திங்கள், 8 மே, 2023

நாவல் மதிப்புரைக் கட்டுரை - குவிகம் நிகழ்வு

 நாவல் மதிப்புரைக்  கட்டுரை  - குவிகம் நிகழ்வு 

----------------------------------------------------------------------------------

நமது நண்பர் ராய செல்லப்பா அவர்களின்  ' அனிதா யமுனா மஞ்சரி ' நாவலின் 126 கிண்டில் பக்கங்களையும்  ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். அவ்வளவு விறுவிறுப்புடன் கூடிய சஸ்பென்ஸ் பேமிலி ட்ராமா.

 

கொரானா கால கட்டத்தின் பின்னணியில் அனிதா யமுனா மஞ்சரி என்ற மூன்று  பெண்களையும் அவர்களின் துணைவர்களையும் சுற்றிப் பின்னப்பட்ட இந்தக் கதையில் ஒரு நெக்லஸ் திருடு போகிறது. அதைத் திருடியவர் யார் என்ற சஸ்பென்ஸை விறுவிறுப்பான திருப்பங்களுடன் கொண்டு போகிறார் ஆசிரியர். இது இவரது முதல் சஸ்பென்ஸ் நாவல் என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அப்படித் தெரியவில்லை. அனுபவம் மிக்க சஸ்பென்ஸ் எழுத்தாளராகவே இந்தக் கதை அவரை முன்னிறுத்துகிறது .

 

யமுனா செல்வம் தம்பதியினர் ஒரு நடுத்தரத் தம்பதியர் . அனிதா, ராஜா  அடித்தளத் தம்பதியர். யமுனாவின் நெக்லஸ் திருட்டுப் போகிறது.  அதை அணிந்திருக்கும், வேலைக்காரி அனிதா மேல் விழுகிறது சந்தேகம். அதைக் கொடுத்திருப்பது , யமுனாவின் கணவன் செல்வமாக இருக்கலாம் என்று ஒரு முடிச்சு. இதை அடுத்து வருகின்ற கதாபாத்திரங்கள் ஆன அனிதாவின் கணவன்  ராஜா, கல்லூரிக் காதலர்கள் மஞ்சரி , சந்திரன் , பக்கத்து வீட்டு ஆச்சியம்மா என்று அனைவர் மேலும் அந்தத் திருட்டுச் சந்தேகம் விழும்படியாக தொடரும் நிகழ்ச்சிகள்,  திருட்டைக் கண்டுபிடிக்க வரும் இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் என்று தொடர்ந்து  இறுதியில் அவற்றை ஒவ்வொன்றாக விடுவித்து , அந்தத் திருட்டின் புதிரை முழுமையாக ஆசிரியர்  அவிழ்க்கும் போது ஆசிரியரின் எழுத்துத் திறமையை வியக்கிறோம். . அவற்றை எல்லாம் நீங்கள் புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

 

நான் இந்தக் கதையில் மிகவும் ரசித்த இளமை துள்ளும் சில காட்சிகளையும் ராய செல்லப்பா அவர்களுக்கே உரிய கிண்டல் கலந்த நகைச்சுவைக்  காட்சிகளை மட்டும் இங்கே கோடி காட்டுகிறேன்.

 

முதலில்,யமுனா , செல்வம் தம்பதியரின் முதல் இரவுக்  காட்சி . பதினெட்டு டிக்ரீக்கு குளிரூட்டப் பட்ட அந்த அறையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது . அனுபவம் புதுமை என்பதால் தயக்கமும் பயமும் இருந்தது . முகத்தில் நாணம் பொங்கிக் கொண்டிருந்தது. அலங்கரிக்கப் பட்ட கட்டிலின் ஓரத்தில் , விஷமப் புன்னகையுடன் நின்றிருந்தான் செல்வம். எவ்வளவு சினிமாக்களில் பார்த்திருக்கிறாள். இந்தக் கல்லுளி மங்கன் சும்மா சிரித்துக் கொண்டு நிற்கிறானே . அதே நிமிடத்தில் விளக்கு அணைக்கப்பட்டது . செல்வத்தின் கைகள் அவளை வேகமாகப் பற்றி இழுத்துக் கட்டிலில் போட்டன .'மேடம் , முதல் இரவில் முதன் முதலில் செய்ய வேண்டிய காரியம் என்ன தெரியுமா' என்று கேட்டான். தெரியாது  என்று கண்களால் சொன்னாள் அவள். அவள் செய்ய வேண்டியதை ரகசியமாக அவள் காதுகளில் சொன்னான். அதே கணத்தில் அறையில் இருந்த சிறிய விளக்கும் அணைந்து போனது.

போதும். இன்னும் இரண்டு பாராக்கள் இருக்கின்றன . அந்த இளமை விளையாட்டை நீங்கள் கதையைப் படித்து ரசியுங்கள்.

 

. அடுத்து இவரின் கிண்டல் கலந்த நகைச்சுவை வசனங்கள், அங்கங்கே இடியாப்பத்தில் தேங்காய்ப் பூ தூவியது போல் பல இடங்களில் .

அவற்றில் சில

' கொரோனா சமயத்தில் , பிரசவ ஆஸ்பத்திரிக்குப் போனாளாம் ஒருத்தி. குழந்தை மாஸ்க்குடனே வெளி வந்ததாம். '

'மார்வாடியின் பெயர் நீளமாக இருந்தது. அதன் பாதி ' பாரஸ்மல் ' என்றது.' .

என்று இன்னும் பல.

 

கதையில் பல இடங்களில் அடிக்கடி  ஒருவருக்கொருவர் காபி , தேனீர் கொடுத்து பருகிக் கொள்கிறார்கள். கதையின் விறுவிறுப்பில் நாமும் அவற்றைக் குடித்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள முடியும் வகையில் அவை அமைந்திருக்கின்றன.

 

காரக்டெர் பெயர்களையே அத்தியாயத் தலைப்புகளாக வைத்திருப்பதும் ஒரு புதுமை.  அந்தந்த அத்தியாயங்களில் அந்தக் காரக்ட்டர்களின் குண நலன் வெளிப்படும் விதத்தில் கொண்டு செல்வதும் விறுவிறுப்புக்கு உதவுகிறது .

 

மற்றும் கொரோனா பிரச்னைகள், ஒர்க் பிரம் ஹோம் , ஆஸ்பத்திரி அக்கிரமங்கள், போலீசின்  மாற்று முகம்  , குப்பைகளைப் பிரித்துப் போடுவது, யூனியன் பிரச்னை., மரங்களை வெட்டிப் போடுவது , பாம்பு பிடிப்போர் செய்யும் ஏமாற்று வேலை , அபார்ட்மெண்ட் அஸோஸியேஷன் பிரச்சனைகள்  என்று பல சமுதாயப் பிரச்னைகளையும் நாசூக்காகச் சொல்லிப் போகிறார். இவற்றையெல்லாம் கதையில் வரும் பல காரக்டர்களோடு இணைத்துக் கொண்டு செல்வது ஆசிரியரின் தனித்திறமை.

 

கடைசியில் ரெண்டு பாம்புப் பிடாரன்களைக் கதையில் கொண்டு வரும்போது இந்த காரக்டர்கள் கதைக்குத் தேவையா என்ற  சந்தேகம் எழுகிறது . ஆனால் அதையும் ஆசிரியர் கிளைமாக்ஸில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு கதையின் முக்கிய காரக்டர்களைக் கொண்டு வந்து கிளைமாக்ஸ் நோக்கி  நகர்த்துவதற்கு உபயோகப் படுத்திக்  கொள்வது ஆசிரியரின் தனித்திறமை.

 

கதையைத் துணுக்குத் துணுக்காக நான் சொல்லியுள்ளதன் காரணம் உங்களுக்குக் கதையின் சஸ்பென்ஸ் தெரிந்து விடக்  கூடாது என்பதற்குத் தான். அந்தக் காலத்தில் ' அதே கண்கள் ' என்ற திரைப்படம் வெளிவந்தபோது  , பார்த்தவர்கள் தயவு செய்து கதையின் முடிவை யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்று தினத்தந்தியில் அடிக்கடி விளம்பரம வரும்.   அதே காரணம் தான்  எனக்கும். நீங்களே படித்து ரசிக்க வேண்டும் என்பதற்குத்தான்.

 

மொத்தத்தில் சஸ்பென்ஸ் கலந்த குடுமபக் கதை . இறுதியில் யார் மேலும் குற்றம் சொல்ல முடியாதபடி முடிவைக் கொண்டு சென்று இருப்பது , ஆசிரியரின் எழுத்துத் திறமைக்குச் சான்று.

 

நான் அமேசான்  கிண்டில் கணக்கு வைத்திருப்பதால்,  இந்தப் புத்தகத்தை நான் கிண்டில் வெர்சினில் படித்தேன். இதன் பிரிண்ட் காபியும்  -குவிகம் ------- பதிப்பக வெளியீடாக , ---108----- பக்கங்களில்,  ----நூறு ரூபாய் --------- விலைக்குக் கிடைக்கிறது. மேல் விபரங்களுக்கு நண்பர் ராய செல்லப்பா அவர்களையோ, குவிகம் பதிப்பகத்தையோ  தொடர்பு கொள்ளலாம். நன்றி

 

--------------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...