செவ்வாய், 23 மே, 2023

நூலக வீடு -மர்மக் கதை

 நூலக வீடு -மர்மக் கதை 

———---------------------------—-

அது கோடம்பாக்கத்தில் யுனைடெட் இந்தியா காலனியில்  உள்ள வீடு . அதில் ஒரு சிறிய லைப்ரரி உள்ளது . அவர் வாங்கிக் குவித்த புத்தகங்கள் எல்லாம் அங்கே அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன . தினசரி மாலை அங்கு வந்து அந்தப் புத்தக அலமாரிக்கு நடுவே சேரைப் போட்டு அமர்ந்து ஒரு மணி நேரம் சில புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து வைத்து விட்டுப் போவது அவர் வழக்கம் .

படிக்கிறாரோ இல்லையோ , தமிழ் , ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் உள்ள கதை , கவிதை , கட்டுரை என்று வாங்கிக் குவித்து விடுவார் . பெரிய புத்தகக் கடைகள் மட்டும் அல்ல , ரோட்டோர பழைய புத்தகக் கடைகளில் உள்ள சில அரிய புத்தகங்களையும் வாங்கி வருவார் .

சமீப காலமாக அவர் சில சீனப் புத்தகங்களையும் , லத்தீன் மொழிப் புத்தகங்களையும் அதே மொழியிலே எழுதப் பட்டவற்றையும் வாங்கி வந்துள்ளார் . அந்த மொழியைக் கற்றுக் கொண்டு அதிலேயே படிக்க வேண்டும் , அப்போதுதான் அதன் சாரம் புரியும் என்பது அவர் கருத்து . இதற்காக ‘முப்பது நாட்களில் சீனம் , லத்தீன் ‘ என்ற பாலாஜி பதிப்பக புத்தகங்கள் வாங்கி வந்துள்ளார் .

ஏற்கனவே இது போன்ற ‘ முப்பது நாட்களில்… ‘ புத்தகங்களுக்கென்று ஒரு தனி அலமாரி அங்கே இருக்கிறது என்பதை நேயர்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம் . இதற்காக அவர் பென்ஷன் தொகையில் பாதி அளவு மாதா மாதம் செலவிட்டு வருகிறார் .

அவரிடம் மற்றும் ஒரு ஒரு நல்ல பழக்கம் உள்ளது . அவர் பலமுறை படித்துக் கிழித்த சில பழைய புத்தகங்களை நண்பர்களிடம் இலவசமாகக் கொடுத்து விட்டு அந்த விபரத்தை தனது பேஸ் புக் பக்கத்தில் போட்டு பல நண்பர்களுக்கு தெரியப்படுத்துவது உண்டு .

துவ்சாகி என்ற ரஷிய எழுத்தாளர் எழுதிய ‘ ஒரு மூர்ச்சை கடந்த முக மூட்டி ‘ என்ற அரிய கவிதைப் புத்தகம் இந்தியாவில் அவரிடம் மட்டுமே இருப்பதாகவும் ஒரு வருடத்திற்கு முன்பு அவர் வாங்கிய அந்தப் புத்தகத்தை அடுத்த வருடம் அவர் படிக்க இருப்பதாகவும் சொல்லி , அதை ஓசியில் படிக்கக் கேட்பவர்க்குக் கொடுக்காமல் ஒரு அலமாரியில் இருண்ட மூலையில் ஒளித்து வைத்துள்ளார் . இதில் முக்கியச் செய்தி ,அந்த லைப்ரரியின் உள்ளே வருவதற்கு அவர் யாரையும் இதுவரை அனுமதிக்கவில்லை .

ஒரு நாள் அவர் திருச்சி சென்று , அங்குள்ள பழைய புத்தகக் கடையில் தேடி. வழக்கம் போல் சில அரிய புத்தகங்களை வாங்கி வந்து சென்னை திரும்பியவுடன் , தனது ஸ்கூட்டரின் பின்பக்கம் ஏற்றி வைத்து அந்த லைப்ரரி வீட்டுக்குச் சென்றார் . ஸ்கூட்டரை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றார் . அவர் ஸ்கூட்டருக்கும் படிப்பதில் ஆர்வம் உண்டு . ஆனால் அவர் கூப்பிடாததால் அது உள்ளே செல்லவில்லை . ஆனால் இது பழகி விட்டதால் தனது வருத்தத்தை அது எப்போதும் வெளிப்படுத்துவதில்லை, பெட்ரோல் காலியாகும் சமயங்கள் தவிர .

உள்ளே சென்றவர் இந்தப் புத்தகங்களை எல்லாம் அழகாக அடுக்கி வைத்து விட்டு ஒரு அலமாரியின் இருண்ட மூலைக்குச் சென்று தான் ஒளித்து வைத்திருந்த ‘ ஒரு மூர்ச்சை கடந்த முக மூட்டி ‘ படிக்க ஆசைப்பட்டு அந்தப் புத்தகத்தைத் தேடினார் . அது அங்கே இல்லை .

——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...