கட்டைச் சுவர் வீடு - கவிதை
—————————
பழைய சோத்து வாசம் போல்
பழைய வீட்டு ஞாபகங்கள்
கண்மாய்த் தண்ணீ கொண்டு வந்து நிரப்பிய
நடு முத்தப் பெரிய அண்டா
முத்தமண்ணுத் தோட்டப் பந்தலில்
கல்லுக்கட்டி விட்ட பிஞ்சுப் புடலை
பின்வீட்டுப் பெரியம்மாவோடு
கொல்லைப் புறக் கொடுக்கல் வாங்கல்
விறகு அடுப்பில் ஊதாங்குழலோடு
ஊதி ஊதி சமைத்த அடுப்பங்கரை
தரையோடு அமுங்கிய ஆட்டுக்கல்லில்
கையால் தள்ளித் தள்ளி ஆட்டிய இட்டிலி மாவு
வாராவாரம் சாணி மெழுகி
வழுவழுப்பான மண்ணுத் தரை
சாயந்திரம் திண்ணைப் புரணி
பக்கத்து வீட்டுப் பெருசுகளோடு
இப்போது நாலு கட்டைச் சுவராக
தனியாக நிற்கிறது பழைய வீடு
———நாகேந்திர பாரதி
My Poems/Stories Books in Tamil and English
ம்... அவை தானே பொற்காலம்...
பதிலளிநீக்கு