செவ்வாய், 3 அக்டோபர், 2023

நேர்காணல் - சிறுகதை

 நேர்காணல் - சிறுகதை 

--------------------------------------------------------

' அடுத்தது குப்புசாமி அண்ணே, நீங்க போங்க' அறைக்குள் நுழைந்த குப்புசாமியை ஏசி குளிர் தாக்கியது . எதிரே ,வட்ட மேஜையைச் சுற்றிக் கட்சித் தலைவர், செயலாளர் ,பொருளாளர் மூவர், மேஜை மேல் குறிப்பெ டுக்க பேப்பர் பேனா. குப்புசாமியைப் பற்றிய பைல் மூன்று பிரதிகள் மூவரிடமும் . குப்புசாமி 'வணக்கம் 'சொல்லி அமர்ந்தார்.


பொருளாளர், குப்புசாமி பைலைப் பார்த்துப் படித்தார். 'பெயர் குப்புசாமி, வயது 40, 3 வருடம் கவுன்சிலர், கட்சியில் சேர்ந்து 10 வருடம் ஆகிறது, தலைவரைக் கைது செய்த போது போராட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் ஆறு மாசம் .குடும்பம் , மனைவி இரண்டு மகன்கள் ,பத்தாவது, எட்டாவது, சொந்தக் கிராமம் மணல்குடி.. அதை விட்டு சென்னை வந்து 15 வருடம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் மளிகைக் கடைப் பையனாக. இப்போது சிறிய மளிகைக் கடை வைத்திருக்கிறார் உள்ளூரில் . மனைவி பார்த்துக் கொள்கிறார். இவர் முழு நேர கட்சித் தொண்டு.' நிமிர்ந்தார் பொருளாளர்.


' சொல்லுங்க குப்புசாமி இந்தப் பாராளுமன்ற தேர்தலில் நிற்கிறதுக்கு உங்களுக்கு எப்படி தோணுச்சு.'


'மூணு வருடம் கவுன்சிலராக இருந்த அனுபவம் இருக்கு அண்ணே. மக்கள் பிரச்சனைகளை பற்றி நேரடி அனுபவம் இருக்கு. இதோடு பாராளுமன்றம் போனா கட்சி சார்பாக மக்கள் குறைகளை எடுத்துச் சொல்லலாம் .அது மத்திய சர்க்கார் மூலமாக மாநில சர்க்கார் உதவியாக வந்து சேரலாம்.'


' ஏன் அதை அடுத்த சட்டசபை எலக்சன்லே நின்னு சாதிக்க முடியாதா'.


'அதுக்கு இன்னுமும் ரெண்டு வருஷம் இருக்குண்ணே .அதுக்குள்ள வர்ற இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாமேன்னு '.


செயலாளர் ஆரம்பித்தார் .

'கவுன்சில் கூட்டத்தில் நீ ஒரு தடவை கூட பேசின மாதிரி தெரியல. பாராளுமன்றத்தில் போய் என்னலே பேசி சாதிக்கப் போறே.'


' இது நம்ம கட்சி கவுன்சில் கூட்டம். இங்கே பேசுறதுக்கு என்ன இருக்குண்ணே . எல்லாத்துக்கும் 'ஆமாம் 'சொல்ல வேண்டியது தானே. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியா இருக்கும். அங்கே நிச்சயம் பேசுவேன்.'


அடுத்து தலைவர் ' சரி , என்ன பேசுவே உன் ஏரியாவில் இருக்கிற பிரச்சனைகளை எடுத்து பேசு ,பார்க்கலாம் '.


குப்புசாமி 'மதிப்பிற்குரிய அங்கத்தினர்களே, எனது பாராளுமன்றத் தொகுதி எப்போதுமே வானம் பார்த்த பூமி. அங்கே விவசாயம் ஒரு வருஷம் விளைவதும் அடுத்த ரெண்டு வருஷம் விளையாமல் போவதுமாக மக்கள் பசி பட்டினியோடு வாடுகிறார்கள் .குடும்பம் குடும்பமாக அடுத்த மாவட்டத்திற்குக் குடிபெயர்கிறார்கள் .இப்படியே விட்டுவிட்டால் இந்த தொகுதியே மக்கள் இல்லாத தொகுதியாக மாறிவிடலாம்'.


' உமக்கு ஓட்டு போட ஆளே இருக்க மாட்டங்கங்கிறீரு' கிண்டல் செய்தார் பொருளாளர் .


அதைப் பொருட் படுத்தாமல் தொடர்ந்து 'இப்படிப்பட்ட விதத்தில் இருக்கும் இந்த எங்கள் தொகுதியில் ஒன்றிரெண்டு பெரிய தொழிற்சாலைகள் அமைத்தால் மக்களின் வறுமைப் பணி தீரும் .வாழ்க்கைக்கு வழி திறக்கும் . தொழிற்சாலைகள் நன்கு வளர்ந்து நாட்டிற்கும் நலம் பயக்கும். '


' என்ன தொழிற்சாலை வைக்கணும்வே ' சீண்டினார் செயலாளர்.


' அருகில் கடல் இருப்பதால் உப்புத் தொழிற்சாலை வைக்கலாம். மற்றும் நூல் தொழிற்சாலை வைக்கலாம்' என்று தொடர்ந்தார் .


'போதும் நிறுத்துவே' என்று தடுத்தார் தலைவர்.


' சரி , இப்ப எவ்வளவு டெபாசிட் கட்டுவே கட்சிக்கு'

' ரெண்டு லட்சம் கொண்டு வந்து இருக்கேன் அண்ணே'


' என்ன சொல்லுதே ,அவனவன் ரெண்டு கோடி, மூணு கோடின்னு கொண்டு வந்திருக்கான், இடத்தைக் காலி பண்ணுவே, நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு . ' என்றபடி கூல் ட்ரிங்க்ஸை உறிஞ்ச ஆரம்பித்தார் தலைவர்.


-------------------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...