ஞாயிறு, 21 மே, 2023

சிறுகதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு 

-------------------------------------------------------------------------------


முதலில் ஒரு வரியில்  மனுபாரதி அவர்களின்    இந்த 'மண் பிள்ளையார் '  கதை.

நாயகனின் பிள்ளையார் சதுர்த்தி நினைவுகளே இந்தக் கதை,


அடுத்து கதைச் சுருக்கம் .

அன்று விநாயக சதுர்த்தி. நாயகன் வேலை பார்க்கிற பெங்களூரில் இருந்து  ஒவ்வொரு வருஷமும் போற மாதிரி நேற்றே பஸ் பிடிச்சு நங்கநல்லூருக்குப் போயிருக்கணும் அவன் , போகலை. போக விரும்பலை. காரணம் , ரெண்டு வருஷத்திற்கு முன்னாலே அவன் பாட்டி இதே விநாயக சதுர்த்தி அன்னைக்குத்தான் இறந்து போனாள் . அதுக்குப் பிறகு போன வருஷம் போனப்ப , அந்த வெறுமையை அவனால் தாங்க முடியவில்லை. இந்த வருஷமும் போயி அந்த வெறுமையோட கை குலுக்க விரும்பலை ன்னு நினைச்சுக்கிட்டே அவன் நினைவு பின்னோக்கிப் போகுது.  

சின்ன வயசிலே அவன் அப்பா செஞ்ச மண் பிள்ளையார், அதுக்காக அவன் பிள்ளையார் சதுர்த்திக்கு ஒருவாரம் முன்னாடியே ஏரிக்கரை ஓரம்  போயி கொண்டு வந்த களிமண்.  ‘ மண்ணு ரப்பர் மாதிரி இழுத்த இழுப்புக்கு வளைஞ்சு கொடுக்கணும்.’  அப்பாவின் வார்த்தைகள்


அவனும் அவன் தம்பியும் அப்பாவுக்குத் தெரியாம அதைச் சுரண்டி செஞ்ச சின்னச் சின்ன  பொம்மைகள். பாட்டியும் அம்மாவும் சேர்ந்து செய்யும்  சொப்புக்  கொழுக்கொட்டை ,அப்ப பாட்டி பேசுற பேச்சு , அவளோட புருஷன், இவன் தாத்தா , அப்பாவை விட மண் பிள்ளையார் இன்னும் பிரமாதமா செய்வார் என்று பெருமை அடிச்சுக்கிறது . 

ஒரு முறை சித்தப்பா கல்யாணத்திற்காக  பாட்டி வேண்டிக்கிட்ட பிரார்த்தனை நிறைவேறி ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு செஞ்ச ஆயிரத்தெட்டு சொப்புக் கொழுக்கட்டை. அதை, ஊரெல்லாம் இவன் கொண்டு போய்க்  கொடுத்து ஊரே கொழுக்கட்டை மணந்தது . 

பிள்ளையாருக்கு கண்ணு வைக்கிறதுக்காக இவனும் இவன் தம்பியும் காத்திருந்து சேகரிக்கிற அந்தக் கொடியிலே வெடிச்சு விழற கருஞ்சிவப்பு மணி கள் . அப்பா அந்த மண் பிள்ளையாரை களிமண்ணை உருட்டிச் செய்கிற அழகு, அதுக்கு எருக்கம் பூ மாலையும் அருகம் பூ மாலையும் சூட்டறது , பக்கத்திலே , பாட்டி காலத்து மாக்கல்  பிள்ளையாரையும் சேர்த்து வச்சுக்  கும்புடறது ,  

அப்புறம் மூணாம் நாள் , மண் பிள்ளையாரை கிணத்தில் போடுறப்போ சோகமா ஆயிடுறது என்று அவர் விவரிக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியுமே  , நமக்கு நாம் கொண்டாடும் பிள்ளையார் சதுர்த்தியைக் கண் முன் கொண்டு வந்து விடுகிறது . 

தனிப்பட்ட முறையில் என் அப்பாவும் கண்மாய்க்  களிமண் எடுத்து வந்து அவரே பிள்ளையார் செய்வது வழக்கம். அந்த நினைவுகளும் வந்தன. 


இனி இந்தக் கதையில் நான் ரசித்த சில வருணனைகளைப்    பகிர்ந்து கொள்கிறேன். 


அங்கங்கே அவர் எடுத்துக் காட்டும் ஆகாய  வருணனைகள் நாயகனின் கலை உணர்வையும்  மன உணர்வையும்   எடுத்துக் காட்டுகின்றன.

தெளிவான வானத்தில் தெரிந்த நட்சத்திரப் புள்ளிகளை என் மனக்  கோடுகளால் இணைத்தேன். ஒரு பிள்ளையார் வடிவம் உருப்பெற்றது  என்று கதையின் ஆரம்பத்தில் சொல்லும் நாயகன் , கதையின் இறுதியில் . 'வானத்தை மீண்டும் வெறித்த போது இந்த முறை நட்சத்திரங்களைக் காணவில்லை. கரும்பழுப்பு மேகத்திரை வந்து எல்லாவற்றையும் மறைத்து நின்றது  என்று நினைப்பதாகக் காட்டுவதில் நாயகனின் மன நிலை மாற்றத்தை கவிதை நயத்தோடு காட்டுகிறார்  மனு  பாரதி

அடுத்து   அவன் அப்பா, அந்த மண் பிள்ளையார் செய்யும் நேர்த்தி. 


அப்பா குளித்து விட்டு ஈரத்  துண்டுடன் தாழ்வாரத்தில் வந்து அமர்ந்து செய்யத் தொடங்குவார். 

அப்பாவிற்குத் தோசைத் திருப்பியும் , ஈர்க்குச்சியும் ,கைகளும்தான் சிற்பம் வடிக்கும் உளிகள். மண்ணை நன்கு குழையப்  பிசைந்து , ஒரு செவ்வகமாகப் பிடித்து நிறுத்தி, தோசைத்திருப்பியைக் கொண்டு பின்புறத்தைச் சமன்படுத்தி , முன்புறத்தில் தேவை இல்லாத மண்ணை வெட்டி எடுத்துச் செதுக்குவார். 


முதலில் முகமும் துதிக்கையும் உருப்பெற்று , பிரதானமாய்ப் பிள்ளையார் என்று அடையாளம் காட்டும். பின் தந்தங்களும் சேர்ந்து கொள்ளும். அதற்கப்புறம் பின்புறத்தினின்று மேடாய் எழும்பும் . 

முகத்தின் மேல் கிரீடமாக மண் குவித்து  ,ஈர்க்குச்சியால் கோடுகள் வரைந்து அழகு படுத்துவார். பின்னர் தொந்தியை வடிவமைப்பார். நடு நடுவில் தண்ணீரைத் தொட்டுத் தொட்டு மேற்பரப்பில் ஒரு வழவழப்பைக் கொண்டு வருவார். இதற்குப் பிறகு கை கால்களை வடிப்பார் . அவை மட்டும் அவ்வளவு சரியாக வராது. 

   

என்று அவர் வருணிக்க வருணிக்க , நமக்கே அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்கு   களி மண் எடுத்து மண் பிள்ளையார் செய்யும் ஆசை வந்து விடுகிறது . 


இதே போல் தான், பாட்டியும் அம்மாவும் செய்யும்  பூரணம் வைத்த சொப்புக் கொழுக்கட்டை  செய் முறையும்  , பிள்ளையார் சதுர்த்தி பூஜை செய்யும் முறையும். நீங்களே படித்து ரசியுங்கள். 


இந்த விசேஷத்திற்கு நடுவே அவர் எடுத்துக் காட்டும்  அண்ணன்  தம்பி சிறுபிள்ளைச் சண்டை, குறும்புகள், பாட்டியின் கண்டிப்பு , தாத்தாவின் வறுமை , காலணா வள்ளிக்கிழங்கும் காட்டிலே பறிச்ச கீரையுமா  ரெம்ப நாள் ஓட்டி யிருக்கோ ம் என்று பாட்டி சொல்வது , அப்பாவின் அன்பு , சித்தப்பா கல்யாண வேண்டுதல் என்று அந்தக் குடும்பத்தின் எளிமையையும் , பாசத்தையும்  , நெருக்கத்தையும் நமக்குப் பல நிகழ்ச்சிகள் மூலம்  உணர்த்துகிறார். அதனால் தான், கதையின் முடிவில் அவரின்  இந்த வரிகளைப்  படிக்கும் போது நம் கண்களும் கலங்குகின்றன. 


துரதிருஷ்ட வசமாக , என் அப்பா செய்து வந்த அந்த ஒரே கலைப் படைப்பிற்கும் , களி மண் தேடலுக்கும் ,  எப்பொழுது அந்த கருஞ்சிவப்பு மணிகள் வெடிக்கும் என்ற காத்திருப்பிற்கும் , பாட்டி செய்யும் கொழுக்கட்டைச் சொப்புகளுக்கும் , என் மண் பொம்மைகளுக்கு மொத்தமாக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது . இரண்டு வருடம் முந்தைய விநாயக சதுர்த்தி அன்று காலையில் என் பாட்டி காலமாகி விட்டாள் . இனி வருடா வருடம் அவளுக்குக் கருப்பு எள்ளும் , உருண்டைச் சாதமும் படைத்துச் செய்யும் திவசம் தான். 


இந்த ராத்திரிப் பொழுதில் இன்று தெரியும் இந்த வலி , காலப் போக்கில் மூன்றாம் நாள் கிணற்றில் போட்ட பிள்ளையாராய்க் கரைந்து விடும் என்று ஏனோ  தோன்ற அதிர்ந்தேன்.


நன்றி வணக்கம் 


------------------------------------நாகேந்திர பாரதி 

 

My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...