செவ்வாய், 14 நவம்பர், 2023

சூரியத் துணை - கவிதை

 சூரியத் துணை - கவிதை 

———————-

வாசல் சாணத்தின்

வாசம் எழுப்பி விடும்

கோலப் பொடிப் பொட்டு

கோட்டுக்குக் காத்திருக்கும்


கிழித்த தேதிச் சீட்டில்

குவித்த ‘கோபால் ’ பொடி

பஞ்சாயத்து ரேடியோ

பாட்டு மிதந்து வரும்


காலைக் கடனுக்குக்

கண்மாய்க் கரை வழுக்கும்

மண்டியிட்டு முக்குளிக்க

மண்டித் தண்ணீ உண்டு


திரும்பி வரும்போது

மஞ்சள் வெளிச்சம்

தெருவுப் புழுதி

மிதந்து மேல் ஒட்டும்


தேங்காய் எண்ணெய்

திரளும் தலையில்

அழுத்தி வாரி

வலிக்கும் சீப்பு


சூடான இட்லிக்கு

சுருக்கென்று துவையல்

வாசம் வரும் முன்னே

காப்பி வரும் பின்னே


அரை டிராயரும்

மஞ்சள் பையும்

தூக்குச் சட்டிச் சோறும்

தொட்டுக் கொள்ள ஊறுகாயும்


வாத்தியார் பயத்தோடு

வயக்காட்டில் போகும்போது

சிகப்புச் சூரியனும்

சேர்ந்து துணைக்கு வரும்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...