ஒலிம்பிக்'காத ஓட்டம் - கவிதை
-----------------------------------------------------
வரப்புக் சகதியில்
வழுக்காமல் தாவித்தாவி
கண்மாய்க் கரையைச்
சேர்ந்து கொண்டிருக்கிறான்
கண்மாய்த் தண்ணீரில்
இக்கரைக்கும் அக்கரைக்கும்
போட்டி போட்டு
நீந்திக் கொண்டிருக்கிறான்
ஓடிப்போன மாட்டை
வேற் கம்பை விட்டெறிந்து
விரட்டிப் பிடித்து
வந்து கொண்டிருக்கிறான்
குறிபார்த்து பளிங்கு விட்டு
முக்குட்டை வலிக்க விட்டு
கோலிக்குண்டு ஆட்டம்
ஆடிக் கொண்டிருக்கிறான்
ஒத்தையடிப் பாதையிலே
பக்கத்தூருப் பள்ளிக்கு
தூக்குச் சட்டியோடு
ஓடிக் கொண்டிருக்கிறான்
பந்தயத்து வீரர்களைக்
கிராமத்தில் விட்டு விட்டு
ஒலிம்பிக் தீபம் மட்டும்
தூக்கிக் கொண்டு ஓடுகிறோம்
----------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
வேதனை
பதிலளிநீக்கு