செவ்வாய், 20 ஜூலை, 2010

ஒரு நல்லவனின் வருத்தம்

ஒரு நல்லவனின் வருத்தம்
----------------------------------------------------
குமார் ரெம்ப நல்லவன். இதை அவனே பல முறை சொல்லியிருக்கிறான்.
தினசரி கோவிலுக்குப் போவான். அவன் போகிற நேரம் பிரசாதம் கொடுப்பார்கள். அதற்காக சுண்டலுக்காகத் தான் அவன் கோவிலுக்குப் போகிறான் என்று சொல்ல முடியாது.

அலுவலகத்தில் கடைசியாகக் கிளம்புவது அவன்தான். வேலையில் ரெம்ப சோம்பேறி என்று சிலர் சொல்வதையும் நம்பக் கூடாது. அவனது நேரம் பாரா உழைப்பைப் பாராட்ட வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.

விளையாட்டில் மிகவும் ஆர்வம் உள்ளவன். தொலைக் காட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கிறானே  , அழுகை சீரியல்களின் இடைவேளைகளில்.

மனைவி சொல்லை மீறுவதே கிடையாது. அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே நழுவி விடுவான். கேட்டால்தானே மீறுவதற்கு.

குழந்தைகளிடம் பாசம் அதிகம். வாங்கி வரும் நொறுக்குத் தீனிகளை அவர்களிடம் அப்படியே கொடுத்து விடுவான். எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் போது அவனது கை அளவுக்கும் வேகத்திற்கும் முக்கால் வாசி பலகாரம் அவன் வாய்க்குள் போவதை எப்படி தவிர்க்க முடியும்.

நண்பர்களுக்காக உயிரையும் கொடுப்பான். அவன் உயிர் மேல் அவர்களுக்கு விருப்பம் இல்லாததால் கொடுப்பதில்லை.  மற்றபடி அவர்களிடம் வாங்கிய கடனையும் திருப்பிக் கொடுப்பதில்லை. நண்பர்கள் அவனை மறக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக.

ஊருக்கு நல்லது செய்வதில் முதல் ஆள் அவன்தான். ஒருமுறை அவன் காலில் குத்திய முள்ளைப் பிடுங்கி தூரத்தில் எறிந்தவன், ரோட்டில் கிடந்த முள்ளை மக்கள் நலத்திற்காக எடுத்து வீசியதை அடிக்கடி சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வான்  .

மொத்தத்தில் குமார் ஒரு முழுமையான நல்லவன். இது உங்களுக்குப் புரிகிறது. எல்லோருக்கும் ஏன் தெரிய வில்லை என்பதுதான் அவன் வருத்தம்.
--------------------------------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக