ஓடும் உறவு - கவிதை
-------------------------------------
அந்தப் போர்ட்டரிடம்
கூடிய நேரம்
செலவிட்டிருக்க வேண்டாம்
ஸ்டேஷன் குழாயில்
அத்தனை பாட்டில்களிலும்
தண்ணீர்
நிரப்பியிருக்க வேண்டாம்
புத்தகக் கடையில்
புரட்டிப் புரட்டிப் பார்த்து
வாங்கியிருக்க வேண்டாம்
ஒட்டிய லிஸ்டில்
திரும்பத் திரும்பப் பெயர்களைச்
சரி பார்த்திருக்க வேண்டாம்
சீட்டடியில் தள்ளிய சாமான்களுக்குப்
போட்ட பூட்டுகளை
இழுத்து இழுத்துப்
பார்த்திருக்க வேண்டாம்
இங்குமங்கும் ஓடிய பையனை
இழுத்து வைத்துப் புத்திமதி
சொல்லி இருக்க வேண்டாம்
பக்கத்து சீட்டுப் பயணியிடம்
சொந்த ஊர், போகும் ஊர்
சொல்லிக் கொண்டு
இருந்திருக்க வேண்டாம்
வந்து கொண்டே இருந்த
வடை இட்லி பார்சல்களை
வாங்கி வாங்கிப் போட்டுக் கொண்டு
இருந்திருக்க வேண்டாம்
'சடக் ' கென்று கிளம்பி விட்ட ரயிலில்
ஜன்னலோரம் கையசைக்கும் போதுதான்
'திடுக்' கென்று தெரிகிறது
தொலை தூரம் சென்ற பின்பு
'எப்போ வருவேனோ ' என்று
கவலையுடன் கையசைத்த
அப்பாவின் கைகளைப்
பிடித்துக் கொஞ்சம்
ஆறுதல் சொல்லியிருக்கலாம்
------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை...
பதிலளிநீக்கு