கோழிக் குஞ்சுகள் - கவிதை
--------------------------------
தவுட்டுப் பானைக்குள்
நாங்கள்
தவழ்ந்து வந்த நாள்
உன்
இறக்கைச் சூட்டில்
இளகிய ஓட்டை
உடைத்து வந்த நாள்
இரவுக்குள்
உன் சிறகுக்குள்
நாங்கள் மூக்கை மட்டும் நீட்டி
முழித்து முழித்துத் தூங்குவதை
நீ
தூங்காமல் ரசித்திருப்பாய்
நீ
'கெக்கே ' கெக்கே ' என்றால்
உணவுண்ண அழைப்பு
'கேக்கேக் ' 'கேக்கேக் ' என்றால்
பகையென்ற எச்சரிக்கை
உன்
கால்களின்
வேகக் கிண்டலில்
எங்கள்
விருந்து எழும்பி வரும்
நாங்கள்
பிட்டம் ஆட்டி ஓடி வருவதை
பெருமையுடன் பார்ப்பாய்
நாங்களும்
எங்கள் பிஞ்சுக் கால்களால்
'விறுவிறு ' என்றால்
விருந்து மறைந்து போகும்
நீ
கொத்திக் கொடுப்பாய்
நாங்கள்
கத்திச் சிரிப்போம்
அந்தக்
கழுகின் நிழலுக்கோ
உன் இறக்கை விரியும்
கால்கள் எழும்பும்
கழுத்து உயரும்
இப்படி எங்களை
பொத்திப் பொத்தி வளர்த்தவளே
அது எப்படி ?
நாங்கள் வளர்ந்த பின்னாலே
எங்களைக்
கொத்தி கொத்தி விரட்டுகிறாய்
நாங்கள்
தனியாக வாழ்ந்து பார்க்க
தள்ளி வைக்கிறாயா
தாங்கவில்லை அம்மா ,
உன் இறகு மடிக்கு
இரவெல்லாம்
ஏங்குகிறோம்
---------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமையான வரிகள்...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு