ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

வேம்பின் கசப்பு

வேம்பின் கசப்பு (பாக்யா - ஜூலை 2 -2004)
------------------------------------------------------
ஆட்டுக்காலால் நசுங்கவிருந்த
என்னைக் காப்பாற்றினாய்
மண்ணை குழைத்துப் பிடித்து
என்னை நிமிர்த்தி விட்டாய்
வீட்டுப் பாத்திரம் கழுவிய நீரை
எனக்குப் பாய்ச்சச் சொன்னாய்
இளந்தளிராய் முளைத்து வந்த
என் பச்சை இலைகளைப் பார்த்து பரவசப்பட்டாய்
என் குழந்தை பருவம்
அத்தோடு முடிந்தது
நான் வளர வளர
என் குச்சிகளை ஒடித்து பல் துலக்கினாய்
பசுந்தளிரைப் பறித்து
ஆட்டுக்குட்டிக்குக் கொடுத்தாய்
அம்மை போட்ட உன் பிள்ளைக்கு
என் இலையால் உயிர் கொடுத்தாய்
ஒரு நாள் என் நிழலில் நாற்காலி போட்டு
என்னை விலை பேசினாய்
இன்று என் கிளைகளில்
கோடரி விழுவதை பார்த்துக் கொண்டு
நிற்கிறாய் மரமாக
--------------------- நாகேந்திர பாரதி -
----------------------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. மரம் வெட்டும் வலி பற்றி நல்லா எழுதி இருக்கீங்க. அதுவும் தண்ணீர் வற்றி வருங்காலம் கஷ்டப்படும்னு நினைத்தால் ரொம்ப வேதனையா இருக்கு. நம்மூர்ல நில நீர் அதிகமா பயன்படுது. நாம செய்யறதெல்லாம் வருங்கால சமுதாயத்துக்கு துரோகம். இதை மாற்றனும்.

    பதிலளிநீக்கு