‘பிகு ‘ மழை - சிறுகதை
—————------------------------—-
பதினோறாயிரம் பேர் பங்கு பெற்று கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்த பிகு டான்ஸில் பங்கு பெற்ற மகிழ்ச்சியிலும் களைப்பிலும் அன்றுதான் தம் கிராமத்திற்குத் திரும்பி இருந்தனர் சுனைனா குழுவினர் . கிராமப் பெரியவர்கள் அன்று மாலை ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிலும் அவர்கள் பிகு நடனம் ஆட வேண்டும் என்பது அன்புக் கட்டளை . கவுஹாத்தியில் தொடர்ந்து ஒரு வாரம் பயிற்சியில் அனைவருடன் சேர்ந்து ஆடி ஆடிக் களைத்திருந்த கால்களும் கைகளும் கெஞ்சின சுனைனாவிற்கு . ஆனால் சொந்த ஊரின் பாராட்டு விழாவில் ஆடா விட்டால் எப்படி .
கூட ஆட இருக்கும் குழுவினரை அழைத்துப் பேசி ஒரு ஏற்பாடு செய்து கொண்டாள் . பதினைந்து நிமிட ஆட்டத்தை ஐந்து நிமிடங்களில் சுருக்க ஒத்துக் கொண்டனர் .மேளம் அடிக்கும் வீருக்கு மட்டும் அதில் இஷ்டம் இல்லை . கவுகாத்தியில் காட்டிய அதே பதினைந்து நிமிட வேக அடியும் ஆட்டமும் இங்கும் நடந்தால் தான் ஏய்த்துக் கொண்டிருக்கும் மழை பெய்து கிராமம் செழிக்கும் என்று அவன் எவ்வளவோ சொல்லியும் சுனைனா ஒத்துக்கொள்ள வில்லை .
மாலை நேரம் வந்தது . பாராட்டு முடிந்ததும் பிகு டான்ஸ் ஆரம்பம் . அந்தக் கிராமிய நடனத்திற்கே உரிய சிவப்பு உடைகளோடு சுனைனா உட்பட அனைவரும் வர , வீரின் இடுப்பில் மாட்டிய மேளத்தின் ஒலி வீறு கொண்டு எழுந்தது . உள்ளங்கை வெளியே தெரியும் படி இடுப்பில் கை வைத்தபடி மெல்லிய அசைவுகளோடு ஆட்டத்தை ஆரம்பித்தன சுனைனாவின் செந்நிறப் பாதங்களும் , திருப்பிய உள்ளங்கைகளும் . இளமை குலுங்கும் இடுப்பின் அங்கங்களோடு , பொட்டு வைத்த முகத்தின் பூரணப் பொலிவோடு , சுழல ஆரம்பித்தாள் சுனைனா மரத்தைச் சுற்றி . கூடவே தோழிகளும் தொடர , ஆட்டம் வேகம் பிடிக்க ஆரம்பித்தது .
மேளத்தின் ஒலியின் வேகம் இடியின் ஒலியாக முழங்க இடுப்பின் அசைவோடு துள்ளிக் குதித்தாடும் பெண்களின் கைகளும் கால்களும் இயங்கும் வேகத்தில் கிராமத்து மண்ணும் தூசி பரப்பி உற்சாகம் கொண்டது . அந்த மரத்தைச் சுற்றி சுற்றி வந்து அவர்கள் ஆடிய ஆட்டத்தில் நேரம் மறந்தது அவர்களுக்கு .
ஐந்து நிமிடம் கழிந்தும் வீரின் மேள ஒலி குறையாமல் உச்சம் உச்சம் தொட்டு ஏறிக் கொண்டே போனது . அந்த இசையின் இயக்கத்தில் ஆட்டப்பட்ட பொம்மையாக தன்னிலை மறந்து துள்ளிக் குதித்து விறுவிறுப்பின் உச்சத்தில் சுனைனாவின் இளமை இடுப்பசைவு. அதற்கு ஈடு கொடுக்க முடியா விட்டாலும் அவளைத் தொடர்ந்து திறந்த உள்ளங்கையின் பின்புறம் இடுப்பில் வைத்து , நடுங்க ஆடும் குழுவோடு சேர்ந்து ஆடத் தொடங்கினர் கிராமத்து இளையோர் அனைவரும் .
வீரின் மேள ஒலி விண்ணை முட்ட ,இடி இடித்து வானம் பொத்துக்கொண்டு சோவென்று இறங்கிய மழையில் கிராம பெரியோர் அனைவரும் குலவை சப்தமிட்டு ‘ இது செழிப்பை வரவழைத்த பிகு டான்ஸின் பெருமை ‘ என்று உரக்கக் குரல் எழுப்ப , கொஞ்சம் கொஞ்சமாக மேளத்தின் வேகத்தைக் குறைத்த படி சுனைனாவை நெருங்கிய வீரு ‘ கோபமா ‘ என்றான் .
செழிப்பைக் கொண்டு வரும் பாரம்பரிய பிகு டான்ஸின் பெருமையை உணர்த்தி , மழையைக் கொண்டு வந்த மகிழ்ச்சியில் தன் உடல் வலியும் மறந்து ‘ உனக்கு இருக்கு இன்னிக்கு ராத்திரிக்கு ‘ என்று சிணுங்கினாள் சுனைனா . ‘ காத்திருக்கிறேன் அடியேன் ‘ என்று மேள ஒலியை மெதுவாக நிறுத்தினான் வீரு .
———-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
முடிவில் மகிழ்ச்சி அருமை...
பதிலளிநீக்கு