செவ்வாய், 31 அக்டோபர், 2023

யசோதா கிருஷ்ணன் - சிறுகதை

 யசோதா கிருஷ்ணன் - சிறுகதை 

--------------------------------------------


கோபமாக இருந்த யசோதையைச் சமாதானப் படுத்தும் குரலில் சொன்னான் கண்ணன் , இடுப்பில் இருந்தபடி .


'ஏம்மா இவ்வளவு கோவமா இருக்க, நான் மண்ணு தின்ன போதும் சரி, வெண்ண திருடுன போதும் சரி திட்டுவ , அப்புறம் கொஞ்சுவே . ஆனா இப்ப ஏன் இன்னமும் கோபம் தணியாம இருக்கே. 'சுட்டிப் பையா, செல்லக் கண்ணா' ன்னு ஏன் கொஞ்சாம இருக்கே '.


'ஓ பக்கத்து வீட்டு பாட்டியை நான் 'அம்மா'ன்னு கூப்பிட்டது உனக்குப் பொறுக்கலையாம்மா . நீ தாம்மா என் செல்லம்மா, பட்டு அம்மா. இதுக்காக எல்லாம் இப்படி கோவிச்சுக்கலாமா , கண்கள் ரெண்டையும் போட்டு இப்படி முழிச்சிகிட்டு இருந்தா எனக்குப் பயமா இருக்கும்மா . இடுப்பிலே தூக்கி வெச்சிருந்தா போதுமா செல்லம் கொஞ்ச வேணாமா ' என்று கெஞ்சிய கண்ணனிடம் அதற்கு மேல் கோபத்தைக் காட்ட முடியவில்லை யசோதைக்கு.


' அது என்னமோ தெரியலேடா , நான் மட்டும் தான் உனக்கு அம்மா, வேற யாரையும் நீ அம்மான்னு கூப்பிட்டாலே எனக்குப் பொறுக்கலைடா செல்லக் கண்ணா, எங்கே நீ என்னை விட்டுட்டுப் போயிடுவியோன்னு பயமா இருக்குடா ' ' என்றபடி அவனைத் தூக்கி அவன் நெற்றி, மூக்கு, கன்னம் எல்லாம் முத்தம் இட்டுச் செல்லம் கொஞ்சினாள் யசோதா .


'அது சரி , ஒரேயடியா கோச்சுக்கிறது , இல்லே, ஒரேயடியா செல்லம் கொஞ்சுறது, இதுதான் உன் வாடிக்கையாய் போச்சும்மா ' என்ற செல்லமாகச் சிணுங்கிய கண்ணன் , ' போதும் இறக்கிவிடும்மா, உனக்குக் கை வலிக்கும். உன் மடியில் படுத்துகிறேன் . அதுதான் எனக்குச் சுகம் . நீ என்னைத் தட்டித் தட்டித் தூங்க வை, சரியா . எனக்கு தூக்கம் வருது' என்று சொன்ன கண்ணனை இறக்கி விட்டு தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள் யசோதை.


' இப்பதான் என் செல்ல அம்மாவோட மூக்கிலே இருந்து கோபம் போயிட்டு அழகா இருக்கு ' என்று கண்ணன் சொல்வதைப் பெருமையோடு கேட்டபடி , அவனைப் பக்கத்தில் படுக்கப் போட்டு தூங்க வைத்தாள். அவளும் சிறிது நேரத்தில் தூங்க ,தூக்கத்தில் ஒரு கனவு. அவள் கனவில் ஒரு அருமையான காட்சி . கண்ணனின் கல்யாணக் கோலம் .


' கண்ணா, நீ பெரியவனாய் உன்னை எப்பத்தான் இந்த மாதிரி கல்யாண கோலத்தில் நான் பாக்கப் போறேனோ ' என்று நினைத்துக் கொண்டே இருந்தாள் . அப்போது திடீரென்று கனவுக்குள் கண்ணன் வந்து சொன்னான். ' அம்மா அது அடுத்த பிறவியில்தான் நடக்கும் ' என்று சொல்லி மறைந்து விட்டான். திடுக்கிட்டு விழித்தாள் யசோதை . பக்கத்தில் அவளைக் கட்டிப்பிடித்தபடி படுத்திருந்த கண்ணனின் முகத்தில் மாயப் புன்னகை.


-----------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...