண்டியதா இருக்கு.

நம்ம பாட்டுக்கு குடிச்சுட்டு மட்டையா ரோட்டிலேயும்     படுக்க முடியலே . முந்தியெல்லாம் பாவம்னு நினைச்சவங்க இப்போ 'குடிகாரப் பயலை அடிடா' ன்னுட்டு அடிக்க வராங்க. குடிச்சு சாகறதுக்கு முன்னாடி, அடிச்சு சாகடிச்சுடுவாங்க போல இருக்கு.

என்ன ஆச்சு இந்த மக்களுக்கு. ஒபாமா மாதிரி எவனாவது மாற்றம் கொண்டு வருவான்னு நினைச்சு நினைச்சு ஏமாந்து போயிட்டாங்க போலிருக்குஅப்புறம் புத்திமதி சொல்லிக்கிட்டு இருந்த ஒண்ணு ரெண்டு  பெரியவங்களும் போயிச் சேர்ந்துட்டாங்க .

இப்ப வேற வழியே இல்லன்னு மாற்றத்தை அவங்களே கொண்டு வரலாம்னு ஆரம்பிச்சுட்டாங்க போல இருக்கு.

இதிலே பத்திரிகைபேஸ்புக் எல்லாம் சின்னப் புள்ளைங்க குடிக்கிறதை போட்டோ வீடியோ எடுத்து போட்டு கிளப்பி விட்டுட்டாங்கே . இதுலே நம்ம மாதிரி ஒரிஜினல் குடிகாரன் பாடுதான் கஷ்டமாய்ப் போயிடுச்சு .

பெர்மிட் வாங்கி ஓட்டல்லே ரூம் போட்டுக் குடிக்கிறதும் நமக்குக் கட்டுப்படி ஆகாது . கடையிலே போயி குடிச்சு அடி வாங்கவும் முடியாது . ஒழுங்கா வேலை வெட்டியைப் பாத்துக்கிட்டு வீட்டையும் நாட்டையும் முன்னேத்த வேண்டியதுதான் போலிருக்கு. நாளை முதல் குடிக்க மாட்டேன்னு முடிவு பண்ணிட்டேங்க .

-----------------------------------------------------------------நாகேந்திர பாரதி

4 கருத்துகள்: