சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு
-------------------------------------------
நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே
ஏ ஏ ஹெச் கே கோரி அவர்களின் மிடில் பெர்த் மாதவன் சிறுகதையின் முடிவு படிப்பவர்கள் மனதை நிச்சயம் இளக்கி விடும். . கதாநாயகன் நாற்பத்தொன்பது வயது வரை திருமணம் செய்யாமல், நோயாளி அம்மா, இரண்டு தங்கைகளைப் பார்த்துக் கொண்டு, கல்லூரிக் காலக் காதலியை நினைத்துக் கொண்டு வாழ்பவன் .
பிள்ளைப் பிராயத்தில் ,ஒரு முறை பழைய' வானொலி ' பத்திரிகையில் பார்த்து பிடித்துப் போன மங்களூருக்கு எல் டி சி யில் சென்று வந்தவன் திரும்பி வரும்போது அங்கே பார்த்த ஒரு பள்ளிக்கூடத்தின் பெயர் அவனது காதலியின் பெயராக இருக்க அதைப் பார்ப்பதற்கென்றே அடுத்த நவம்பர் பதினைந்து அன்று அவளது பிறந்த நாளன்று அந்த ஸ்கூல் போர்டில் இருக்கும் அவளது பெயரைப் பார்ப்பதற்கென்றே வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மங்களூர் செல்கிறான். போய் விட்டுத் திரும்பி வந்து மறுநாள் கொலைப்பசியோடு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுகிறான் . அங்கே நடக்கும் ஒரு நெகிழ்வான நிகழ்வோடு கதை முடிகிறது
அவன் மங்களூர் சென்று திரும்பி வரும் ரெயில் பயண விபரங்கள் , நம்மில் பலருக்கு அனுபவமாக இருக்கலாம். வெயிட்டிங் லிஸ்டில் பெயர் இருக்க , டிடிஆர் பின்னாலே அலைவது , கீழ் பெர்த் கிடைத்தவர்கள் சந்தோசம் அடைவது , ஆனால் , வயதானவர்களுக்காக ஒவ்வொருமுறையும் அதைத் தியாகம் செய்து மிட்டில் பெர்த்தில் படுத்து அந்த சேன் ட்வீச் பெர்த்தில் கஷ்டப்படுறது இப்படி.
ஆனால் இந்த கதாநாயகன் கொஞ்சம் வித்தியாசமானவன் . கொஞ்சம் என்ன ரெம்பவே வித்தியாசமானவன் . மிட்டில் பெர்த் வேணும்னே கேட்டே அப்ளை பண்ணி வாங்கிறவன் . பழைய காதலி பேர் இருக்கிறதுங்கிறதுக்காகவே அந்தப் பேர் உள்ள போர்ட் உள்ள ஸ்கூல் போர்ட்டைப் பார்க்கிறதுக்காகவே மங்களூர் போகிறவன். அதில் ஏதோ ஒரு சந்தோசம் அந்த நாற்பத்தொன்பது வயது வாலிபனுக்கு. வித்தியாசமாகத் தெரிந்தாலும் அவன் மேல் பரிதாபம் வரத்தான் செய்கிறது.
காதலியின் கெர்சீப்பைப் பாதுகாத்து வைத்திருப்போர், காதலியின் புகைப்படத்தை தலையணையில் வைத்திருப்போர் என்று பல தீவிர காதலர்கள் வரிசையிலே இவனும் ஒருவன். காதல் என்றாலே ஒருவித பைத்தியக்காரத்தனம் இருக்கும் தானே. அதுவும் இவன் மிடில் க்ளாஸ் வர்க்கத்தில் இருக்கும் மிடில் க்ளாஸ் மாதவன், மிடில் பெர்த் மாதவனாக இருக்கும் சங்கரநாராயணன். கதையின் ஒரு இடத்தில் ஆசிரியர் வேண்டுமென்றே இவனது ஒரிஜினல் பெயரைப் போட்டு நம்மைச் சோதனை செய்து பார்க்கிறார். ஆரம்பத்திலேயே அவர் எச்சரிக்கை செய்திருந்ததால் நாம் அதை மிடில் பெர்த் மாதவன் என்றே சொல்லி வாசித்தோம். நம்மையும் அவனோடு சேர்த்து ஒரு வித்தியாசமான பைத்தியகாரனாக ஆக்கிப் பார்ப்பதில் ஆசிரியருக்கு ஒரு வித சந்தோசம் போலும் இருந்து விட்டுப் போகட்டும். அடுத்து கதைக்குள் போகலாம்.
கதையின் ஆரம்பத்தில் அவன் வேலை பார்க்கும் இடத்தில் மேனேஜரிடம் நடக்கும் உரையாடலில் நகைச்சுவை கலந்து வருகிறது . இவன் லீவு கேட்டு அதை வேண்டுமென்றே டிலே செய்து சாங்க்ஷன் செய்யும் மேனேஜரும் நாம் பார்த்துள்ள மேனேஜர்தானே. மெங்களூரில் இறங்கி அந்த நாள் முழுக்க அந்தப் பள்ளிக்கூட ஸ்கூல் போர்டையே திரும்பித் திரும்பிப் போய்ப் பார்த்து வருகிறான். அவன் காதலின் தீவிரமும் அந்தக் காதல் தோல்வியும் நமக்கு உறைக்கும் இடம் அது. காதல் படுத்தும் பாடு. அந்தத் திருப்தியோடு அன்று மாலையே ரெயிலில் சென்னை திரும்புகிறான். இப்போது வெயிட்டிங் லிஸ்ட் . மனோரமா பத்திரிகை வாங்கிக் கொண்டு ரெயிலில் கீழேயே விரித்துப் படுக்க ரெடியாகிறான்.
ஆபீஸ் திரும்பி வேலைக்குச் சேர்ந்த பின் , அவனது சாப்பாட்டுப் பழக்கம் பற்றிய வருணனை. லாஸ் ஆப் பே ஆகி சம்பளம் குறைய , ஊருக்கு அம்மா, தங்கைக்கு அனுப்பிய பணம் போக மீதியை மூன்று வேளை சாப்பாடை இரண்டு வேளை ஆக்கி, அதையும் ஒரு வேளை ஆக்க யோசிக்கும் சங்கடத்தில்., பசியின் வருணனைகள் அச்சு அசல்.
அந்த ஹோட்டலில் அளவுச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு வயிற்றுக்குப் பத்தாமல் , அடுத்த டேபிளில் சாப்பிட்டவன் , பாதி வைத்துவிட்டுப் போகும் சாப்பாட்டை, நேரம் பார்த்து எடுக்க ஆசையோடு பார்க்க , அதே நேரம் அதை பக்கெட்டில் தள்ளிப் போகும் கிளீனர் பையன், இவன் கை கழுவப் போகும் இடத்தில் , அந்த கிளீனர் பையன் , அந்த எச்சில் சோற்றை ஆசையோடு அள்ளிச் சாப்பிடும் பசியைப் பார்த்து பரிதாபப் பட்டு அவனைக் கட்டி அணைக்கும் இடத்தில் , அவனுக்கு ஐம்பது ரூபாய் இவன் கொடுத்து விட்டுப் போகும் இடத்தில் எழுத்தாளர் நம்மைக் கண் கலங்க வைத்து விடுகிறார்.
ஆரம்பத்தில் இருந்தே அந்த நாயகனின் வித்தியாசமான நடவடிக்கைகளோடு நம்மைப் பயணப் படுத்த வைத்தவர் , கடைசியில் தன்னைப் போன்றே ஆனால் தன்னை விட மோசமான நிலையில் இருக்கும் அந்த கிளீனர் பையன் நிலையைப் பார்த்து அவனைக் கட்டி அணைக்கும் இடத்தில் நாயகனின் மனித நேயம் வெளிப்படுகிறது .
பொதுவாக நாம் படிக்கும் கதைகள் முடிவில் நம் மனதில் நல்ல உணர்வுகளை ஏற்படுத்தினால், அது வரவேற்க வேண்டிய கதை தானே. அந்த முறையில் , ஆரம்பத்தில் நகைச்சுவையோடு ஆரம்பித்து , அவனைப் பற்றிய சஸ்பென்சுகளை ஒவ்வொன்றாக விட்டு பிறகு அவற்றை ஒவ்வொன்றாக அவிழ்த்து , அவனின் காதல் சோகம், குடும்ப சோகம் இவற்றில் நம்மையும் மூழ்க வைத்து , அவனது ரெயில் பயண அனுபவத்தில் , நாம் பலரும் அனுபவித்த விஷயங்களை இணைத்து , கதையோடு ஒன்ற வைத்து , பிறகு அவனது பசியை நமக்கு உணர்த்தி , அந்தப் பசியிலும் அவனுக்கு கிளீனர் பையனிடம் ஏற்பட்ட அந்த இளகிய அன்பைக் காட்டி முடிக்கும் போது , ஒரு முழுமையான சிறுகதையைப் படித்த திருப்தி ஏற்படுகிறது .
இவரது கதைகள் , அடிக்கடி விகடன் போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகும் காரணம் தெரிகிறது . இதைக் காதல் கதை என்பதா, சோகக் கதை என்பதா, குடும்பக் கதை என்பதா, அன்பின் கதை என்பதா. அத்தனையும் இணைந்த ஒரு அருமைக் கதை , எளிமைக் கதை என்றே சொல்லலாம். நன்றி. வணக்கம்.
-------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
விமர்சனம் நன்று...
பதிலளிநீக்கு