திங்கள், 6 நவம்பர், 2023

கல்யாணக் கோலம் - கவிதை

 கல்யாணக் கோலம் - கவிதை 

———————---------------——

மண்டபத்து வாசலில்

கழற்றிப் போடும் புதுச் செருப்புக்கு

சில அடையாள நினைவுகள்


வரவேற்பு , சந்தனத்திற்கு

கல்யாண வீட்டாரின்

பொறுக்கியெடுத்த அழகிகள்


போவது அழகிப் போட்டிக்கா

திருமண வரவேற்புக்கா

புரியாத சிலரின் அலங்கோலம்


வந்து வரவேற்கட்டும் என்று

விறைப்பாகச் சென்றமரும்

ஓர நாற்காலிப் பேர்வழிகள்


இதுமாதிரி இடங்களில் மட்டும்

சொந்தம் என்று தெரிய வரும்

சில தூரத்துப் பச்சைகள்


அட்சதையைக் கையை விட்டு

அய்யர் மேல் எறிகின்ற

உச்ச ஸ்தாயி நேரங்கள்


அப்புறம் போகலாமே என்றபடி

தானாக நகர்கின்ற

பந்திக் கால்கள்


மற்றவர்கள் மொய்க்கணக்கை

நோட்டம் இட்டபடி

நீட்டுகின்ற நோட்டு


லட்டா தேங்காயா என்று

தடவிப் பார்த்தபடி

வாங்குகின்ற பைகள்


கல்யாணப் புரணியைத்

தனை மறந்து பேசியபடி

திரும்புகின்ற பயணம்


வீட்டுக்கு வந்தபின்தான் தெரிகிறது

போட்டுவந்த பழைய செருப்பு

வேறு யாருடையதோ என்று


————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


2 கருத்துகள்:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...